புதன், 3 ஜனவரி, 2018

திருவனந்தபுரம்



ஆய்வுக்குரிய சொல் வடிவம்

திருவனந்தபுரம் என்பதோர் அழகான ஊர்ப்பெயர். எல்லா ஊர்ப்பெயர்களும் அழகுள்ளவைதாம்.  அழகில்லாத பெயர்களைப் பெரும்பாலும் ஊர்களுக்கு வைக்கமாட்டார்கள்.  பெயர்வைக்குமுன் தேவையான நேரம் எடுத்துக்கொண்டு நன்`கு சிந்தித்தபின்னரே அதனை எட்டிப் பிடித்திருப்பார்கள்.

திருவனந்தபுரம் என்பது ஒரு சொல்.  எப்படி என்றால் அது ஓர் ஊரைக் குறிப்பதனால், அவ்வூருக்கே அது பெயராவதினால், அது ஒரு சொல் என்றே எண்ணவேண்டும்.  திரு என்பதோ அனந்த (வனந்த ) என்பதோ புரம் என்பதோ தனித்து நின்று அவ்வூரைக் குறிக்கமாட்டாது.

இது திருவந்திரம் என்று திரிந்தும் அமைகிறது. இது மலையாளத்தில் பேச்சு மொழியில் வழங்குகிறது. எழுத்திலும் இருக்கின்றது.

திருவனந்தபுரம் என்ற  பெயர் நீட்டமுடையதாய் உணரப் படுவதனால் அல்லது இருப்பதனால், பலருக்குத் தொல்லை போல தெரிகிறது. அந்தத் தொல்லையுணர்வு மீறினதால் அதனைக் குறுக்க முனைந்து திருவந்திரம் என்`கிறார்கள்.

திருவ(ன)ந்த(பு)ரம் > திருவந்தரம்> திருவந்திரம். இரண்டெழுத்துச் சுருக்கம்.  இரண்டெழுத்துச் சேமிப்பு ஒரு பெரிய காரியம்!!

திருவந்திரம் என்பதைப் பகுதி விகுதி என்று பிரித்தால் அதிலிருந்து பிழையான துண்டுகளே கிடைக்கும்.  ஆய்வுமுடிவு சரியானதாக இராது.  திரு+வந்து + இரு+ அம் சரியான பிரிப்பு ஆகாது.  ஆகவே அது திரிசொல்.  மேலும் அது ஒரு பகாப்பதம் என்று இலக்கணத்தில் கொள்ளவேண்டும்.

இயற்சொல், திரிசொல், வடசொல் .  திசைச்சொல் என்று தொல்காப்பியனார் வகைப்படுத்துவதால், நாம் இயற்சொல் வடிவங்களையே பகுத்துச்சொல்ல வேண்டும். 

திரிசொல், வடசொல், திசைச்சொல் என்பவற்றை ஆய்வு செய்யலாம்,  செய்யின் அது அவற்றின் மூலம் காண்பதற்காகவாம்.

இப்போது திருவனந்தபுரம் “டி`புரம்” என்றும் தொலைக்காட்சிகளில் சுருக்கப்படுகிறது. திரையில் பலவும் காட்டவேண்டியிருப்பதனால், இடநெருக்கடி கருதி இவ்வாறு செய்யப்படுகிறது எனலாம்.

திருவந்திரம் என்பதும் Trivandrum என்று ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதில் Tri என்பது 3 என்று விட்டுவிட்டால், van,  drum இரண்டும் கிடைக்கின்றன.  பொருளற்ற முயற்சி ஆகிவிடுகிறது. இடைக்கால மாந்தர்கள் இதற்கொரு கதைபுனைந்து சரிசெய்து வைப்பர்.  இத்தகைய கதைகள் இருக்கக்கூடும். யாம் தேடிப்பார்க்கவில்லை.

இந்நகர்ப் பெயர்  ஆனந்தபுரி என்றிருந்து  பின் திரு+ஆனந்த +புரம் என்று மறுபுனைவு பெற்றுத் திருவனந்தபுரமாயிற்று என்பர்.  ஆனந்தம் என்பது இந்திய மொழிகளில் பெரிதும் வழங்கும் ஒரு சொல் ஆதலின் இது சமஸ்கிருத நூல்களிலும் இடம்பெற்றிருப்பது இயல்பே ஆகும்.  சமஸ்கிருதத்தை ஆக்கியோர் தமிழர் உள்ளிட்ட இந்தியர்களே ஆவர்.

அனந்தம் என்பது ஆகாயம் என்றும் பொருள்படும் சொல்.
அன் : அல்லாதது;  அந்தம்:  முடிவு.  ஆகவே முடிவற்றதாகிய ஆகாயம்.2  இச்சொல் (ஆகாயம்) தொல்காப்பியர் காலத்தில் "காயம்" என்றிருந்தது.  காயமாவது, ஞாயிறு திங்கள் நக்கத்திரங்கள் காயும் (ஒளி வீசும் ) இடம். ஆ: ஆதல் குறிக்கும் முன்னொட்டு.

திரு+அனந்த+ புரம்:  உயர்ந்த ஆகாய புரம் எனினுமாம். திருமால் கடலிலும் வானிலும் உள்ளவர். இரண்டுமே நீல நிறத்திற்குரியவை என்பதும் கருதுக. 2

அனந்தல் (மூலம்)


அனந்தல் என்பது உறக்கம்.  இங்குள்ள பதுமநாத சாமி  (பத்மநாப சாமி) ஓர் ஊழிக்கும் இன்னோர் ஊழிக்கும் இடைப்பட்ட காலத்தில்  ஆகாயத்தில் உறங்குபவர். (பாற்கடலில் பள்ளி கொண்டார் என்றும் சொல்வர் ). 1 அவர் உறங்கி எழுகையில் ஓர் ஊழி முடியும். அவருக்கு இங்கு கோயில் இருப்பதால் அவர்  ஊழி இறும்வரை உறங்குதல் குறிக்க திரு+ அனந்தல் + புரம் என்று கூட்டப்பட்டு,  பின்  அனந்தல் என்பதில் லகர ஒற்று வீழ்ந்தது என்று தெரிகிறது,

சில சொற்களில் இறுதி லகர ஒற்று திரிதலுண்டு.  எடுத்துக்காட்டு :  மேல் > மே.  அனந்தல் என்பது அனந்த  என லகர ஒற்றுக் கெட்டு வருதலுண்டு. இனி திருவனந்தல்புரம் என்பது திருவனந்தபுரம் என்று மருவியும் இருக்கக்கூடும்.

அனந்தல் என்பது ஆனந்த என்று பிறழ உணரப்பட்டிருத்தல் கூடும்.  எங்கனமாயினும் அது ஊர்ப்பெயர் ஆனபின் ஒரு சொல்லாகவே கருதப்பட வேண்டும்.

அடிக்குறிப்பு:

1. பாற்கடலில் பள்ளி கொண்டது பட்டி
    தொட்டிகளிலெங்கும் பரவிவிட்ட
    தொன்மக் கதை.
     பாற்கடலில் பள்ளிகொண்ட
     பஞ்சவர்க்குத் தூதனே 
     பாடினேனே ஐயா தேடினேனே
     ( சிற்றூர்ப் பாடல்).
 *  " நமதாண்டவன் ஆகாசமதில்
       தூங்குகின்றாரே தினம்"
     ( கூத்துப் பாடல்) 
2  அல் > அன்.
     அல் > அறு.  அறு - அற்ற.
    ( அனந்தம் என்பதில் அல்- இல்
    மயக்கம்)     

இதில் காணப்படும் பிழைகள் பின் திருத்தம் பெறும்.
மறுபார்வை: 4.1.2018 
மறுபார்வை: 10.4.2018

செவ்வாய், 2 ஜனவரி, 2018

அரசியலில் நடிகர்கள். நடிகைகள்.



மேடையிலே பலகாலம்  நடித்தோ இன்றேல்
மேனிலையில் திரைகளிலே கொடியை நாட்டி
ஓடைதரு நீர்சென்று  கடலை நாடும்
உன்னதமாய் அதுபோல தலைய மைச்சாய்,
நாடுபுகழ் தங்கிடவே நண்ணு வோர்க்கு
நல்லதொரு அறிமுகமே இருப்ப தாலே
ஏடுமிக அறியாராம் ஏழை  மக்கள்
இயன்றபடி தேர்ந்தெடுப்பார்  நயந்து போற்றி.


இன்றேல் - இல்லாவிட்டால்.
நண்ணுவோர் -  கிட்டியோர் 
நயந்து -  விரும்பி.

அமெரிக்க மண்டைத் தெளிவு



தொடக்கத்தில் அமெரிக்க அரசினர், இந்தியா என்ற ஒரு நாடு உருவானதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைக் குறிப்பிடவில்லை. இந்தியர் என்று சொல்லப்படும் மக்களின் குமுகச் செயல்பாடுகளும் பிற அணுகுமுறைகளும் அவர்களுக்கு ஒத்துவரவில்லை.  இப்படிச் சொல்வதில் பிழையிருந்தால், பாகிஸ்தானுக்கு அளித்ததுபோன்ற உதவித்தொகைகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவிடமிருந்து கிடைத்திருக்கவேண்டுமே! உதவிக்குரியோர் பாகிஸ்தான் என்னும் அரசினர்தாம் என்று முடிவு மேற்கொண்டனர். அதை முறையென்று காட்ட காரணங்களையும் கண்டுபிடித்துக்கொண்டனர்.

இருநாட்டின் பெருமதங்களிலும் ஒற்றுமைகள் காணப்படுவதால், பாகிஸ்தானுடன் ஒத்துப்போவது எளிது என்று ஹென்றி கிஸிஞ்சர் போன்ற  கொள்கை உருவாக்கச் செம்மல்கள் வெளிப்படையாகத் தெரிவித்ததுண்டு.

அமெரிக்கத் தலைவர்கள் டைமாக்கள் 1 என்று நினைத்த பாகிஸ்தான் உதவியைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகைகளை இந்தியாவிற்கெதிராகப் போர் செய்யவும் பயங்கரவாதிகளை உருவாக்கவும் நன்`கு பயன்படுத்திக்கொண்டது. எல்லாம் அறிந்த அதிகப் பிரசங்கிகளாக அமெரிகாவால் கருதப்பட்ட  அப்போதையத் தலைவர்கள்  நேருவிற்கும் கிருஷ்ண மேன்னுக்கும் இதனால் ஒருவகையில் தோல்வியே.

இவ்வளவு காலமும் அறியாமைக் குளத்தின் ஆழத்தில் கிடந்த அமெரிக்காவிற்கு இப்போதுதான் விவரம் புரிந்துள்ளது.  அமெரிக்கக் குடிமக்களின் பணத்தைக் கொண்டுபோய்ப் பாகிஸ்தானுக்குத் தாரை வார்ப்பதில் ஒரு நன்மையும் இல்லை என்பதை உணர ஒரு டிரம்ப் வரவேண்டியிருந்ததை  இப்போது உலகமும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு முளைத்துள்ளது.

பெரிய பெரிய கூரியபுத்திச் சூரியன்`களுக்கும் பின்னால்தானே மண்டைத் தெளிவென்பது உண்டாகுகின்றது? ஆனால் அது உண்டாகாமலே பலர் சென்றுவிட்டனர்.

1.  daima - தொடர்ந்து  அப்படித்தான் என்பது அரபிப் பொருள்.
ம - டை என்பதைத் திருப்பிப் போட்டால் டை-ம  (  மா )  தமிழில். fools.