புதன், 15 நவம்பர், 2017

அரசியல்: எவனும் எதிரியில்லை.



இது வெளிநாடொன்றில் நடைபெற்ற நெருங்கிவரல் முயற்சியில் ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை எதிரியுடன் பேசேன் என்று ஒதுக்கியது அறிந்து,   மக்கள் தொண்டு புரிவார் என்றும் நட்பு நெறியே கடைப்பிடித்தல் வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்ட எழுந்த உள்ளக் கருத்துகளின்  வெளிப்பாடு. படித்து இன்புறுக.

இது அக்கட்சியினரை எட்டுமென்று நினைக்கவில்லை.  இருந்தாலும் பாடப்பட்டதனை நாம் பகிர்ந்துகொள்வோமே. 


அரசியலில் நிரந்தரமாய் நண்பர் இல்லை
அத்துறையில் நிரந்தரமாய் எதிரி இல்லை.
நிறுவியதோர் கூட்டாளி உண்டென் றாலோ
நிலைமாறா எதிரியவன் உண்டென் றாலோ
அருவியாறு கடல்களிலே மாற்ற மில்லா
அகிலமிதாம் என்றன்றோ பொருளே யாகும்?
திருவுகந்த தருணத்தில் எதிரி நண்பன்
தேர்ந்தவனோ டுறவாடல் ஓர்ந்து கொள்ளே!


மக்களுக்கே உழைப்பதொன்றே  கடனாய்க் கொண்டாய்
மாநிலமேல் எதிரிக்கும் இலக்கு வேறோ?
தக்கபடி பேச்சியற்றித் தகுந்த காப்பில்
தனிச்சிந்தை  மேலோங்க முடிவு சேர்ப்பாய்!
நக்கலுடன் களிப்பாட்டு  நீயோ செய்யாய்
நலமென்றும் விளைத்திடுதல் நோக்கம் அன்றோ
ஒக்கவுன தன்பருடன் உயர்ந்து நின்றே
உலகுபயன் கொண்டிடவே புரிவாய் தொண்டே.

வேறு சந்தங்களில் பாடவேண்டுமென்று எண்ணினாலும்
கருத்துகள் ஏனோ இந்தச் சந்தத்திலேதான் வடிகின்றன!
அடுத்த கவிதையை வேறு சந்தத்தில் பாட அம்மை அருள்புரிவாளாக.
 



செவ்வாய், 14 நவம்பர், 2017

மணம், மணி, அம்மணம், அம்மணி, . மண்ணுதல் சொல்லமைப்பும் பொருளும்

உலகில் நல்ல அலங்காரம் செய்துகொண்டு தூய்மையாகத் தென்படுவோருக்கே பெரிதும் மதிப்பு உள்ளதென்றால் அது மிகையாகாது.  நன் கு படித்தவருக்கு அல்லது பதவியில் உள்ளவருக்குப் பெருமதிப்பு உள்ளது.  அதுபோல் வாய் கண் மூக்கு செவி உடல் என அனைத்தும் போற்றத்தக்க முறையில் தூய்மையாய் வைத்திருப்பவரை யாரும் மகிழ்வுடன் வரவேற்பர். 

அழகுடன் திகழ இன்று நமக்குக் கிடைக்கும் துணைக்கருவிப் பொருள்கள் மிகப்பலவாம். பணம் செலவழித்து அவற்றை வாங்கி அழகுடன் விளங்குகின்றோம். காட்டிலும் மேட்டிலும் காலங்கழித்த முந்தியல் மாந்தனுக்கு இவையெல்லாம் கிட்டவில்லை.  சவர்க்காரம் என்னும் சோப்பும்கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீயக்காய்த் தூள் என்னும் சிகைக்காய்த் தூளும்கூட உண்டாக்கப்படாத நிலையில்,  அவன் தண்ணீரில் வெறுமனே குளிக்கவேண்டியிருந்தது. வியர்வை விளைத்த நாற்றம் நீங்க அவன் என்ன செய்தான்?

கொஞ்சம் நன்மணம் உள்ள மண்ணை உடலில் பூசிக்கொண்டான். அப்புறம் குளத்திலோ ஆற்றிலோ வேறு நீர்நிலைகளிலோ மூழ்கி எழுந்தான். பேச்சு வழக்கில் முழுகாமை இருத்தல், தலைமுழுகுதல் முதலிய பல குறிப்புகளும் மனிதன் எப்படிக் குளித்தான் என்பதை விளக்கும். முழுகுதல் என்பதும் இடம் நோக்கி, குளித்தலை உணர்த்தும்.  

அவன் மண் பூசிக் குளித்தமையால் “ மண்ணுதல் “ என்ற சொல்லுக்குக் குளித்தல் என்ற பொருள் உண்டாயிற்று. அரசன் குளிக்கும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுக்கு மண்ணு மங்கலம் என்று பிற்காலத்தில் குறிக்கப்பட்டது.
கழுவி எடுக்கப்பட்ட ஒளிக்கல்லுக்கு “ மணி “  என்ற பெயர் வந்தது.
குளித்தபின்னர்தான் நன்மணம் வந்தது.  ஆகவே மண் > மண > மணத்தல் என்ற சொல் வாசனையையும் ஆடவர் பெண்டிர் இணைப்பையும் குறித்தது.

பெருமாட்டிகளெல்லாம் நன்கு குளித்தவர்களே,  அவர்கள் “ அம்+ மணி “ எனப்பட்டனர்.   அம் = அழகு; மணி = குளித்த பெண்.

குளிக்கும்போது ஆடை களைந்தே பலரும் குளிப்பர். தூய்மை பெற  அதுவே வழியாய் இருந்தது. (புதிய) ஆடையை அவர்கள் மீண்டும் அணியுமுன் அவர்கள் அழகாகக் குளித்தெழுந்த ஆடையில்லா நிலையில் இருந்தனர்.  அது அம் மணம் ஆயிற்று. அம் = அழகு. மணம் = உடல் கழுவிய நிலை.   அதாவது ஆடை அணியுமுன் உள்ளதான நிலை.

மண் + அம் = மணம். குளித்தபின் உள்ள நிலை. மண்ணு + அம் = மணம்.

இதையெல்லாம் அணுகி ஆய்கின்றவேளை தமிழின் பழமை புரிகிறது.

திங்கள், 13 நவம்பர், 2017

நல்லகாலம் தமிழ்நாடு இந்தியாவுக்குள் !



நல்ல காலம்  இந்தியாவில் தமிழ்நா டின்று
வல்லவொரு மாநிலமாய் வளர்ந்தி லங்கும்;
இல்லையென்றால் உலகில்மண் விழுங்கு நாட்டோர்
சொல்லப்பலர் அவர்கைக்குள் சுருண்டு வீயும்.

எல்லையென்றும் இருத்தல்பிறர் கொல்லை  யாகும்;
முல்லைவனம் எமதென்ற முழக்கம் மட்டும்
உள்ளதனை உறுதிபெற உருக்கில் வார்த்துக்
கொள்ளுமொரு படையாமோ குறுக்கில் நிற்க?

இவை இரண்டும் தாழிசைகள், வழக்கமாக விருத்தப்பாக்கள் வரும் சந்தத்தில் அளவடியில் அமைந்தன.