ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

அழகறுவை மறு ஆக்க மருந்துகள்: COSMETIC SURGERY




இளமை அகல்தல் முதுமை அடைதல்
உலகத் தியற்கை உயிர்கள் அனைத்தும்
கடந்து செலற்குரித் தாகும் அமைப்பே;
பறந்திட ஒண்ணாப் பறவையாய் விட்டால்
இருந்திடப் பார்க்கும் வழிதனைக் காண்க.
அழகறு வைமறு  ஆக்க மருந்து
பழகிப் பயன்பெற முற்படல் இன்னல்.
உடல்தாங்  கிடுதல் இயலா நிலையில்
உயிரிழந் தோரும் பலருளர் என்பரே;
ஆதலின் கொள்வீர் கவனம்
சாதலை வீணிலே மேவுதல் நீங்கவே.

சனி, 24 பிப்ரவரி, 2018

ஸ்ரீதேவி - இரங்கல் Demise of Sridevi Superstar Actress



துடிப்புடன் திரைதனில் தோன்றிச்  சுவைஞரை
நடிப்பதன் அழகில் கவர்ந்தநட்  சத்திரம்
நெடித்தலொன் றிலாத உழைப்பினர் தாமுமே
பிடித்தமே லிடத்தினைப் பெயரா திருந்தவர்.

மூவா அகவையில் முன்னிறப் பெய்திசீ
தேவி உலகினைத் தேம்பிட வைத்தனர்
ஆவி அமைதியை அடைக குடும்பமும்
மேவு துயர்க்கினி இரங்குமெம் நெஞ்சமே.

 அரும்பொருள்:

சுவைஞர்  = இரசிகர்கள்.
நெடித்தல் =  காலம் கடத்துதல். செய்வதைச்
செய்ய நாட்கடத்துதல்.
பெயராது = இழந்துவிடாமல்.
மேலிடம் = அந்தஸ்து

மூவா அகவை = மூப்பு அடையாத (இள) வயது
இறப்பெய்தி -  மரணமடைந்து.
முன்னிறப்பு -  அகால மரணம்
தேம்புதல் -  கலங்குதல்.
மேவு துயர் -  அடைந்த துக்கம்

ஸ்ரீ

  

பரிசுகள் பெறுவதில் ஆபத்து....



போர்களிலே தாம்குண்டு போடுவார்கள் இங்கென்ன
புதுமணத் தம்பதிகள் நாமே! - இந்தப்
பூதலத்தில் நாமிணைந்தோம் காதலினால் கட்டுண்டோம்
ஏதினியே  வாழ்வில்  இன்னல்?  

என்றபடி போகமிழை புத்தம்புது  இல்லமதில்
இருந்தபடி எக்காளம் இட்டு -- அங்கு
வந்தபரி சுப்பொருள்கள் வாரியிட் டுப்பிரித்தார்
வன்`குண்டே வெடித்த தங்கே

மணமகற்கு வந்துற்ற மாதுயரை என்சொல்வோம்
மரித்துவிடப் பெண்ணும் ஆங்கு --- உயிர்
பிணத்திற்குப் பக்கலிலே காயம்பெரி தாய்ப்பட்டு
பிழைப்பாளோ என்ன   வீழ்ந்தாள்

மணத்திற்கு  வாங்காதீர்  மகிழ்ச்சியால் எப்பரிசும்
மாநிலமே வீணர் வாழும்---- ஒரு
குணத்திற்கு வாழாத  கூழ்க்கலமே ஆயிற்றே
குற்றநெறி உற்றழிந்     ததே..