எமன் சொல்லின் தோற்ற வரலாறு.
இறந்துபோனவர் நம் சொந்தக்காரராக இருக்கலாம்.
அவர் வெள்ளிக்கிழமை இறந்தவரானால் உறவினர்கள் அஞ்சுவதுண்டு.
உயிருடனிருக்கும் இன்னும் ஓரிருவரையும் கூட அழைத்துக்கொண்டு மேலுலகம் சென்றுவிடுவார் என்பதே அந்த அச்சம்.
இது ஒரு காரணமுமின்றி ஏற்பட்ட அச்சமாக இருக்காது.
எப்போதோ எங்கோ ஒரு வெள்ளிக்கிழமையன்று ஒருவர் இறந்து அவருக்கு வேண்டியவர்கள் என்று சொல்லப்படும் மேலும் இருவர் அன்றே விழுந்து இறந்திருந்தால் இப்படிப்பட்ட அச்சம் ஏற்படுதல் இயல்பானதே.
நான் எதையும் நம்பாதவன் என்பவனுக்கும்கூட நடுக்கம் ஏற்படுவது -
அவன் அதை வெளியிற் சொல்லாவிட்டாலும் - இயல்பானதே ஆகும்.
ஒவ்வொருவன் இறப்பதற்கும் சவ ஆய்வு மருத்துவர்கள் அறுவை மேற்கொண்டு காரணங்கள் கண்டுபிடித்துச் சொல்வர். இது ஆட்டப்சி என்றும் போஸ்ட் மோர்ட்டம் என்றும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.
ரிகர் மோர்ட்டிஸ் என்ற தொடரைப்பற்றி முன்னோர் இடுகை வரைந்ததுண்டு.
அதிலும் சில விடயங்களைப் பதிந்துள்ளேம்.
இப்படி ஒவ்வொரு மரணத்திற்கும் காரணம் இருந்தாலும் அச்சம் இருப்பது உண்மைதான்.
அஞ்சுபவன் மடையன் என்பவன் தானும் தன்னந்தனியாய் நடுக்குறுவதுண்டு.
இந்த மாதிரியான அச்சங்களைப் போக்குவதற்கு பூசாரிகளோ மக்களோ கண்டுபிடித்தது:
ஒரு கோழியைக் கொன்று போட்டுவிட்டு அப்புறம் சவ வீட்டு நிகவுகளைத் தொடர்ந்து நடத்திச் சடலத்தைப் புதைத்தாலோ எரித்தாலோ பிற உயிர்கள் வீழும் பலி நிகழாது
என்பதாகும்.
இதெல்லாம் எழுதக்காரணம் என்னவென்றால்:
இறந்தவன் நம்மவன்; சொந்தக்காரன்;
இழுத்துக்கொண்டு போய்விடுவான் நம்மையும் என்ற அச்சம்.
அதாவது நம்மவனே நம்மில் யாரையும் அவன் செல்லும் புதிய உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுவான் என்பதே அச்சம்.
யார் இழுத்துக்கொண்டு போய்விடுவார் என்று அச்சம்?
நம்மவர்.
நமன். எமன்.
எம்மவன்.
எம்மவன் எமன். எம்+அன் = எமன் ஆவான். இதேபோல் நம்+ அன் = நமன்.
அவன் என்ற சொல் சேரும்போது மகரம் இரட்டித்துப் புணரும். ஆனால் அன் என்ற குறுகிய விகுதியாயின் எமன் என்றே
உருப்பெறும்.
ஆனால் எமன் என்ற சொல் யமன் என்று திரிந்ததுடன், பல மொழிகளில் இடம்கண்டுள்ளது. சீனா, யப்பான் முதலிய நாடுகளிலும் புழங்கப்படுகிறது. பல நாட்டு மதங்களில் பதிந்து பளிச்சிடுகிறது. ஆகவே இன்னும்
தீவிரமாக ஆய்வு செய்யப்படவேண்டியதொன்றாகும்.
இவற்றை இன்னோர் இடுகையில் காண்பதே நலமாகும்.