ஞாயிறு, 7 அக்டோபர், 2018

இளியும் சிரியும்

இளி என்னும் சொல்லைச் சுட்டுச் சொற்களுடன் தொடர்புறுத்தி இதுபோழ்து ஆய்வுசெய்வோம்.

அடிக்கடி சிரித்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து என்ன இப்படி இளித்துக்கொண்டிருக்கிறான் என்று சிலர் கடிந்துகொள்வதுண்டு.

இளித்தல் என்பது சிரித்தல் என்றே பொருள்படுமேனும் அது இப்போதைய உலக வழக்கில் சற்று தாழ்நிலை அடைந்துவிட்டதென்று கருதலாம்.  இருந்தபோதும் அதன் பொருள் மறைவுற்றுவிட வில்லை.

இ என்பது அண்மைச் சுட்டு.  இடத்தாலும் காலத்தாலும் அண்மை உணரப்படும்.

இன்று:   இது காலத்தால் அண்மை.

இங்கு:    இது இடத்தால் அண்மை.

இரண்டிலும் முதலாய் இகரமே நிற்றல் அறிக.

இனி, இளித்தல் என்ற சொல்லில் ஒட்டிக்கொண்டிருக்கும் தாழ்வு நிலையினைக் கழற்றி அப்பால் வைத்துவிட்டு அதனை அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுசெல்வோம்.  செல்லவே,   அதனில் இரண்டு இகரங்கள் வந்திருத்தலை உணரலாம்.

இ(ள்)  + இ.

இளிக்கும்போது  (  தாழ்வான கருத்தை எடுத்துவிட்டோம், நினைவிலிருத்துக )   இங்கிருந்து இங்குவரை  உதட்டின் வெளிப்பகுதி விரிந்து சுருங்குகின்றது.   இங்கு அதாவது முதல்சொன்ன இங்கு என்பது ஓர் இறுதியையும் இரண்டாவதாய்ச் சொன்ன இங்கு  மறு இறுதியையும் குறிப்பது தெளிவு ஆகிறது.  இவ்விரு இறுதிகளையும் விரலால் சுட்டி நன் கு உணர்ந்துகொள்ளலாம்.

ஆகவே இச் சுட்டுச் சொல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரப்படும். 

உணரவே,  இச்சொல் ஒலிசெயல் காரணமாய் அமையவில்லை என்று புலப்படும்.  இடம் காரணமாகவே அமைந்துள்ளது.  ஓர் இறுதியிலிருந்து இன்னோர் இறுதிக்குச் சென்று விரிந்திருக்கும் இதழ்கள்.  இவ்விறுதி இட இறுதியாகும்.

இரண்டையும் இறுதியென்றே குறித்தோம் -  அப்படிக் குறிப்பது விளக்கத்தை எளிதாக்கும் பொருட்டு.
ஒன்றை முதலாகவும் இன்னொன்றை இறுதியாகவும் மாறிமாறி நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எமக்கு இது வெறும் சொல்லீடே அன்றி வேறில்லை. ஆதலின் இறுதி என்ற ஒருசெல்லைக் கொண்டே விளக்கினோம்.

அகர வருக்க எழுத்துக்களில் இகரமும் ஒன்று.  இவ்வருக்கதன பின் சகர வருக்கத்தனவாய்த் திரியும் என்பதனை முன்பெய்த இடுகைகளில் விளக்கியுள்ளோம்.   எடுத்துக்காட்டு:  அமண் -  சமண் என்று திரிபு கொள்ளும்.  அடு> சடு > சட்டி என்று சொல்லமையும்.  அடுதலாவது சமைத்தல்.  சடு + இ= சட்டி.

இதனியற் படி இளி என்பது சிளி என்று திரியவேண்டும்.  ஆனால் காலப்போக்கில் இவ் ளிகரமும் ரிகரமாய்த் திரிந்தது.  ளகரம் ரகரமாய் மாறும் இடனும் உண்டு.    மாள் > மார்  >  மாரகம்.  வாள் ( நீட்சி)
>  வார்  (நீட்சி ).  வருக்க எழுத்துக்களிலும் இஃது அமையும்.  ஆகவே ளி என்பது ரி ஆயிற்று.  இச்சொல்
( சிரி )  என்பது இருமடித் திரிபுடைத்தாம்.  போதுமான ஈடுபாடின்மையால் ஐயமுடையோர் எம் பற்பல இடுகைகளையும் கண்டு தெளிவடைவீராக.

இள் இ என்பவற்றில் வந்த ளகர ஒற்று யாது?      இல் என்பது ஒரு சுட்டுச்சொல்லே.  இதுவும் இகரத் தொடக்கத்ததே.  இடப்பொருளே இதன் பொருளும்.  இதுவே இள் என்று மாறி நின்று இடம் குறித்தது. இதனை ஆங்குக் கூறாமைக்குக் காரணம் குழப்பம் தவிர்க்கவேயாகும்.  ஆகவே  இல் + இ > இலி > இளி என்று அமைந்ததன் சுவடே ளகர ஒற்று ஆகும்.  லகர ஒற்று ளகர ஒற்றாய் உருமாறி இன்றளவும் உள்ளது என்பதைக் காண்க.

தொடக்கத்தில் லகரமு ளகரமு வேறுபாடின்றி இருந்தன.  இஃது மொழியின் வரலாறு ஆகும். இவ்வரலாற்றின் சுவடாக இன்னும் நம்மிடையே சில சொற்கள் இருமாதிரிகளிலும் எழுதப்பெறும் தகையனவாய் உள.  அவற்றைச் சில இலக்கண நூல்களில் கண்டும் படிக்கும்போது அறிந்தும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.  யாம் ஓர் உதாரணம் தருவோம்.   செதில் > செதிள் என்று இருவகையிலும் வருதல் கண்டுகொள்க.  காணவே இல் என்பது பண்டை இள் என்று நின்றதன் காரணம் விளக்கம் வேண்டாமலே உணரலாம். சொற்களின் தொகை பெருகவே ளகர லகர வேறுபாடுகள் வலிவுற்றன. மிகுதியான சொற்களின் தேவைக்கு இவ்வேறுபாடுகள் அரணாகின. ஆனால் சில  முன்போல் வலம் வந்தன. இவற்றைப் போலி என்ற விளக்கத்தலைப்பில் வைத்து இலக்கணம் தத்து ஏற்றது.

அறிக இன்புறுக.

திருத்தம் பின்.





சனி, 6 அக்டோபர், 2018

ஐதீகம் என்ற சொல்.

இன்று  ஐதீகம் என்ற சொல்லை ஆய்வு செய்து  அதன் பொருளை நன் கு அறிந்துகொள்வோம்.

இதனை முன்னைப் பண்டிதன்மார் கண்டுரைத்தபடி நாம் கற்றறியலாம். நம் காலத்துக்கு முன்பே சொல்லப்பட்டவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டு மெனின் கற்றுத்தான் அறியமுடியும்.  இணையத்திலிருந்தே ஒரு நூல்நிலையத்திற்கு ஏகாமல் இதை இக்காலத்தில் அறியலாமாகையால் அதை ஈண்டு மீட்டுரை செய்யாது விடுவோம்.

தமிழினின்று இச்சொல்லை அறிய முற்படுவோம்.

ஐ என்ற அடிச்சொல்லுக்குப் பொருள் பலவாம்.  ஐயன் என்ற சொல்லில் அது தலைமை,  வழிகாட்டும் திறனுடைமை என்று உயர்பொருளைத் தருகிறது. தமையனார் என்ற சொல்லில் தம்+ஐயன் என்று பிரிவெய்தி,  " தன் தலைவன் "  (ஒருமை பன்மை மயக்கம் ) ( அடிக்குறிப்பு 1 )  என்று பொருள்பட்டு அண்ணனைக் குறிக்கிறது. அண்ணனைக் குறிப்பது வழக்குப் பொருள். தலைவனைக் குறிப்பது சொல்லமைப்புப் பொருள். எம்மொழியிலும் பொருள் அவ்வப்போது சொல்லுக்குச் சொல் சற்று வேறுபடக் கூடியவை.  ஐயனார் என்ற சொல்லில் அது கும்பிடும் சாமியைக் குறிக்கிறது.  வணக்கத்துக்குரியது , அப்பால் நின்று நம்மை ஆள்வது என்றும் பொருள்தரும்.  என்னை நீ ஏன் படைத்தாய் என் ஐயனே என்ற சிற்றூர்ப் பாட்டில் அது கடவுளை நேரடியாகக் குறிக்கும். அரசனையும் குறிக்கும். என் ஐயனே என்று அவனையும் விளிக்கலாம்.  ஒரு பூசாரியையும் குறிக்கும்.  பூசாரி என்பதற்குப் பலவாறு பொருளுரைக்கப் பட்டிருந்தாலும்  பூ சார்த்துபவர் என்றும் பொருள் கூறலாம்.  பூ = மலைர;  சார்=  சார்த்துகின்ற;  இ = இவர் என்று பொருள் அழகாக வருமே. சார்த்துதல் என்பது சார்ந்திருக்குமாறு செய்தல். பிறவினை.  சார்தல்: தன்வினை;  சார்த்துதல்: பிறவினை.   சார்த்துதல் என்பது சாத்துதல் என்று தன் ரகர ஒற்றினை இழந்து  (  பல பிறமொழிகளிலும் எழுத்திலும் பேச்சிலும் இப்படி ரகரம் காணாமற் போவதும் லகரமாக மாறிவிடுவதும் காணலாம் ) வேறுசொல் போல் தோன்றும்.  ஐ என்பது வியக்கத் தக்கது என்றும் பொருள் தரும்.  ஐ = சந்தேகம் என்பதும் ஒன்று. ஐயப்பாடு என்பதில் அது வரும்.  ஐ பிச்சை எடுத்தல் என்பதும் உண்டு:   ஐயம் இட்டுண் என்பது காண்க.  ஐ என்பதுதான் அடி; மற்றவை வெறும் விகுதிகள். விகுதிகளை எறிந்துவிட்டு ஆய்வு நடத்தினால் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் உள்ள பொருளைக் கூட அறியலாம்.  விகுதிகளாவன மிகுதிகள். சொல்லை மிகுத்துப் பொருளை வேறுபடுத்தவும் செய்பவை.

இனி ஐ என்பதிலிருந்து ஆர்ய என்பதுவரை பயணித்து வரலாம்.  ஆங்கிலத்திலுள்ள ஐடியாவரை கூடப் போய்க் கருத்துகளை முன்வைக்கலாம். நாம் இத்துடன் நிறுத்துவோம். கேட்போர் உறங்காமை போற்றுவோம்.

ஐதீகம் என்பதற்குப் பொருள்

சில ஐதீகங்கள் கடைப்பிடிக்கப்பட்ட ஞான்று அவை ஆட்சியும் வியப்பும் உடையவாய் இருந்தன. அதனால் அவை ஐதீகம் எனப்பட்டன.

ஐ:  வியப்பு, ஆளுமை. தலைமை,

து :  உடைமை குறிக்கும் அஃறிணை விகுதி.

ஈ:   கீழோருக்குத் தருதல். ஈதல்.

கு:   உருபு இங்கு இடைநிலையாய் வருகிறது

அம்:  சொல்லாக்க விகுதி.

முடிபு:

கீழோர் போற்றுதலும் வியத்தகு ஆளுமையும் உடையவாகத் தரப்படும்  ஒரு
கடைப்பிடிப்பு.

ஆட்சி அல்லது ஆளுமை:  கடைப்பிடித்தே தீரவேண்டுமென்னும் கட்டாயம்  மக்கள்பால் அதிகாரமுடையோரால் ( ஊரதிகாரிகள் ஆகலாம்)   திணிக்கப்படும் நிலை.

இதில் அகப்படாத அறிவாளிகளால் வியக்கப்படுதல் வியப்பு எனப்பட்டது.


அடிக்குறிப்பு:

1.  தம் ஐயன் என்பது ஒருமை பன்மை இரண்டும் தவறாகக் கலந்தனபோல் தோன்றும் சொல். தம் என்பது பன்மை.  ஐயன் என்பது ஒருமை.  தன் ஐயன் என்று வந்திருந்தால் இலக்கணியர் மகிழ்வர்.  ஆனால் தன் ஐயன் என்பது தன் - ஒருமை ஐயன் - ஒருமை ஆகவே ஒப்ப முடிந்ததென்றாலும், தனையன் என்று அமைந்து  தனயன் என்று பின் திரிந்து மகனைக் குறித்தது.  இது தமையன் என்பதிலிருந்து மாறுபாடு ஆகிறது.  இவ்வாறு சொற்கள் மாறுபாடாகி  அமைந்தவெல்லாம் தமிழில்லை என்று ஒதுக்கிவிடுதல் மடமை ஆகும்.  இது இலக்கண நெறி பின்பற்றியோர் அமைத்த சொல்லன்று.  ஊர்மக்கள் பேச்சில் உருவான சொல் என்பதே உண்மை. வழுவமைதி என்று சொல்லி ஏற்கலாம். இதற்கு இவ்வொருமை பன்மை இலக்கணம் இயைபுறாது  என்று விடுப்பதே சரி.  மொழியை ஆக்கி வாழ்விப்போர் மக்களே. மக்கள் நல்வாழ்வினால் பிற்காலத்து உருவானவர்களே புலவர். இலக்கணம் சொல்லாக்கத்தில் செல்லுவதன்று.

ஐயன் என்ற சொல் உறவு முறைகளில் அண்ணனையும் .  இங்கு தனைய னையும் குறித்துள்ளமை இதன்மூலம் தெளிவாகிறது.

தனயன் என்பதை இனித் தன்+ அயன்  என.றும் சொல்வதுண்டு.  தன்+ அ + அன். அ என்ற இடைவரவு,  சுட்டு ஆகும்.  தனையன் என்பது தனயன் என்று திரிந்தது என்பது இதனினும் நன்றான விளக்கம் ஆகும்.

அயல் என்ற சொல்லில் யகர உடம் படு  மெய் வருதல் அறிக.  இங்கு  அங்கு  அப்புறம் இங்கும் அங்கும் அல்லாத இடம் அயல் . இதை உணர்க.

திருத்தம் பின்








வெள்ளி, 5 அக்டோபர், 2018

வக்கரித்தல்

வக்கரித்தல் என்ற சொல் பேச்சு வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. எங்காவது வழங்கிக்கொண்டிருக்கக் கூடும். அதன் பேச்சுவழக்கு சுருங்கிவிட்டது என்பது சரியாகவிருக்கும்.

ஆனால் அது சோதிடத்தில் (கணியக் கலையில்) வழக்குப் பெற்றுள்ளது.  சனிக்கோள் வக்கிரமாய் உள்ளது என்று சோதிடர்கள் சொல்வர்.  வக்கிரம் யாதென்று அறிவோம்.

ஒவ்வொரு கோளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு ஓர் இராசி வீட்டில் தங்கும். பின் அது அடுத்த இராசி வீட்டுக்குப் போய்விடும்.  இப்படிப் போன கோள்  மீண்டும் வந்து விட்டுப்போன வீட்டில் தங்கினால் அதற்கு வக்கரித்தல் என்பர்.
வக்கரித்தலாவது திரும்பி வந்திருத்தல். வக்கரித்தல் முடிந்த பின்பு அக்கோள் மீண்டும் போய்விடும். இஃது இயற்கை நிகழ்வை ஒட்டியே சோதிடத்தில் கூறப்படுகிறது.

இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் கூறுவோம்:

வரு+ கு +  அரு + இ + தல்
=வருக்கரித்தல்
=வக்கரித்தல்.

இதில் கவனிக்க வேண்டியவை:

வரு என்பது வ என்று திரியும்.    வருவான் (  எ.கா)  :  வந்தான் ( இ.கா). ரு என்னும் எழுத்து கெடும் அல்லது வீழும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் இடைநிலை. இது தமிழில் ஒரு வேற்றுமை உருபுமாகும்.

அரு என்பது அருகு என்பதன் அடிச்சொல்.  அருகில்  என்ற சொல்லை நினைவு கூர்க.   அரு> அரி.   அருகில் வரல்,
 நெருங்குதல். 

ஒன்றன் அருகில் சென்று இழுத்து எடுத்தலும் அரித்தல் எனப்படும்.  செடிகொடிகளை அரித்தெடுத்தல் போல.

இங்கு அது அருகில்வரல் என்ற பொருளில் வருகிறது,

ஆகவே இதன் பொருள்  வந்து நெருங்குதல்.  அதாவது திரும்பிவந்து நெருங்குதல்.

இனி வக்கரி + அம் =  வக்கரம்.  இகரம் வினையாக்க விகுதி, கெட்டது.  அம் விகுதி புணர்த்தப்பட்டது. இது பின் வக்கிரம் என்று திரிந்தது.

சனி முதலியவை திரும்ப வந்து தொல்லை தருமாதலால் அரித்தல் என்ற வழக்குச் சொல்லாகக் கொண்டு பொருள் கூறினும் பொருந்துவதே.

வக்கரம்  என்பது பிற்காலத்து வக்ரம் என்றும் எழுதப்பெற்றது.  இது அயல் சென்றதால் ஏற்பட்ட ஒலித்திரிபு. பின் தமிழுக்குத் திரும்பி வந்த நிலையில் வக்ரம் > வக்கிரம் என்று இகரம் புகுந்து மாறிற்று.

வக்கரம் என்ற ஆதி அமைப்புச் சொல் வழக்கொழிந்தது .

இச்சொல்லுக்கு அடியாய் நின்றது வரு > வ என்பதே ஆகும்,

திருத்தம் பின்பு
இஃது 9.3.2019ல் மறுபார்வை பெற்றது. பிழைகள்
எவையும் காணப்படவில்லை.  கள்ளப்புகவர்களால்
(கள்ளத் தனமாகப் புகுந்து எழுத்து சொற்கள் முதலிய மாற்றிக்
கெடுப்போரால் ) புதிய பிழைகள் புகுத்தப்படின் பின் திருத்தப்படும்,
பின்னூட்டம் செய்து நீங்களும் தெரிவிக்கலாம் )