ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தீப ஒளித் திருநாள் ( தீபாவளி).

தீப  ஒளித்  திருநாள் ( தீபாவளி).



காட்டினில் கற்கள் உரசி ---- அது
கனலோ டெரிந்தது கண்டாளோர் அரசி;
வீட்டினில் தீயதைக் கொணர்ந்தே ---- ஒரு
தீபமாய் ஏற்றினள்  அன்பனும் இணைந்தே,.

இருட்டினில் வாழ்ந்தவன் மாந்தன் ---- சூழ்
கருப்பினைக் கண்டு வெறுபினில் ஆழ்ந்து;
விரட்டினன் தீபத்தின் அளியால்---- விழுமிய
வேகத்தை ஆக்கினன் போகமாம்  ஒளியால்

தீப  ஒளித்திரு வினையே  ---- கண்டு
தினங்கூத் தாடினும் தேவுறு  ஓர்நாள்;
ஈவ துடன்மனத் தன்பில்  ----  இல்லத்
திருக்கும் உணவனைத் தும்கலந்துண்போம்.

தீப ஒளித்திரு  நாளின் ---- மேன்மை
தேர்ந்து தெளிந்திட்ட முன்னவர் எல்லாம்
ஆவ தனைத்துமிந் நாளில் ---- என்று
அமைத்துச் சிறப்பை இணைத்திணைத் துள்ளார்.

பழையதில் புத்தாக்கம் செய்தார் ---- நாம்
பயனுடைத் தீபத்தின் மேன்மையை எய்த
விழைவதை எந்நோக்கம் என்று ---- எண்ணி
விரிக்காது தீபத்தின் ஒளிகாண்க வென்று,

சனி, 14 அக்டோபர், 2017

சில நாடுகளில் தீபாவளி விடுமுறை நிலைமை



தீபாவளியைக் கைவிட்ட  நகராண்மைத் தலைவர் (மேயர்)

நியூ யார்க் நகராண்மைத் தலைவர் (மேயர்)  தீபாவளியையும் சந்திரப் புத்தாண்டையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க மறுத்துவிட்ட்தாகத் தெரிகிறது.

பொரறுமையுடன் தொடர்ந்து முயன்றால் அத்தலைவர் இவற்றையும் விடுமுறைகளாக அறிவிக்க இணங்குவார்  என்று நம்பலாம்.

நியூ யார்க வட்டார மக்கள்  தொடர்ந்து தீபாவளிக்காக முயற்சி மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

தகவல் இங்கே::


 
2016ல் தீபாவளி பாகிஸ்தானில் விருப்ப விடுமுறையாக இருந்தது.  இவ்வாண்டு  அது விலக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் இந்துக்கள் சொந்த விடுப்பு  எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகிறது.


வெள்ளி, 13 அக்டோபர், 2017

தவம் தியானம் நிட்டை ( நிஷ்டை).

இக்காலத்தில் யாரும் தவம் செய்துகொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுதலில்லை.  தியானம் செய்வதாக நாம் அறிந்துள்ளோம். மனத்தை ஒரு நிலைப்படுத்தி  ஓரிடத்தில் இருப்பதை நாம் தியானம் எங்கிறோம்.

ஒரு விளக்கையோ  அல்லது தீபத்தையோ கொளுத்தி முன் வைத்து அதை நோக்கியவாறு மனம் நிலை நிறுத்துவதென்பது ஒரு வகையாகும். ஒரு கண்ணாடிமுன் அமர்ந்து தியானம் செய்தோரும் உண்டு.

விளக்கு மற்றும் கண்ணாடி முதலான  உதவிப்பொருட்கள் இல்லாத முன் காலத்தில் தீயை உண்டாக்கி முன் அமர்ந்தனர் என்று தெரிகிறது. தீக்காய்ந்துகொண்டு தியானத்தில் ஈடுபடும்போது  “அகலாது  அணுகாது” அமர்ந்து ஈடுபடவேண்டியது செய்வோனின் கடமை ஆகும்.
“தியானம்” என்னும் சொல்லில் தீ + ஆன+ அம் என முன் இரு சொற்களும் இறுதி விகுதி (மிகுதி)யும்  உள்ளன.  இது உதவுபொருளைக்கொண்டு, முதற்செயலை விளம்பிய நிலையைக் காட்டுகிறது.

தவமென்பது,  அழித்தல், கெடுத்தல் என்று பொருள்தரும் சொல்லினின்று வருகிறது.

தபுதல் - கெடுதல், கெடுத்தல், அழித்தல். மாற்றுதல்.

தொடர்ந்து வரும் பிறவியையும்,  வினைகளையும் கெடுத்து நிறுத்தவேண்டும்.  தொடராமல் அவற்றுக்குக் “கெடு” வைக்கவேண்டும். கெடுத்தல் என்பது அது தொடரும் காலத்தை முடித்தல்.

தபுதல் என்பது ஒரு அருஞ்சொல்லாக இல்லை?

தப்புதல் என்பதில் ஒரு ப் எழுத்தை எடுத்துவிட்டால் அதுவே தபுதல். தப்புதல் என்பதும் விடுபடுதல் என்ற பொருளை உடையது.  அதிலிருந்து தோன்றிய தபுதல் என்பதும் அந்த எல்லைக்குள்தான் நிற்கின்றது.

தபுதாரநிலை என்றால் தாரமிழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

 தபு + அம் = தபம், ப -  வ திரிபாகி தவம் ஆகும்.

தபு+ சு =  தபசு.  (சு விகுதி; )  சு விகுதி பெற்ற சொற்கள் பல.  கா+சு = காசு.  (காக்கப்படுவதாகிய பணம்).

நிட்டையில் அமர்தல் என்பது நெடு நேரம் அமர்ந்து மனம் நிலை நிறுத்துதல்.

நீடு + ஐ =  நிட்டை. இது பின் நிஷ்டை என்று மாறிற்று. முதனிலை குறுகி விகுதிபெற்ற சொல்.

சா+வு+அம் = சவம் போல.

தொழுதல் என்பதையும் விளக்குவோம். பின்.