வெள்ளி, 13 அக்டோபர், 2017

தவம் தியானம் நிட்டை ( நிஷ்டை).

இக்காலத்தில் யாரும் தவம் செய்துகொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுதலில்லை.  தியானம் செய்வதாக நாம் அறிந்துள்ளோம். மனத்தை ஒரு நிலைப்படுத்தி  ஓரிடத்தில் இருப்பதை நாம் தியானம் எங்கிறோம்.

ஒரு விளக்கையோ  அல்லது தீபத்தையோ கொளுத்தி முன் வைத்து அதை நோக்கியவாறு மனம் நிலை நிறுத்துவதென்பது ஒரு வகையாகும். ஒரு கண்ணாடிமுன் அமர்ந்து தியானம் செய்தோரும் உண்டு.

விளக்கு மற்றும் கண்ணாடி முதலான  உதவிப்பொருட்கள் இல்லாத முன் காலத்தில் தீயை உண்டாக்கி முன் அமர்ந்தனர் என்று தெரிகிறது. தீக்காய்ந்துகொண்டு தியானத்தில் ஈடுபடும்போது  “அகலாது  அணுகாது” அமர்ந்து ஈடுபடவேண்டியது செய்வோனின் கடமை ஆகும்.
“தியானம்” என்னும் சொல்லில் தீ + ஆன+ அம் என முன் இரு சொற்களும் இறுதி விகுதி (மிகுதி)யும்  உள்ளன.  இது உதவுபொருளைக்கொண்டு, முதற்செயலை விளம்பிய நிலையைக் காட்டுகிறது.

தவமென்பது,  அழித்தல், கெடுத்தல் என்று பொருள்தரும் சொல்லினின்று வருகிறது.

தபுதல் - கெடுதல், கெடுத்தல், அழித்தல். மாற்றுதல்.

தொடர்ந்து வரும் பிறவியையும்,  வினைகளையும் கெடுத்து நிறுத்தவேண்டும்.  தொடராமல் அவற்றுக்குக் “கெடு” வைக்கவேண்டும். கெடுத்தல் என்பது அது தொடரும் காலத்தை முடித்தல்.

தபுதல் என்பது ஒரு அருஞ்சொல்லாக இல்லை?

தப்புதல் என்பதில் ஒரு ப் எழுத்தை எடுத்துவிட்டால் அதுவே தபுதல். தப்புதல் என்பதும் விடுபடுதல் என்ற பொருளை உடையது.  அதிலிருந்து தோன்றிய தபுதல் என்பதும் அந்த எல்லைக்குள்தான் நிற்கின்றது.

தபுதாரநிலை என்றால் தாரமிழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

 தபு + அம் = தபம், ப -  வ திரிபாகி தவம் ஆகும்.

தபு+ சு =  தபசு.  (சு விகுதி; )  சு விகுதி பெற்ற சொற்கள் பல.  கா+சு = காசு.  (காக்கப்படுவதாகிய பணம்).

நிட்டையில் அமர்தல் என்பது நெடு நேரம் அமர்ந்து மனம் நிலை நிறுத்துதல்.

நீடு + ஐ =  நிட்டை. இது பின் நிஷ்டை என்று மாறிற்று. முதனிலை குறுகி விகுதிபெற்ற சொல்.

சா+வு+அம் = சவம் போல.

தொழுதல் என்பதையும் விளக்குவோம். பின்.



சிகை பூமி பூவுலகு ... சொல் அமைந்த விதம்


இகுத்தல் என்பது குழைத்தல், மறித்தல் என்றும், இகுப்பம் என்பது திரட்சி  என்றும் பொருள்படுவன‌.

சிகை என்பது ஒன்றாகக் குழைத்து வேண்டியாங்கு மறித்தும் திரட்டியும்
கட்டப்படுவது.

இகு> இகை;
இகை > சிகை.

இது எளிதான அமைப்புச்சொல்.

அகரவருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்; அதாவது அ>, >சா, > சி என்று இப்படியே நெடுகிலும் வரும்.

குழைத்து, அதாவது திரட்டிக் கட்டப்படுவதால் தலைமுடிக்கு குழல்
என்றும் பெயர். கூட்டிக் கட்டப்படுவதால் கூ > கூ + தல் > கூந்தல்
என்றும் பெயர்.

இகுத்தல் என்பது குழைத்துத் திரட்டுதல் ஆதலால்,

இகு> இகு+ = இகை > சிகை ஆனது.  இகு> சிகு > சிகை எனினும் ஆம்.

இகு என்பது சுட்டடிச் சொல்.  = இவ்விடம்;  கு = அடைவு அல்லது
சேர்தல் குறிக்கும் மிக்கப் பழங்காலச் சொற்கள். இன்னும் நம் மொழியில் உள்ளன‌. இங்கு தலையில் வளர்வதை இங்கேயே குழைத்துக் கட்டுதலைக் குறிக்கும். எனவே சிகை அழகிய கருத்தமைதி கொண்ட சொல். +கு என்பதிலிருந்து திரிந்து அமைந்தது.  கு என்பதும் அவனுக்கு, சென்னைக்கு என்று இன்றளவும் வழங்கி சேர்விடம் உணர்த்துகிறது.

தமிழை நன்குணர ஓர் ஆயுள் போதாது. இங்கே(தலையில் வளர்வதை)
இவ்விடமே குழைத்துத் திரட்டிவைக்கும் செயல் இகு> சிகு> சிகை.
இங்கிருப்பது அங்கு செல்லுமானால் இ+அம்+கு = இயங்கு என்பது
இதற்கு மாறுதலாக அமையும் ஒரு கருத்து.  இவையெல்லாம் திட்ட்வட்டமான அமைப்புகள்.

அறிந்து மகிழுங்கள்.
--------------------------------

பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள்,  பூ மலர்தல் ஆகும்.

ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன.

தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.

இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாகும்,

புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது  என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே ஆகும்.

மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது ஆகும் ‍  :  தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.

பூ > பூவுலகு.  ( பூ+ உலகு).
பூ >  பூமி.    ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ ‍= தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்>  வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி ‍: பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:‍
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.

இவற்றையும் ஆய்ந்து தெளிக.


---------------------

இது  பின் மறுபார்வை  செய்யப்படும்


புதன், 11 அக்டோபர், 2017

பிள்ளை (சொல்), பிள்ளை (பட்டம்). சொல்லமைப்பு.

இனிப் “பிள்ளை” என்னும் சொல்லினை ஆய்வு செய்வோம்.
பிள்ளை என்பதில் இரு துண்டுகள் உள்ளன. ஒன்று பிள் என்பது.  மற்றது “ஐ”  என்னும் விகுதி.
பிள்ளை (கைப்பிள்ளை, பால்குடிக்கும் பிள்ளை, என்பன போலும் வாக்கியங்களில் வரும் பிள்ளை) என்பதற்குரிய வினைச்சொல்:  பிள்ளுதல் என்பது.

பிள்ளுதல் என்பதென்ன.

இதன் பொருள் :  ‘பிரிந்து தனியாய் இருத்தல்’.

பிள்ளுதல் எனற்பாலதற்கு அகராதி தரும் பொருளையும் அறிதல் நலம்.  1. நொறுங்குதல் 2.  பிளவுண்டாதல்.  3.விள்ளுதல்.  4. வெடித்தல்.  5. வேறுபடுதல்  ---  என்பன இச்சொல்லின் பொருளாகக் கூறப்படுகிறது. வெவ்வேறு அகரவரிசைகள் பொருள் அடைவில் சற்று வேறுபடலாம்.

இச்சொல்லில் மையக்கருத்தாக இருப்பது,  ஒருபொருள் இரண்டாக மூன்றாகப் பலவாகப் பிரிதல் என்பதே.  பாருங்கள்:   நொறுங்குதலில் ஒரு துண்டு பலவாய் ஆகிவிடுகிறது.  உருவில் சிறுமை  பருமை ஏற்படாமலா?
பிள் என்பதோ ஓர் அடிச்சொல்.  அது இன்னும் திரியும். பிள் > பிடு என்று வினைச்சொல் ஆகும். வினையினின்றும் இன்னொரு வினை.  

 பிடு>பிடுதல்.
பிடு> பிட்டு ( உணவுவகை).

பேச்சில் புட்டு,  புட்டு வீசு என்றெல்லாம் வருதல் கண்டிருப்பீர்கள்.  புட்டுபுட்டு வைக்கிறாள் என்பது வாக்கியம்.  கவனிப்பு:   பி ( இகரம் )  உகரமாய்த் திரிந்தது (உ).

இப்போது பிள்ளை என்ற சொல்லமைபு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  1 (அமைபு என்பது அமைநெறி குறிக்கும் சொல். சிறு வேறுபாடுதான். )

பட்டப்பெயர் பிள்ளை:

   பண்டை அரசர்கள் பலதார மணமுறை கடைப்பிடித்தோர். ("பன்மனையம்"POLYGAMY .  )  ஒருவனுக்கு ஒருத்தி என்ற கிறித்துவ நெறி அப்போது நடப்பில் இல்லை.2  எனவே அரசனின் பல்வேறு மனைவியருக்குப் பிறந்தோரும் கொள்வனை கொடுப்பனை உடையோரும் பிறதுறைகளில் சிறந்துவிளங்கினோரும் நிலக் கிழார்களும்  “பிள்ளை”  பட்டம் அடைந்தனர். இதேபோல் பிற பட்டப்பெயர்களும்  நெறிகொண்டன. இராமாயணக் கதையில் இராமன் ஒற்றைமனையம் 3 மேற்கொண்டிருந்தாலும் ( ஏகபத்தினி விரதனானாலும் ) அது மக்களுக்குரிய நடப்பில் இல்லை.



பிள்ளை என்ற சொல்லின் பொருள்:  1.   பெற்றெடுத்தது என்பது நடைமுறைப் பொருள். இது வழக்காற்றினின்று பெறப்படுகிறது.  சொல்லமைப்புப் பொருள்: பிரிந்து தனியானது என்பது.  அதாவது தாயிலிருந்து பிரிந்து தனியானது.  பிறந்து தனியாய் இயல்வது.

2. பிள்ளை என்பது பட்டமாய் வருகையில்,  அரசனிடமிருந்து பிரிந்த தனிவாழ்வினர் என்று சொற்பொருளுரைத்தல் வேண்டும். இவர்களுக்கு அரசன் என்ன உதவிகள் அல்லது ஆதரவுகள் வழங்கினான் என்பது சொற்பொருளில் அடங்காத தனிநடப்பு ஆகும்.


ஆயும் மகளும் ஆயினும் வாயும் வயிறும் வேறென்ற தமிழ்நாட்டுப் பழமொழி இங்கு கவனத்தில் கொள்ளற்பாற்று.
 
-------------------------------------------

Footnotes:-

1.சொல்லமைப்பு என்பது சொல்லமைபு என்றும் சொல்லமைவு என்று ஏற்ப உருக்கொள்ளும், அறிக.

2. (What God hath put together, let no man put asunder ) . The dictum in Bible disallowing divorce.

3 Monogamy 

Further reading:   Polyandry in Ancient India by Daman Singh.