திங்கள், 13 நவம்பர், 2017

கெடுத்தம் - விடப்பட்ட சொல்.



 கெடு என்ற சொல்லை நீங்கள் அறிவீர்கள். 

இது வினைச்சொல்லாக வரும்போது  கெடுதல் கெடுத்தல் என்று இரு வினைகளையும் குறிக்கும்.

கெடு என்பது காலக்கெடுவையும் குறிக்கும். இதனை இந்தக் கால அளவிற்குள் முடிக்க என்பது கெடு கொடுப்பது அல்லது வைப்பது ஆகும்.

கெடு என்பது கெடுத்தம் என்று சிற்றூர் வழக்கில் உள்ளது.  இது தம்மீறு பெற்று “தடவை” என்று பொருள்படும். தரம், முறை என்ற சொற்களும் ஈடாக வழங்கவல்லவை.  வாட்டி என்பதும் வழக்கில் உள்ளது.

“இந்தக் கெடுத்தம் பால்காரன் கொண்டுவந்த பால் இப்போது கறந்ததுபோல் இனிக்கிறது” என்ற வாக்கியத்தில் இச்சொல்லின் பயன்பாடு காண்க.

கெடு என்ற சொல் கெடுவு என்றும் வருதலுண்டு; இது அகரவரிசைகளில் இடம்பெற்றுள்ளது.

கெடுத்தம் என்பது அகரவரிசை தொகுத்தோரை ஏமாற்றி ஒளிந்துகொண்டது வியப்பே ஆகும். இது விடப்பட்ட சொல் என்பது முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. 

சனி, 11 நவம்பர், 2017

சகஸ்ர என்ற சொல்



ஆ என்று வியந்து பெரிது பெரிது என்ற சொல்லிக்கொண்டு ஆயிரம் என்ற சொல்லை அமைத்த தமிழன், அவனுடன் ஒட்டிய இன்னொரு மொழிக்கும் அதே பாணியில்தான் ஒரு சொல்லை அமைத்துப் போற்றினான்.
ஆயிரம் பார்த்தவுடன் அகமே அசந்து போகிறதன்றோ?

அகம் + அசர் + அம்
அக + அசர் + 
       சக + சர ( இரண்டு துண்டுச்சொற்களின் தலையிலும் சகரம் ஏறிக்கொண்டது)
      சகசர சகஸ்ர.
      ஸகஸ்ர


அகர முதலாய சொற்கள் சகர முதலாய்த் திரியும்
என்பது முன்னே பலமுறை சொல்லப்பட்ட.து

ஆயிரத்தையும் சகஸ்ரத்தையும் கண்டு அசந்த காலம் மலையேறிவிட்டாலும் இந்தச் சொற்களில் அவை அகன்றுவிடாமல் உள்ளன.

ஆயிரம் அறிந்த தமிழர்.



ஆயிரம் என்ற சொல்லைப் பண்டைத் தமிழர்கள் எப்படி அறிந்தனர் அல்லது அமைத்துக்கொண்டனர்?

தாமே அமைத்தற்குத் திறமோ அறிவோ முயற்சியோ இல்லாதவிடத்து,  அல்லது அமைத்துப் பயனோ பயன்படு தருணங்களோ இல்லாதவிடத்து,  அல்லது குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுமிடத்து அமைக்கமாட்டார்கள். அங்கனம் இல்லையாயின் அமைத்திருப்பர்.

காட்டிலோ, கரையிலோ காலங்கழித்துக்கொண்டிருந்த முந்தியல் மாந்தனுக்கு,  ஆயிரமென்பது ஒரு பெருந்தொகையே. பத்தும் நூறும் அறிந்தபின்பே அவன் ஆயிரத்தை எட்டமுடியும்.

ஒன்றை அறிந்து பழகியபின் இரண்டு அறிந்தகாலை அவன் அதைப் பெரிது என்று கருதினான்.  இரு என்ற சொல்லுக்கு இன்னும் பெரிது என்ற பொருள் தமிழில் இருக்கிறது. 

ஒன்பதின் பின் பத்து என்பது பலவாகத் தெரிந்தது. அங்கனமே பொருள்படுஞ்  சொல்லை அவன் அதற்கு ஏற்படுத்தினான்.  

ஆயிரமென்பது ஆகப் பெரிதாகத் தோன்றிய எண்.
ஆ =  வியப்பும் குறிக்கும் சொல். ஆக  என்பது இறுதியும் குறிக்கும்.
இரு=  பெரியது.
அம் :  விகுதி.
இச்சொல்லின் பொருளும் “ ஆகப் பெரிது”  என்பதுதான்.
ஆ+ இரு + அம் = ஆயிரம்.
ஆ என்று வியத்தகு  பெரிதாய ஓர் எண்.
இலக்கம் கோடி என்பன கண்டகாலை, ஆயிரம் சிறிதாகிவிட்டது.