வியாழன், 30 ஆகஸ்ட், 2018

வாபஸ் எப்படிப் பரவியது?

வாபஸ் : இந்தச் சொல் தமிழர் எல்லோரும் அறிந்தது.  பெரும்பாலான தமிழ்நாட்டு வாசிகள் உருது மொழியைப் பேசவில்லை. இவர்கள் முஸ்லிம் அரசு அதிகாரிகளுடன் எத்தகைய தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் அறியோம். முஸ்லிம் அரசு நடைபெறாத தமிழ் நாட்டின் பல பகுதிகள் இருந்தனபோல் தெரிகிறது. இத்தகைய சொற்கள் எப்படி வேகமாகப் பரவி எல்லாத் தமிழ்நாட்டு மக்களும் அறியுமளவிற்கு விரிந்தது என்பது தெரியவில்லை.

அந்தக் காலத்தில் எதையேனும் செய்துவிட்டு அடிக்கடி வாபஸ் பெற்றுக்கொண்டு இருந்தனர் போலும். இல்லையேல் வாபஸ் எப்படிப் பரவிற்று? முஸ்லிம் மக்கள் ஏனையோருடன் பேசும்போதிலெல்லாம் இதைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனரோ? வாபசுக்கு உரியதாய் இருந்தது எது?

எப்படியோ வாபஸ் என்ற சொல் நன்`கு பரவிவிட்டது.  காளமேகப் புலவர் இருந்திருந்தால் வாபஸ் என்பதைப் பிரித்து  பஸ் என்னும் பேருந்தை வாவென்று அழைப்பதுபோல் எந்தக் கவியாவது எழுதியிருப்பாரோ என்னவோ?

தமிழ்வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட எத்தனையோ புதிய சொற்கள் வழக்குக்கு வராமலே கிடக்க, வாபஸ் மட்டும் வெற்றிநடை போட்டுள்ளதே!

இவை இருக்கட்டும்.   இப்போது இச்சொல்லின் அமைப்பை அறிவோம்.

எதையும் பின்வாங்கப் பெறுதலையே வாபஸ் என்ற சொல் குறிக்கிறது.

பெறுதல் என்பதில் பெறு என்பதை வடவெழுத்துக்கள் எனப்படும் அயல் ஒலி எழுத்துக்களை வைத்து மறு அமைப்புச்செய்வதானால்:

பெறு > பெஸ் என்று புனையவேண்டும்.

று என்பதை மெருகேற்ற எப்போதும்  ஸ் அல்லது ஷ் பயன்பட்டுள்ளது.


எடுத்துக்காட்டு:  இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். 
இறைவர் > இஸ்வர் > ஈஸ்வர் > ஈஸ்வரன்.

ற வுக்கும் அதன் வருக்கத்துக்கும் ஷ் அல்லது ஸ் வரவேண்டும்.
று வுக்கும் ஸ் போடவேண்டும்.

பெறு > பெஸ்.

பின்வாங்கு என்பதில் வாங்கு என்பதை வைத்துக்கொண்டால்:
இதற்கு ஓர் எழுத்துப் போதுமானது. அது  -வா-  என்பது.

வா+ பெஸ்  என்று இரண்டையும் இணைத்தால்  வாபெஸ் ஆகும். இதில் பெஸ் என்பது பஸ் என்றிருத்தலே சொல்லுக்கு எளிமை கூட்டும். இனிமையும் இருக்கும்.

வாபெஸ் >  வாபஸ்  ஆகிறது.
எகரம் அகரமாவது இயல்பே.

பின் என்பதை எப்படி விடலாம்?  அதையும் இணைத்தால்

பிவாபஸ்:  இது சரியில்லை. பி என்னும் பின் என்பதன் முதலெழுத்தை நீக்கி விடுதலே சரி.  பிவாபஸ் என்பது நீண்டதுடன் ஒலித்தடையும் உண்டுபண்ணும்.

வாபஸ்.

ஓர் உருதுச்சொல் உருவெடுக்கிறது.

உருவெடுத்த சொற்கள் இருந்தாலே உருது அமையும்.

வருவாயில் தா என்பதற்கு வாய்தா போல.

மிக்க மகிழ்ச்சி.

எல்லாமும் தமிழ் தானா? இது வெறியன்றோ ?

தமிழே இல்லாத கோடிக்கணக்கான சொற்கள் உலகிலே உண்டு.  அவற்றை நாம் தமிழ் என்றுசொல்லவில்லை.  எடுத்துக்காட்டு: மேகன்மார்க்கல். இதில் தமிழ் எதுவும் இல்லை.

----------------------------

இச்சொல் முன் வாபீசு என்றும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றுஇவ்வடிவம் வழங்கவில்லை.


புதன், 29 ஆகஸ்ட், 2018

ரோகம் தமிழா?

ரோகம் -  தமிழா?

வாசித்து மகிழ்க.  இங்கு சொடுக்கவும்,


https://bishyamala.wordpress.com

https://bishyamala.wordpress.com/2018/08/30/

நியாயம் ஞாயம் எதிர்மறை ?

ஞாயம் என்ற சொல் தமிழ்மொழியில் சிற்றூர்களிலும் வழங்குவதாகும். தமிழ் கற்பிப்போர் இது நியாயம் என்ற சொல்லின் பேச்சுத் திரிபு என்று கூறுவர். 

இப்படிச் சொல்வதே சரி என்று பட்டால் இவ்வாறே கொள்ளலாம் அதனால் ஆவதொரு நட்டமில்லை. எது எதன் திரிபாக இருந்தாலென்ன என்று விட்டுவிடலாம்.

நியாயம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் இல்லை என்று சொல்கிறார்கள். எனவே அது தமிழிலிருந்து புறப்பட்ட சொல் என்று கொள்ளவேண்டியுள்ளது. சில ஆசிரியர்கள் நியாயம் என்பதன் பகுதி நில் என்பதே என்றனர். அதாவது அவர்கள் கூறுவது:  எது நிற்கும் திறமுடைத்தோ அது நியாயம். எது நில்லாதோ அது நியாயம் அன்று என்பது. உண்மை காண்பதற்குக் கூடிப் பேசுவோர் எதை ஏற்பரோ அதுவே நியாயம் அஃதல்லாதது நியாயம் அன்று என்றே விளக்குவதற்குரியதாகிறது. இவற்றில் எதுவும் நியாயத்தின் உள்ளீடு எது என்பதைத் தெரிவிக்கவில்லை.

சொற்கள் ஏற்படும்போது இதுபோலும் வரையறைகளைக் கண்டபின் ஏற்படுவதில்லை ஆதலால் நாம் இதை முன்வைக்கத் தேவையில்லை. மேலும் பேச்சு வழக்கில் உண்டான சொற்களில் புலவர் திறத்தை அறிய முற்படுவதும் ஏற்புடைத்து என்று கொள்வதற்கில்லை.

பேச்சில் இன்னும் இச்சொல் ஞாயம் என்றே வழங்குகிறது.   எழுதுவோர்தாம் நியாயம் என்று சொல்கின்றனர்.

நியாயம் என்பதன் எதிர்மறை அநியாயம். ஞாயம் என்பதற்கும் அதுவே எதிர்மறையாகக் கொள்ளப்படுகின்றது.

மூலச்சொல் ஞாயம் என்பதே என்று வைத்துக்கொண்டால் அதன் எதிர்மறை அன்ஞாயம் என்பதே சரியென்று தோன்றுகிறது.  அன் என்பதும் அல் என்பதன் திரிபாக எதிர்மறை முன்னொட்டு ஆக வல்லது.  மொழி -  அன்மொழி ( அன்மொழித்தொகை )  என்ற இலக்கணக் குறியீட்டைக் காண்க..

மேலும் ஞாயம் என்பதும் ஞயம் என்பதன் திரிபாகக் கொள்ளவேண்டும்.  இது நயம் நல்லது என்பதன் பொருளும் ஆகும்.  ஆதலின் ஞாயம் எதிர்மறை அன் ஞாயம் என்பதே பொருத்தமுடைத்தாகிறது,



 இரண்டுமே சிற்றூர்ச்சொற்கள்;  பொருளும் பொருத்தமாக உள்ளது,

அன்ஞாயம் (பேச்சு மொழிச் சொல் ) என்பதே பிற்காலத்து "அநியாயம்" என்று மறுபிறவி எடுத்துள்ளது  என்பது தெளிவு.  மூலச் சொற்கள் ஞாயம் -  அன்ஞாயம் என்பனவே .

நில் என்பதன் அடியாகத் தோன்றியதே நியாயம் என்று முடிப்பது நன்`கு சிந்திக்கப்பட்டதே என்றாலும் பேசுவோரின் கற்பனைக்கு ஏற்ப ஞாயம் மாறுவதுடைத்து என்பதை அது மேற்கொள்வதாகிறது . ஆனால் ஞாயம் என்ற சிற்றுரார் அமைத்த வடிவம் நயம் என்ற மூலத்தின் அடிப்பிறந்து நலம் உடையதே ஞாயம் என்று உள்ளீடு  காட்டிச் சொற்றிரிபுக்கும் பொருத்தம்  ஊட்டி அமைகிறது . இவ்வாறு உருவானதே  ஞாயம் என்னும் சொல். 
-------------------------------------------------------
Posting as B.I Sivamala
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss