சனி, 13 அக்டோபர், 2018

அகலியை ( அகலிகை )

அகலியையின்  வரலாறு நம்மைச் சிந்திக்க வைப்பதாகிறது,

இதைப்பற்றிச்  சில எழுதியுள்ளோம்.

கீழ்க்கண்ட இடுகையையும் படித்து இன்புறுவீராக.

https://bishyamala.wordpress.com/2018/10/13/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தம் சம்; தம் தா:> சந்தா.

சந்தா என்ற சொல் நம் பழைய நூல்களில் இருந்து கண்டால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இச்சொல் வழக்கிலுண்மை உணரப்பட்டது போலும். பதினெட்டாம் நூற்றாண்டுக்குமுன் இச்சொல் வழங்கிய நூல்கள் கிடைக்கவில்லை,

சம் என்பது சேர்தல் குறிக்கும் சொல்.

தான் தன் தாம் தம் என்ற தமிழ்ச் சொற்களை நினைவு கூரவேண்டும்.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் தாம் தம் என்பவற்றைச் தற்சுட்டாகப் பயன்படுத்துவர்.  இரண்டு தான் ஒரு தாம்; இரண்டு தன் ஒரு தம். என்று சற்று நெகிழ்பாணியில் குறிக்கலாம்.

தம் என்பது பின் சொற்களைப் பிறப்பிக்க -  சம் என்று திரிந்தது,  பின் அது எச்1 என்1 காய்ச்சல்போல் அயலிடங்களையும் தாவிக் கால் பதித்தது.

ஆகவே தம் என்பது சேர்ந்திருத்தல் சேர்ந்த காலத்து உரிமையாய் இருத்தல் என்று பொருள்தரும்.  எடுத்துக்காட்டு:  தம் கொள்கைகள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாயிருக்கையில் உருவான கொள்கைகள் என்பது பொருள்.

ஒரு இயக்கித்திலோ கூட்டுறவு அமைப்பிலோ சேர்ந்துவிட்டால்  மாதம் தோறும் பணம் கேட்பர். இது உறுப்பினர் கட்டணம்.எனப்படும்.  தம் என்பது சம் என்று திரிந்தது,  தா வென்பது கொடு என்பது.  சம் தா -=  சேர்ந்ததும் தா என்பதே ஆகும். தம்மில் ஒருவர் ஆனதற்குத் தா என்பதும் சரிதான்.

தம் > சம் > சம் தா > சந்தா,

த என்பது பல சொற்களில் ச என்று மாறியுள்ளது:  எ-டு:  தங்கு > சங்கு,  மொழி இடையிலும் வரும்:  அத்தன் > அச்சன். மைத்துனன் > மைச்சுனன் > மச்சான்,

வைத்து -  வச்சு. ஐகாரம் அகரமாகவும் தகரங்கள் சகரங்களாயும் மாறின.

தம்மில் சேர்ந்தால் தா >  சம் தா > சந்தா.

தம் என்பதில் இருந்த தற்சுட்டுப் பொருண்மை  சம் என்பதில் மறைவெய்தியது சம்முக்கு நன்றாயிற்று. இம்மறைவினால் சம் முன்னிணைந்த பதங்கள் மூவிடங்களிலும் வழங்கும் விடுதலையை அடைந்தன. இஃது இவ்வாறாயினும் தமையன் தனையன் ( தனயன்) முதலிய சொற்கள் முதனிலைத் திரிபின்றியே காலவோட்டத்தில் தம் தற்சுட்டுப் பொருண்மையை இழப்பனவாயின. திரிபின்றி வழக்கில் விளைந்த பொருண்மை இதுவாகும். ஆனால் அவையும் ஐகாரக் குறுக்கத்திற்கு உட்படவேண்டியதாயின.

அடிக்குறிப்பு:

வாய்தா என்ற சொல்லும் சந்தா என்பதைப்போல் தா என்று முடிகிறது. இது அமைந்தது எப்படி?

வாய் என்பது வருவாய் அல்லது வருமானம்.  இது பணமாகவோ நெல்லாகவோ பிறவாகவோ இருக்கலாம்.   தா என்பது கட்டணமாகச் செலுத்தவேண்டியதைக் குறிக்கிறது.  இதை வாக்கியமாக்கினால் வருவாயில் ஒரு குறித்த பகுதியைத் தா என்று வந்து பொருளாகும்.  தமிழ்ப்பேராசிரியன் என்போனையும் தடுமாறச் செய்யும் இச்சொல் உணர்ந்தோர் சிலரே.  பிறமொழியாளர் இச்சொல்லை மேற்கொண்டிருப்பர்.  அதனால் அது பிறமொழிச் சொல் என்போன் "விளங்காத வெள்ளரி"  ஆவான்.  இதை உருவாக்கியவன் ஒரு சிற்றூர் ஆசிரியனாய் இருக்கவேண்டும்.  அவனுக்கு நல்ல மூளை இருந்தது தெரிகிறது.

வசந்தா என்பது பெண்பெயர்.  இது உன் மனத்தை என் வசம் தா என்று அணிவகையில் இரட்டுறலாகப் பொருள் தரலாம் எனினும் அது வசந்தம் - வசந்தி என்ற சொல்லின் விளிவடிவமே ஆகும்.  அது செலுத்தவேண்டிய கட்டணத்தைக் குறிக்கவில்லை.

அடிக்குறிப்பு:  15.10.2018ல்  சேர்க்கப்பட்டது.

புதன், 10 அக்டோபர், 2018

bhajan: பஜனை இறுதியில் அனைவரும் ட - ஜ


பஜனை என்ற சொல் மிக்க   உயர்வாக மதிக்கப்படும் சொல்லாகும்.
பக்தி மார்க்கம் எனப்படும் பற்றர்கள் நெறியில் இது ஒவ்வொரு நாளும் புழங்கும் சொல்லாகும். இறைவனின் புகழைப் பாடாத நாளில்லை என்னுமளவிற்குப் பஜன் என்ற சொல் ஓர் அன்றாடச் சொல்லாகிறது.


பஜன் என்றால் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பற்றுடையார் கூட்டம் சேர்ந்து பாடுவதே பஜன் ஆகும்.
சொல்லமைப்பில் பல சொற்கள் முதனிலை குறுகி அமைந்துள்ளன என்பதை முன்னர் இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். இப்போது சில காண்போம்.


தோண்டு >  தொண்டை
காண்  >  கண்.
சா  >  சவம்.
கூடு > குடும்பு >  குடும்பம். (கூடிவாழ்தல்)
கூம்பு :>  கும்பம். ( அடிபருத்து நுனி சிறுத்தல் )


இப்படி அமைவது ஒரு வகை என்றால் இன்னொரு வகை இதற்கு எதிர்மாறாய் இருக்கும்:   எடுத்துக்காட்டு:

குழை >  கூழ்.
படு >  பாடு. ( படுதல் வினை)
சுடு >  சூடம்,  சூடன்.
படு > பாடை.
விடு > வீடு.  (பரனை நினைந்து மூன்றும் விடல்)



பஜன் என்பது பாடுதலே. பாடு என்பதிலிருந்தே சொல் வருகிறது. நெடில் முதலானது குறில் முதலாய் மாறுகிறது. அனைவரும் பாடுவதே பஜன்; ஆதலின் அனைவரும் என்பதிலுள்ள “அனை” இங்கு விகுதியாகியுள்ளது ஓர் அழகிய அமைவே ஆகும். வேண்டுமிடத்து  அனை என்பது அன் என்று மேலும் குறுக்கம் பெற்றுள்ளது.

அன்+ ஐ என்ற இரு விகுதிகள் கூடி அனை என்று சொல்லிறுதியாகப் பல சொற்களில் தோன்றும். எடுத்துக்காட்டு:  கண்டி + அனை = கண்டனை, இப்பதத்தில் அனை என்ற இறுதிக்குத் தனிப்பொருள் கூறுதற்கில்லை  இதுவெறும் சொல்மிகுதியே.  மிகுதி  > விகுதி.  ஆனால் பஜனை என்ற சொல்லில் அனை என்பது ஒரே காலத்தில் விகுதியாகவும் அனைவரும் என்ற பொருளீவதாகவும் உள்ளது: இஃதோர் உள்ளமைந்த சிறப்பு ஆகும்,
விழுமிது இதுவாம்.


பாடு >பாடு+அன் > படன் > பஜன்.
பாடே > பஜே.
பாடு அனைவரும் >பாடு+அனை >  பாடனை > படனை - பஜனை.


பற்றர்களுக்கு (பக்தர்களுக்கு)ப் பயன்படுத்த  அமைந்த இச்சொல் மிக்க நேரிதாய் அருமையாய் அமைந்துள்ளமை காண்க.  ஒரு சொற்றொடரிலிருந்து ஒரு சொல்லைப் படைப்பதென்பது ஒரு  நல்ல தந்திரம்..  இன்று சொற்களை உருவாக்க முனைவோரும்  இது போன்ற தந்திரத்தை மேற்கொள்வார்களாக,


பாடனை படனை படன் முதலிய சொல்வடிவங்கள் பேச்சிலும் எழுத்திலும் இல்லாமலிருத்தல் பஜன் என்னும் சொல்லிற்கு நல்லது.  அவை தாத்தா பாட்டன் பூட்டன் முப்பாட்டன் போன்றவை.  எல்லாத் தாத்தாக்களும் வேலையிலிருந்திருந்தாலும் பேரன்மாருக்கெல்லாம் வேலை ஏது?


ஜான் கே என்பவர் எழுதிய இந்திய வரலாற்றில் யானை என்று பொருள்படும் கஜம் என்ற சொல் முகம் கடையப்பட்டது போன்றது என்னும் பொருளதென்று கூறுகிறார்.   அதாவது கடை > கட > கஜ, > கஜம், பொருள்: யானை.


ஆகவே பாடு > பட > பஜ என்பதைக்,   கடை > கட > கஜ என்பதோடு ஒப்பிட்டு உணரலாம். வெவ்வேறாய் ஒலிக்கும் சொற்களை  ஒருப்பட்ட வடிவங்களாக்கி ஜ முதலிய எழுத்துக்களைப் புகுத்தி அழகுபடுத்துவதே கலைத்திறனாகும்.


தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் இரு கண்கள் என்று முன்னையத் தமிழ் நூல்கள் கூறி மகிழ்வெய்தும்.  வெள்ளைக்காரன் வந்து இந்தோ ஐரோப்பிய மொழி சமஸ்கிருதம் என்றும் அது அயல்மொழி என்றும் ஆரியர் வந்தனர் என்றும் தெரிவியல்களை(  theories ) உருவாக்கியபின்,  இருகண்களில் ஒன்று ஐரோப்பியக் கண்ணாகவும் ஒன்று தெற்காசியக் கண்ணாகவும் மாற்றுருக்களைக் கொண்டு மகிழ்வுறுத்துகின்றன.  பானை சட்டிகளை உண்டாக்குவதுபோல தெரிவியல்கள் பலவற்றைப் படைத்து வெளியிட்டுக் கொண்டிருப்பது மேலையர் வேலையாகிவிட்டது.