இருப்பதைக் கொண்டே இல்லாததை உருவாக்கவேண்டும். தெரிந்ததைக் கொண்டே தெரியாததையும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தவகையில் இன்று மயானம் என்ற சொல்லின் தோற்றத்தினை உணர்ந்துகொள்வோம்.
மாய்ந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரியூட்டும் இடமே மயானம் எனப்படுகிறது. இது எந்த மொழிக்குரிய சொல் என்பதைவிட எப்படி அமைந்தது என்று கண்டுபிடித்தால் அதன் பொருளை நன்`கு தெரிந்தின்புறலாம்.
மயானம் என்ற சொல்லை இட்டம்போலப் பிரித்தால்:
மயா +ன்
+ அம் என்று "பாதை தெரிகிறதன்றோ", எனவே மயா என்பது என்ன என்று தேடுங்கள். இங்கு மயா என்பது மஜா என்பதன் திரிபுபோல் தோன்றலாம். ய-ஜ திரிபு. யேசுதாஸ் > ஜேசுதாஸ் போல. மயாவுக்கும் மஜாவுக்கும் ஏதும் பொருள்தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒட்டகம், பெண்குதிரை, கழுதை முதலியவற்றுக்கு சமஸ்கிருதத்தில் மயா என்பர் என்று சமத்கிருதப் பண்டிதர் கூறுகிறார். இந்த விலங்குகள் எல்லாம் மயானத்தில் இல்லாதவை! ஆகவே மூலம் அறிய இந்த வழியில் இயலாது. இந்தச் சிந்தனை மின்னல்போல் பளிச்சிட முடியாது.
மசான என்பதை (சொல்லின் பிற்பகுதியாக )
உள்ளடக்கிய சொற்கள் சில உள. மயானம் என்ற சொல்லுடன் பாதி ஒலியொற்றுமை உடைய சொற்கள்
இவை. அவற்றைக் கொணர்ந்து தொடர்புறுத்திவிட்டு அக்கடா என்று கிடக்கலாம் என்றாலும் மீண்டும் முயல்வோம்.
நாம் தமிழின்மூலம் இச்சொல்லை ஆய்வோம்.
மாய் என்றால் இறத்தல், மாய்ந்து போவது.
ஆன் என்பது இடைநிலை. ஆன என்றும் பொருள்படும்.
ஆன என்னும் எச்சவினையாகவும் கொள்ளலாகும்.
அம் என்பது விகுதி.
மாய்+ஆன + அம் = மாயானம் > மயானம்
( முதலெழுத்துக் குறுக்கம்).
நெடில் குறிலாகிச் சொல்லமைதல் தமிழில் பழங்காலம் தொட்டு உள்ளது.
எடுத்துக்காட்டு:
காண் > கண். (காணும்
உறுப்பு).
எத்துணை பழங்காலச் சொல். காண் என்பது. அப்போதே இவ்வசதியைக் கையாண்டிருக்கிறார்களே......
வீழ் > விழுது.
இன்னும் வினையல்லாத சொற்களிலும் இப்படி வரும்.
பாழ் > பழுது.
நெடிலிற் றொடங்கிய சொற்கள் குறிலில்
முதலெழுத்துக்கொண்டதனை இதன்மூலம் அறிந்தீர்கள்.
எம் இடுகைகளை நோக்கின் நெடுகிலும் இதனை யாம் தெரிவித்துவந்திருப்பதனை அறியலாகும். பல மரபுதோய்ந்த மாற்றங்களில் இதுவும் ஒரு வகையினது
ஆகும்.
இம்முறையால், மாயானம் என்பது மயானம்
என்று குறுகிற்று. பாட்டில் அசைகள் குறுக்கும்வழி குறுக்குறுதல் போலுமே சொல்லமைப்பிலும் குறுக்கம்பெறும். சுருக்கமாக முடிப்பதைவிட்டு
வாயைப்பிளந்து நீட்டிக்கொண்டிருத்தல் வேண்டாதது ஆகும்.
சொல்லானது பின் வேறுமொழிகட்கு ஏகுதலில் தடையேதுமில்லை. ஏகுமாயின் தமிழர்க்கும் பிறர்க்கும்
உள்ள தொடர்புகளை இத்தகு சொற்கள் காட்டவல்லன.
மயானம் சொற்பிறப்பு இதுவே. மாய்ந்தோர்க்கான
இடமே மயானம். சொல் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.
நாடகத்தில் மாவினால் உசுப்பப்பட்ட அழகு மாவுசு
ஆகிப் பின் மவுசு ஆனதுபோலும் காண்க.