ஒரு சொல்லின் எழுத்துக்களில் ஒன்றையோ இரண்டையோ சிலவற்றையோ எடுத்துவிட்டு மீதமுள்ள எழுத்துக்களைக் கொண்டு ஒரு சொல்லை அமைப்பதென்பது தமிழ் இலக்கணியர் பண்டைமுதல் அறிந்தும் பின்பற்றியும் வந்த ஓர் உத்தியே ஆகும். முதற்சொல்லில் எழுத்துக்கள் கெட்டிருந்தால், அச்சொல்லை குறைச்சொல் என்பர். சொல்லின் எப்பகுதியில் எழுத்துக்கள் கெட்டன என்பதுபற்றி ஒன்றை முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்று வகைப்படுத்துவர். தமிழிலக்கணியர் போற்றிய இவ்வுத்தி, பிறமொழியாரும் பின்னர் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பது யாவரும் ஒருவாறு உணர்ந்ததே ஆகும்.
மழுங்குதல் என்பதில் இடையெழுத்தாகிய ழுகரத்தை எடுத்துவிட்டால் அது மங்குதல் ஆகிவிடுகிறது. ஒளிமழுங்குதல் > ஒளிமங்குதல் என்ற சொல்லாட்சியில் இதனை உணர்ந்துகொள்ளலாம்.
மயங்குவது என்பதில் "யங்குவ" என்ற இடையில் நிற்குமெழுத்துக்களை நீக்கிவிடில் அது ம~து என்றாகி ஒரு புதிய சொல்போல் தோன்றுகிறது. மேலும் மது என்பது வேறுசொல்போலும் தோன்றும். உலகவழக்கிலும் செய்யுள்வழக்கிலும் இத்தகு குறைச்சொற்கள் நன் கு பயன்படுவனவாகும். இனிக் குறைச்சொல்லை மீண்டும் விகுதி முதலியவற்றால் நீட்டித்துப் புதுச்சொற்களையும் படைத்துக்கொள்ளலாம். மது> மதம் என்று அம் விகுதி புணர்ந்து புதுச்சொல் ஆனது.
ஒரு கொள்கையில் ஊறி நிற்பவர், அதனில் நீங்காது நிற்பவரே. "கள்ளால் மயங்குவது போலே, அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டு நிற்போம்" என்று பற்றின் மயக்க நிலையைப் பாரதி பாடியது முற்றிலும் ஒப்புதற்குரித்தே ஆகும். இத்தன்மையாலே சமயத்தை மதமென் `கின்றோம். மயங்குதல்: பழம்பொருள் கலத்தல் என்பது. தன் சொந்தக் கருத்தின் நிலையினின்று திடமிழந்து நெகிழ்வுற்றுப் பிறர்கூறு நிலையில் சென்று கலத்தல்.
மதம் என்ற சொல்லின் அடிப்படைச் சொல்லமைப்புப் பொருள்: மயக்கம் என்பதே. மதம்: பற்றுமயக்கம்; கொள்கைப்பிடி.
மயங்குவது என்பது மது என்று குறுக்கம்பெற்று மீண்டும் ஒரு பு என்னும் விகுதி பெற்று மதப்பு என்று வந்து இன்னொரு சொல்லானது. எனினும் பொருள் பெரிதும் மயக்கம் தொடர்பான நிலையிலே நின்றது. மயக்கம் மட்டுமின்றி, கொழுப்பு என்றும் செருக்கு என்றும் வழக்கில் புதிய பொருண்மை பெற்றது. மது என்பது மீண்டும் ஓர் அர் இறுதி பெற்று மதர் என்றாகி செருக்கு, மகிழ்ச்சி , மிகுதி என்ற பொருண்மைகளையும் அடைந்தது. இந்நிலையில் நின்றுவிடாதபடி அது ஒரு வினைச்சொல்லாகி " மதர்த்தல் " ஆனது. இது செழித்தல், களித்தல் (கள்ளுண்ணுதல் ) மிகுதி என்று பொருள் விரிந்தது.
இனி மதர்ப்பு என்பதும் அமைந்தது. மது > மதப்பு. மது> மதர்ப்பு. மதர்வு என வடிவ வேறுபாடுகள் காண்க. இன்னொன்று: மதர்வை ஆகிற்று.
மதனா என்பது எவ்வளவு அழகிய சொல். மது > மது+ அன் > மதன் > மதனன். இங்கு மது + அன்+ அன் என்று அன் விகுதி இரட்டித்து மக்களை மயக்கிற்று.
எண்ணம் நிறை மதனா, எழில்சேர் ஓவியம் நீர் மதனா, பஞ்ச பாணன் நீரே என் மதனா ---- என்றெல்லாம் கவிஞர் கண்ணதாசன் பாடலில் சொற்களைப் புகுத்தியுள்ளார்.
மதன்+ மதன் = மன்மதன் என்ற வடிவும் வழக்கில் திண்ணிய இடனுள்ளதே ஆகும். முதல் அசையாகிய மதன் என்பது தன் தகரத்தை இழந்து மன் என்று நின்றது. மன்னுதல் எனில் நிலைபெறுதல் என்று இன்னொரு சொல்லுமிருப்பதால் நிலைமொழி "மன்" என்பது நிலைபெற்ற என்று பொருள்படுமென்றும் விளக்குதல் கூடும்.
மது+ மது + ஐ என்று புணர்த்தி, மதுமதை ஆக்கி, இடையில் உள்ள து எழுத்தை விலக்கி மமதை என்று முன்வைத்தால் அது இனிதாகவே உள்ளது. ஏனை மொழிகளில்போல மது+ மது + இ என்று புணர்த்தி மதுமதி என்றால் மிகுந்த மயக்கம் என்றும் மயக்கத்தைத தரும் நிலவு என்றும் இருபொருளும் தமிழால் கூறலாம்.
உன்: முன்னிருப்பது என்னும் சுட்டடிச்சொல். உன் என்னும் வேற்றுமைப் பொருளிலும் வரும். உன் மகன் எனக்காண்க. உன் - உன்னுதல் என்னும் வினையடியாயும் கொள்ளுதல் கூடும். உ என்பது முன்னுள்ளது என்று பொருள்படுவதால் உன்+ மது+ அம்= உன்மத்தம் ( மயக்கத்துக்கு உள்ளான அறிவு ) எனக்காண்க. மத்தம் என்பது மயக்கம், வெறி, செருக்கு, பைத்தியம், களிப்பு அல்லது கள்ளுண்ணுதல். வெறி முன்வருமாயின் அதுவே உன்மத்தமாகும். உன்னுவதெல்லாம் வெறியாகிவருதல்.
தமிழ்ச்சொற்களையே மேற்கொண்டு தமிழ் விகுதிகளையே புணர்த்தி புதிய இனிய பல சொற்களைப் படைத்துக்கொள்ளும் வசதியைத் தமிழ் தனக்கும் பிற அயன்மொழிகட்கும் வழங்கியுள்ளமை கண்டு மகிழ்வு அடைவீராக.