செவ்வாய், 17 ஜூலை, 2018

சரித்திறம் சரித்திரம் சரிதை

இறந்த மனிதன் சாய்ந்துவிட்டவனே.  நின்று கொண்டிருந்தவனானாலும் இறக்குங்கால் படுத்துவிடுவான்.  சாய்தல் என்பது எதிர்பாராத விதமாக வீழ்தல். ஆனால்  இது பெரும்பாலும்  கனம் -   நீட்டமுடைய பொருள்கள் நேர் இழந்து வீழ்தலையே வழக்கில் குறிக்கிறது.

மேலிருந்து தரைநோக்கிச் சென்று படுவதையே இது தெரிவிக்கிறது.  எடுத்துக்காட்டு: பலகை சாய்ந்தது.  மரம் சாய்ந்தது. பொழுது சாய்ந்தது. பொழுது பட்டது என்றும் சொல்வதுண்டு,

படுதலாவது அடிவானத்தைச் சென்று தொடுதல்.


மனிதன் உயிரிழந்தக்கால் வீழ்தலின் சாய் என்ற சொல்லிலிருந்து  சா என்ற சொல் அமைந்தது.

சாவைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள்ளன. இவற்றுள் மடிதல் என்பது  அவ்வடிவம் கொள்ளக் காரணம், பல உயிர்கள் சாகுங்கால் இரண்டாக மடிந்து உயிர்விடுதலே ஆகும்.  இது சில தமிழறிஞரால் விளக்கப்பட்டுள்ளது,

சாய்தலும் சரிதலும் தொடர்புடைய சொற்கள். சரிதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாய்வான வாட்டத்தில் வீழ்தலைக்  குறிக்கின்றது.   மண் சரிவு என்பது காண்க. இஃது ஒரேயடியான வீழ்தலன்று. சாய்மானத்துடன் ஒத்து இறங்கிக் கீழ்வருதலே சரிதலாகும்.

இதன் காரணமாகவே "சரி" என்பது ஒத்துக்கொள்தலைக் குறிக்கிறது,

இப்போது சரித்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.

நடந்ததை நடந்தபடி சொல்வதே சரித்திரம் ஆகும்.சிறகுகளின் உதவி இன்றி யாரும் வானில் எழுந்து செல்லமுடியாது ஆதலினால் ஒருவன் பறந்தான் என்று கதையில் சொல்லலாம் என்றாலும் சரித்திரத்தில் சொல்ல இயலாது, ஆகவே புராணங்கள் என்னும் தொன்மங்களுக்கும் சரித்திரத்திற்கும்  வேறுபாடு உண்டாகிறது.

எனவே சரிதை என்பதும் சரித்திரம் என்பதும்  கற்பனைகள் இல்லாதவையாய் இருக்கவேண்டும்.  அவை சரியாக அறிந்தும் சொல்லப்படுதல் வேண்டும்.  எனவே " சரித் திறம்" :  அது சரித்திரம் ஆனது.  திறம் என்பது திரம் என்று திரிந்தது.

சரிதை என்பதில் தை என்பது தொழிற்பெயர் விகுதி.  சரித்திரம் என்பது திரம் என்பது தொழிற்பெயர் விகுதி ஆகும். 



திங்கள், 16 ஜூலை, 2018

கேதம் செலவு

காலைக் கதிரவனைக் கண்டு வணங்கிப்பின்
மேலெழுந்த போதொரு கேதமே கேட்டயர்ந்தேன்
அவ்வீடே யாம் குறுகி  ஆனவை  தீர்த்துவந்தேன்
ஒவ்வாதே இன்றெழுத எற்கு.

பொறுத்தருள்வீர். 



பொருள்:

மேலெழுந்த  =  இனி உள்ள வேலைகளைச் செய்ய முயன்ற .
கேதமே -  ஒரு துக்கச் செய்தி ;
அவ்வீ டே யாம் -  இது  ஆம் என்பது; புணர்ச்சியில் யாம் என்று திரிந்தது,
குறுகி =   சென்று.
ஆனவை =  ஆகவேண்டியவை
தீர்த்து -  முடித்து;
ஒவ்வாதே -  பொருந்தி வராதே ; முடியாதே;
எற்கு - எனக்கு.  

ஞாயிறு, 15 ஜூலை, 2018

விரிச்சிகம் இராசி சொல்

விருச்சிகம் என்பது யாழ்ப்பாணப் பகுதிகளில் விரிச்சிகம் என்று எழுதவும் சொல்லவும் படுதலுண்டு,  விருச்சிகம் என்பதன் மூலம் விரிச்சிகம் என்பதே.

இதற்குக் காரணம் தேள் விரிந்தபடி இருப்பதுதான்,    கொடுக்கை விரித்துக்கொண்டு ( அதாவது பேச்சு வழக்கில்  விரிச்சிக்கொண்டு) இருத்தலால் இது விரிச்சிகம் எனப் பெயர்பெற்றது.

தமிழ்ப் பேச்சுவழக்கிலிருந்து பல சொற்கள் அமைக்கப்பட்டிருத்தலை நாம் நம் முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம்.   அவை அறிந்தோர்க்கு ஈண்டு கூறுவது உணர எளிதாகும்.

யார் பேசியது என்று தெரியாமல் ஒரு சொல் காற்றில் விரிந்து வருமானால் அதனை விரிச்சி என்று தொல்காப்பியம் கூறுமென்பதை நீங்கள் அறிந்து வைத்திருத்தல் கூடும்.  (தொல் பொருள் 58). இது விரி என்ற பகுதியும் சி என்ற தொழிற்பெயர் விகுதியும் சேர்ந்த சொல்.   பயில் > பயிற்சி ,   என்பது காண்க. சிறுசிறு விதைகள் போலிருக்கும் அரிசி என்பதும் சி விகுதிச்சொல்லே ஆகும்.  இதனை அரி என்பதுமுண்டு.  விரிச்சிகம் என்பது விரிச்சி என்பதிலிருந்து அமைந்திருக்கிறது எனப் பிறர் சொன்னாலும் அதற்கு மறுப்பு எழுப்போம். 

விரி+சி + கு +அம் என்பது அமைந்த விதம் எனலாம்,  இது பேச்சுவழக்குத் திரிபினோடு ஒத்துநிற்பதே ஆகும்.

விரி என்பதே அடிச்சொல் ;  ஆதலின் விருச்சிகம் என்ற வடிவம் பின்னர் அமைந்த திரிபு என்று புரிந்துகொள்ளுதல் எளிதாம்,  பல தமிழ் கற்பிப்போர் தாம் நினைப்பதே சரியானது என்று எண்ணித் திருத்தித்திருத்தி இறுதியில் விரிச்சிகம் என்பது விருச்சிகம் என்று அமைந்திருத்தல் தெளிவு.

விருத்தியுரை என்ற சொல்லிலும் விரிவு குறிக்க வந்த விரி என்பதை விரு என்று திருத்தியிருத்தல் நன் கு புலனாகின்றது.  விரித்தியுரை என்பதே அடிச்சொல்லுடன் பொருந்தியது ஆகும்.

எனவே விருத்தி, விருத்தியுரை என்பன திரிசொற்களாகின்றன.

விரு என்பது உண்மையில் விரி என்பதன் திரிபே.

விர் என்பது மூலமாகவே,

விர் > விரி.  விரிச்சி.  விரிச்சிகம்.


விர் > விரு.

விருத்தம் முதலியவை.

விருத்தப்பா முதலியவை நீண்டகாலம் கீழ்மட்டத்தில் வளர்ந்து பின்னர் அவைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடும்.   கீழ்மட்டத்திலிருந்து அவை  வெளிமொழிகளுக்கும் பரவி யிருக்க, அவ்வேளையில் தமிழிலக்கியத்தில் ஒருவாறு இடம்பெற்றிருத்தல் வியப்புக்குரியதன்று.

அது புதியது என்று சிலர் கூறுவதற்கும் ஆதாரமில்லை.

புதுக்கவிதை முதலியவற்றுக்கு இன்னும் இலக்கணம் இயற்றப்படவில்லை என்பதையும் திரைப்பாடல்களுக்கு யாரும் இதுகாறும் இலக்கணம் உரைக்கவில்லை என்பதையும் நோக்கின் இது நல்லபடியாகவே புரியும் என்று உணர்க.  எம்மை இதுவரை எதுவும் எட்டவில்லை.

முடிவாக, விரித்துக்கொண்டிருப்பதனால் விரிச்சிகம் எனப்பட்டது என்பதை அறிந்து மகிழ்க.  விரித்திகம் > விரிச்சிகம் என த - ச திரிபு அமைதலும்  கொள்ளலாகும்.

திருத்தம் பின்பு.