செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

குணங்கள் ஏதுமற்ற கடவுளாகச் சிவபெருமான்

கடவுள் பற்றிப் பேசும்போது அவனைப் பற்றர்கள் பலவாறு புகழ்வதுண்டு.  அவனைத் தீன தயாபரன் என்று வருணிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.   இஃது என்னவென்றால் அவன் எளியோர்க்கு இரங்கி அன்பு காட்டுகிறவன் என்று பொருள். தயாநிதி என்றும்  காக்கும் தெய்வம் கருணாநிதி என்றும் புகழ்வதும்  பெருவரவுடைய வருணனையாகும். பொதுமக்களும் ஆண்டவனே படியளக்கிறான் என்றும் சொல்வது யாவரும் அறிந்ததே ஆகும்.

கருணை தெய்வம், கற்பகம், பொற்பதமுடையான், எனப் பற்பல வருணனைகள்.

இறைவனை இங்ஙனம் புகழ்ந்துரைப்பது பிற மதங்களிலும் பெரும்பான்மை ஆகும்.

எண்குணத்தான் என்று திருக்குறள் கூறுகிறது. எண்குணம் எனில் எட்டுக் குணங்கள் என்பது ஓர் உரை;  எளிய குணங்கள் என்பது இன்னொரு சார் உரையாகும்;

ஆனால் நம் முன்னோருள் ஒரு சாரார் இறைவனுக்கு எந்தக் குணங்களும் இல்லை என்ற கொள்கை உடையோராய் இருந்தனர்.   நல்லதென்பதும் இல்லை; கெட்டதென்பதும் இல்லை.  ஆகவே குணங்கள் அல்லது பண்புகளைக் கொண்டு அவனை அறியவும் தொழவும் முடியாது.  அவனை அடைய எந்த  அடைமொழிகளும் இல்லாமல் எவ்விதப் புகழுரையும் கூறாமல் தியானிக்க (ஊழ்குதல்)  வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர்.

அவனோ சுத்த நிர்க்குணன். குணங்கள் பண்புகள் என்ற எதுவும் அவனுக்கில்லை.

நன்`கு சிந்தித்தால் இதிலும் ஓருண்மை இருப்பது புலப்படும்.  அன்பு இரக்கம் கருணை கோபம் ஆன எல்லாமும் மனிதர்க்குரியவை.  மனிதரால் அவர்களின் நீண்ட நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. இவற்றுக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வோனுக்கும் அவளிடத்தில் கருப்பம் (கர்ப்பம்)  தங்குகிறது;  அன்புடன் திருமணம் செய்துகொண்டு  சேர்வோனுக்கும் அவ்வாறே கருப்பம் தங்குகிறது,  இவற்றில் எதற்கும் கடவுள் தடை விதிப்பதில்லை.  எது எப்படி நடந்தாலும் அவர் அப்படியேதான் இருக்கிறார்.  மனோன்மணியம் சுந்தரனார் கூறியது போல் : அவர் இருந்தபடி இருக்கிறார்.  அவரிடம் நாமறிந்த மாற்றம் யாதுமில்லை.

எப்படியும் இப்பிறவியிலிருந்து விடுபட நாம் இறைவனைத் தியானிக்க வேண்டும்,  சைவக் கொள்கைகள் பதினாறு என்பர்.  அதிலொன்று அவன் நிர்க்குணன் என்பது.  அதாவது அவனது தன்மை பண்பின்மையாகிய தூய்மையே. அதனை முன்னிறுத்தியே தியானிக்கவேண்டும்.

இதுவே நிர்க்குணசைவம் ஆகும்,  அவன் குணாதீதன் ஆவான்.

முதிர்ந்த ஞானியான தாயுமான சுவாமிகள் :  " சுத்த நிர்க்குணமான பர தெய்வமே " என்று இறைவனை விளிக்கின்றார். சிவஞான போதமும் இவ்வாறு கூறும்.

ஒருகாலத்தில் தமிழ் நாட்டில் நிர்க்குண சைவக் கோட்பாட்டினர் இருந்தனர்.
இப்போது -  தெரியவில்லை.


திங்கள், 27 ஆகஸ்ட், 2018

கேளிக்கையும் சவையலும்





இன்று கேளிக்கை என்ற சொல்லின் திரிந்தமைவு பற்றித் தெரிந்தின்புறும் நெறியில் அதற்கு இன்னொரு சொல்லையும் கண்டு மகிழ்வோம்,

கேளிக்கை என்பதன் முன்வடிவம் களிக்கை என்பதே. சில சொற்கள் அகரத் தொடக்கமாய் இருக்கும்போது மெல்லத் திரிந்து ஏகாரத் தொடக்கமாகவோ ஈகாரத் தொடக்கமாகவோ திரிந்துவிடும். இப்படித் திரிந்தமைந்த சொற்களைக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

கதம் என்ற சொல் ஒலியைக் குறிப்பது. கத்துதல் என்பது மிக்க எடுப்பாக ஒலித்தலாகும். இது கத்து > கது > கது + அம் = கதம் என்று அமையும். கத்து + அம் = கத்தம் என்று அமையாமல் ஓரெழுத்து இடைக்குறைந்த பின்னர் விகுதிபெற்றது செந்தமிழ் இயற்கை பிழைபட்டது என்று சொல்லிவிடக் கூடியதன்று. காரணம் யாதெனின் சொற்கள் இடைக்குறை யாவது தமிழிலக்கணத்தில் பண்டை நாட்களிலே கண்டுரைக்கப்பட்டுள்ளது. . மொழியில் அதற்கு இலக்கணம் இல்லாதிருந்தால் அப்படி ஒரு வேளை சொல்ல முயற்சி செய்யலாம். பெருவரவு உடையதாயின் சொல்வது கடினமாகும்.

கதம் என்பது பின் கீதம் என்று திரிந்தமைந்தது. கீதம் என்பது இனிய ஒலியைக் குறிக்கிறது. இது வழக்கில் உண்டான பொருள்விரிவு ஆகும். சொல்லின் உள்ளில் இனிமை குறிக்கும் ஏதுமில்லை. அடிப்படைப் பொருள் ஒலி என்பதுதான். கத்துதல், கீதங்கள், பாட்டுகள் எல்லாம் செவிகளால் உணரப்படும் ஒலிகளே அல்லாமல் பிறவல்ல. இனிக் கத்து என்பது கது என்று இடைக்குறைந்த பின் கது என்பது முதலெழுத்து நீண்டு காது என்று மாறிச் செவிகளைக் குறிக்கின்றது. இதுவும் தமிழியற்கைக்கு ஏற்புடையதே ஆகும். எனவே கத்து என்பது கது என்று திரிந்து குறைச்சொல் ஆனதை மறுக்கும் திடமிருந்தால் அது காது என்ற சொல்லின் அமைப்பை அறியக் குலைந்து விடுகின்றது.

கது > கதம் > கீதம்: இங்கு அகரத் தொடக்கம் ஈகாரத் தொடக்கமாகிறது. இது செந்தமிழுக்கு ஏற்புடைய திரிபா என்று வாதிடலாம். காரணம் மிகப் பழமை வாய்ந்த சங்க நூலகளில் இத் திரிபைக் காணமுடியவில்லையே என்ற மனத்தடையாக விருக்கலாம். அகம் புற நானூறுகளில் இல்லை என்பது கவலையாக இருக்கலாம். யாம் தேடிப் பார்க்கவில்லை. நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் கவலையோடிருங்கள். க்+அ என்பது க்+ஏ என்று ஏகாரமாகிவிட்டது என்பதே யாம் கூறுவது. அப்புறம் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தினில் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி " முடிவு செய்யுங்கள்.

கதம் என்பது கீதமென்று ஈகாரத் தொடக்கமானது போலவே களிக்கை என்ற சொல்லும் அகரத் தொடக்கம் ஏகாரத் தொடக்கமாகிவிட்டது. களிக்கை என்பது கேளிக்கை என்று ஆகிவிட்டது. கேள் என்ற சொல் காதுகளாற் கேட்டலையும் உறவு என்னும் பொருளையும் தரவல்லது. கேள் > கேளிர் என்ற சொல்லமைப்பில் உறவினர் என்ற பொருள் போதருகின்றது. இன்னொரு சொல்லாய்வாளர் வந்து கேள் உறவு என்று பொருளிருப்பதால் கேளிக்கை என்பது உறவினருடன் ஆடுதலைக் குறிக்குமென்று சொல்லலாம்; மற்றொருவர் வந்து : காதுகளால் கேட்டு மகிழ்தல் என்னும் பொருள் சரியானது என்று சொல்லக்கூடும்.

என்றாலும் அகர முதல் சொற்கள் சில ஆகார ஈகாரங்களாகத் திரிதல் மேற்கூறப்பட்டுள்ளபடி களிக்கை > கேளிக்கை என்பதே பொருந்துகிறது. இதற்குக் காரணம் கேளிக்கை என்பதன் பொருள் களிக்கையில் காணப்படுவதுதான். கேட்டல் என்னும் பொருளதான கேள் என்பதில் மகிழ்வு கொள்ளற்கான உட்பொருள் ஒன்றுமில்லை. கேட்கும் பொருளின் பெற்றிக்கு ஏற்ப மகிழ்வோ துன்பமோ ஏற்படலாம் என்றுணர்க. எனவே கேளிக்கையை எங்கு வைப்பது என்றால் அதனை களிக்கையின் பாற் படுத்துவதே சரியானதாகும்.

கேளிக்கை என்பதற்கு வேறு சொற்கள் உள்ளனவா என்று தேடினால் தமாஷா தமாஷ் என்ற சொற்கள் கிடைக்கின்றன. இவை  உருது என்று முன்னர் கூறினோர் உளர். உருது என்பது முஸ்லீம் மக்களால் பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட மொழி. இதை இவர்கள் திறமையாகவே படைத்துள்ளனர். தம் ஆசைப்படி, சிலர் - பலருடன் கூடிமகிழ்வது "தம் ஆஷா" என்ற கோட்பாட்டுத் தரவில் (கோ - தா- வில்) இவர்கள் இச்சொல்லை அமைத்துள்ளனர். தம் என்பது தமிழ்; ஆஷா என்பது ஆசை, அது வடமொழித் திரிபு. தம் ஆசைப்படி ஈடுபடுதலே தாமாஷா என்று சரியாக ஏற்படுத்தியுள்ளமை அறிந்து மகிழத்தக்கதாகும். காலைத் தூக்கக்கூடாது, கையை உயர்த்தக்கூடாது, கடுமையாகச் சிரிக்கக்கூடாது, வளைந்து ஆடக்கூடாது, பதுமைபோல் அமைதி காக்கவேண்டும், தாவக்கூடாது என்றெல்லாம் விதிகளுக்கிடையில் சோர்ந்துவிடாமல் குதித்து ஆடி மகிழ்ந்து புரள விடுதலையுண்டு என்பதைத்தான் "ஆஷா" அல்லது ஆசைப்படி என்ற பொருள் நமக்குக் காட்டுகின்றது. எவ்வளவு தொலைவு பயணித்தால் தாமாஷ் எப்போது அது சோதனை வேதனை என்பது அதில் ஈடுபடுவோருக்குத் தெரியும். சில வேளைகளில் ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதும் தாமாஷா தான். கீழெல்லை மேலெல்லைகளை யாம் கூறோம்.

"பப்ளிக் என்டர்டெய்ன்மன்ட்" (public entertainment) என்பதைத்   "தாமாஷா" என்றும்,  "என்டர்டெய்ன்ட் மென்ட் டியூட்டி ஆஃபீசர்" (entertainment duty officer)  என்பதைத்  தமாஷா வரி அதிகாரி அல்லது மேலதிகாரி என்றும் முன்னர்ச்  சுங்க இலாகாவினர்3 ( துறையினர் )  மொழிபெயர்ப்புச் செய்திருந்தனர்.

இதற்கு இன்னொரு செந்தமிழ்ச் சொல்லும் உள்ளது. அதுதான் சவையல் என்பது. அது மென்மை குறிக்கும் "சவ்வு"4 போலும் சொல்லினோடு  உறவுடைய சொல். சவையல் என்றால் கேளிக்கை. ஒருகாலத்தில் வழக்கிலிருந்து இன்று மறக்கப்பட்டது போலும். மென்மையான செய்கையும் பேச்சும் கூட்டுகின்ற மகிழ்வு என்று பொருள்தருவதால் அதைப் பயன்படுத்தலாமே

பிழைத்திருத்தம் பின்.

-----------------------------------------------------------

1.  சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு இன்னொரு பெயர்.  இப்பெயரில்  "கதம்"
என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்வீர்.

2.   கதம் > கிருதம்.   க> க்ரு.அல்லது கிரு.

3    இலாகா:  https://sivamaalaa.blogspot.com/2017/03/how.html
       இஃது ஒரு பின்னடைப்புனைவு.

4 சவ்வு  -  அழுத்தமில்லாத மெல்லிய தோலைக் குறிப்பது.  இது வகர ஒற்று    மென்மையைக் குறிக்கிறது. "சவச்சவ"  "சவ்வு சவ்வு" என்பவை இம் மென்மையைக் குறிக்கும் ஒலிக்குறிப்புகளு மாகும்.

 


மாந்தன் மனிதன் மானிடன் மந்தி

மனிதன், மாந்தன் என்ற சொற்களை நாம் முன் விளக்கி எழுதியதுண்டு.

மன் என்ற அடிச்சொல், பல் பொருளுடையது. அவற்றுள் மன்னன் என்பதுமொன்று.

முன்னு (முன்னுதல், சிந்தித்தல் ) என்ற சொல்லும் மன் என்று திரியுமென்பர்.

மன் -  நிலைபெற்றது என்ற பொருளும் இவ்வடிச்சொல்லுக்கு உள்ளது,

மாந்தன் அல்லது மனிதன்  ஒரு நிலைபெற்ற உயிர் ஆவான்,  மேலும் அவன் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவன்.  எனவே மன் என்ற அடிச்சொல் பொருத்தமானது ஆகும்.

மன் > மான்.

மன்+ இது + அன் =  மனிதன்.

மன்> மான்+த் + அன் =  மாந்தன்.

இது என்பதும் த் என்பதும் இடைநிலையாக வருவதில் மாறுபாடு காண்பதற்கில்லை,

இது > இத்  > த்  என்று எப்படியும் தோன்றும்.

வெவ்வேறு சொல்லமைப்பாளர்கள் வெவ்வேறு இடைநிலைகளைக் கையாண்டுள்ளனர்.

மன் > மன் + தி >  மந்தி  ( மனிதன் போன்ற குரங்கு.)

மான் + இடு + அன் =  மானிடன்.  ( நிலைபெற்ற இடத்தினன்).

இது,  இடு என்பன இஷ், உஷ் என்று பிறமொழிகளில் பலவாறு உருக்கொள்ளும்.