திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கோஃபி ஆநான் மறைவு இரங்கல்

உலகெங்கும் போரின்மை உயர வேண்டும்
ஊரெங்கும் ஊணுண்மை உறுதி வேண்டும்
விலகில்லாக்  கல்விநிலை விளைய வேண்டும்;
வீடுதொறும் குடும்பங்கள் மகிழ வேண்டும்;
சொலவாகாப் பன்னன்மை சுனையூற் றாகிச்
சூழுலகில் வாழ்வுயரப் பழிதீர் பாடு
பலகாலம் பட்டொளிர்ந்த பகலோன் ஆநான்
பார்நீங்கிச் சென்றனரோ பதறும் நெஞ்சே

பொருள்:

போரின்மை  :  அமைதி,  சமாதானம்
ஊணுண்மை :  சாப்பாடு உள்ளதாவது;
விலகில்லா : தவிர்த்தல் இல்லாத; இல்லையென்னாத
சொலவு ஆகா : இன்னும் உரைக்க முடியாத; எண்ணற்ற
பகலோன் : சூரியன்
ஆநான்: கோஃபி ஆநான் முன்னாள் ஐ நா பொதுச்செயலாளர்.

 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சமுத்திரம்: முன் ஆய்வாளர்கள் குழப்பங்கள்

சமுத்திரம் என்ற சொல்லின் ஆய்வுகளில் ஏற்பட்ட சில குழப்பங்களையும் அறிந்துகொள்வோம்.

திரை என்பது தமிழில் அலை என்றும் பொருள்படும்.  அலையெனப் பட்டது  ஒருமை ஆயினும் பன்மையும் குறித்து   அவ்வலைகள் வீசும் கடலை ஆகுபெயராக வந்து குறிக்கும்.  இங்கனம் கடலெனப் பொருள்படவே முத்திரை என்பது மூன்று கடல்கள் என்று பொருள்தரும். மூன்று கடல்கள் என்று பொருள்பட்டால் அதற்கப்புறம் அவை ஒன்று கூடுதலைக் குறிக்க சம் என்ற முன்னொட்டினைப் பெற்று  சம் முத்திரை >  சம் முத்திரை அம் >  சம் முத்திர அம் .> சமுத்திரம் என்று ஆனது என்பது  ஓர் ஆய்வின் ஓட்டமாகும்.சம் என்பது சமை என்பதன் திரிபாக ஒன்றுக்கு மேற்பட்டவை கூடுதலைக் குறிக்கும். சமையல் முதலிய காரியங்களில் பல் பொருள்கள் கூட்டியே ஆக்கம் பெறுகின்றன எனப்படுவது சரியே ஆகும். சமை என்பதில் ஐ குறைந்த நிலையில் சம் என்ற முன்னொட்டு கிட்டுகின்றது.  சமை என்பதன் முன்னோடி வடிவங்களுக்குள் செல்லவேண்டியதில்லை.

ஐகாரம் வீழ்ச்சி அல்லது கெடுவது தொல்காப்பியனாராலும் உரைக்கப்பட்ட நிகழ்வே ஆகும்.  இதைப் பண்டை நாட்களிலே ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர்.   திரை என்பது திர் என்று குறைவதும் சமை என்பது சம் என்று குறைவதும் சொல்லமைப்புகளில் இயல்பானதே.

சமுத்திரம் என்பதும் சிற்றூர்களில் வழங்கும் சொல்லே ஆகும். திர என்பதைத் த்ர என்று ஒலிப்பதாலேதான் அது அயல்போல் தெரிகிறது. திர என்பதைத் த்ர என்பது தமிழரல்லாதார் செய்த  குறுக்கமே.  அதனால் அவ்வாறொலிக்கும் சொல் அயலாகிவிடாது.

மூன்று கடல்கள் கூடாத நிலையில் அவற்றை முத்திரம் என்று இணைத்துக் கூறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அவை தனிக்கடல்களே.  அதனால் கூட்டு என்று பொருள்படும் சம் தேவையற்ற கூடுதல் சொல் ஆகிறது.

முத்தரையர் என்ற சொல்லை ஆய்ந்தவர்கள் அவர்கள் தரையரா அல்லது திரையரா என்று குழம்பியுள்ளனர்.  தரையர் என்றால் தரையில் வலிமையாய் ஆண்டவர்கள் என்றும் திரையர் என்றால் கடலில் வலிமையாய் ஆட்சி செலுத்தியவர்கள் என்றும் பொருள்படும்.   திரையர் என்பதில் உள்ள இகரம் அகரமாதல் சொல்லியலில் இயல்பானதே.

இதைக் கடலாட்சி என்று கூறுவதற்கு அவர்கள் கடலில் செய்த வீரதீரச் செயல்களின் வரலாறு தேவைப்படும்.  இவற்றை அறிந்து இதனை முடிக்கலாம்,  இதை அவர்களின் முடிவிற்கு விட்டுவிடுவோம்.

சா முத்திரை அம் என்பது  ச முத்திர் அம் என்று குறுகிற்று எனினும் இது சிந்திக்கத் தக்கதே ஆகும்.


சனி, 18 ஆகஸ்ட், 2018

சமுத்திரம் - குமரிக்கண்டம் தொடர்பு.

சமுத்திரம் என்ற சொல்.



இன்று சமுத்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்..



இச்சொல்லைப் பலவாறு முன்னைய ஆசிரியர்கள் கண்டனர். சிலர் தமிழன்று என்றும் கூறியுள்ளனர்.



தென்னிந்திய மொழிகளிற் பல பேச்சு வழக்குத் திரிபுகளைக் கொண்டு ஆக்கப்பட்டவை என்றே கூறல் தகும். இவைபோலவே சமஸ்கிருதம் என்றும்வடமொழி என்றும் கூறப்படும் இந்திய மொழியும் தமிழ்ப்பேச்சு வழக்குத் திரிபுகளில் பலவற்றைக் கொண்டுள்ளது. இதைப் பல இடுகைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம்..



மூன்று பக்கங்களிலும் கடலினால் சூழப்பட்டது தென்னாடு எனப்பட்ட தென்னிந்தியா. முத்திரம் என்ற சமுத்திரத்தின் இறுதிப்பகுதி சொல் மு+திறம் என்ற இரு தமிழ்ப் பகவுகளின் ஓரமைவே ஆகும். இதன் பொருள் மூன்று பாகங்களிலும் கடல் என்பதுதான். ரகர றகர வேறுபாடு இன்றி வழங்கும் சொற்கள் பல உள்ளான. திறம் - திரம் என்பது அத்தகைய சொற்களில் ஒன்று. இதுவும் முன் இடுகைகளில் காட்டப்பட்டதுதான்.. திறம் என்பது விகுதியாய் வருங்கால் திரம் என்று திரிந்து சேரும் என்பது கண்டுரைக்கப்பட்டுள்ளது..



இவ்வாறாக, சமுத்திறம் > சமுத்திர மென்பதிலுள்ள ச என்பது சா என்ற இன்னொரு தமிழ்ச்சொல்லின் ஒலிச்சுருக்கமே ஆகும். இது முத்திறமும் (மூன்று பக்கங்களிலும் ) கடலென்/றும் கடலுக்குச் சென்றால் சாவு என்றும் பொருள்படுகின்றது. அடுத்தடுத்து இரண்டு கடல்கோள்களாவது நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றபடியால் அதனாலேற்பட்ட கிலியின் காரணாமக அமைந்த சொல்லே சமுத்திரம் என்பதாகும். சா என்பதிலிருந்து அமைந்த சவம் என்னும் சொல்லும் அந்நெடில் குறுகியே அமைந்ததென்பது காண்பீராக.. வினையிலிருந்து பி/ற பெயர்களும் இவ்வாறு அமைந்துள்ளன. தோண்டு> தொண்டை; காண் > கண். தீட்டு (தீட்டுதல் ) > திட்டம். என்ற உதாரணங்களிலிருந்து இவற்றை நன்றாக உணரலாம்.



இச்சொல்லிலிருந்தும் குமரி மூழ்கியதும் காவிரிப்பூம்பட்டினம் மூழ்கியதும் தமிழருக்கும் பிறருக்கும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தன என்பது தெளிவு. காலம் செல்லச்செல்லவே இவ்வச்சம் முதலியன மறைந்தன. மறைந்தபின்னர் வந்த சொல்லாய்வாளர் இதை உணர்ந்திருக்கவில்லை.
கடல் சாகரம் என்பனவற்றுக் கெழுதிய விளக்கம் இங்கு உள்ளது. அதையும் கண்டுணர்க.

http://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_78.html