செவ்வாய், 10 அக்டோபர், 2017

நட்டம்......



பல சொற்களை விளக்கவேண்டுமென்று எண்ணினாலும் எண்ணுவதெல்லாம் நடைபெற்றுவிடுவதில்லை. சில இப்போது  அகன்று பின் ஒரு நாள் தோன்றும்.  அப்போது அவற்றைப் பிடித்து இங்கு இடலாம்.
இப்போது நட்டம் என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

இது ஒரு பேச்சுமொழிச் சொல்.   நட்டம் என்று இருந்து பின் நஷ்டம் என்று மெருகு பூசப்பட்ட சொல். சிலர் இதை நஸ்டம் என்று உச்சரிப்பதைக் கேட்டிருக்கிறேன்

எந்த முயற்சியும் நடுவில் நின்று போய்விட்டால் அது நட்டம் ஆகிறது.
நடு > நட்டம்.  (  நடு + அம்).

பத்துகல் தொலைவு செல்லப் புறப்பட்ட ஒருவன், ஐந்து கல் தொலைவிலே அதைத் தொடரமுடியாமல் போனால் , நடந்த ஐந்து கல் நட்டம் அன்றோ? மீண்டும் ஐந்து நடந்து தொடங்கிய இடத்துக்குப் போகவேண்டுமே!

பத்துக் கல்தொலைவு சென்று எதைச் சாதிக்கவேண்டுமென்று நினைத்தானோ  அதையும் கைவிடவேண்டி ஆனதே!

இனி இருபக்கமும் நகரமுடியாமல் போன நிலையாயின் அதுவும் பெரிய நட்டமே!

வாழைப்பழம் ஏற்றிக்கொண்டு இன்னும் ஐந்து கல் சந்தைக்குப் போகாமல், வீடு திரும்ப்பிப் பழங்களும் பயனற்றுப் போம்படியோ அல்லது  ஐந்துகல்லிலே நடுவில் நின்றுவிட்டாலோ.......!

இத்தகு நிலைகளில் உருவானதே     நட்டம் “ என்னும் சொல்.
இக்காலத்து நட்டங்கள் வேறுமாதிரியானவை.  ஆனால் சொல்லோ பழையது.  பழமையை நோக்கியே உணர்க.

நடு >   நட்டம்......
  


ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தளபதி,

தளபதி என்ற சொல்லமைப்பு:

இங்குக் காண்க:  (சொடுக்கவும்)

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_27.html

அடிச்சொல்: தள் என்பது.

தள் > தள்ளு என்று வினைச்சொல் வடிவமாகும்.

கால் என்பது உண்மையில் உடல் (முண்டத்திலிருந்து ) வெளித்தள்ளிய
பகுதி.

தள் > தாள் (முதனிலை நீண்டு பெயரானது )
தாள் + அம் > தளம் ( இது விகுதி பெற்றுக் குறுகியது ).  base,  foot-like set up.
சாவு > சவம் என்பது போல,

தள் + அம் = தளம்  எனினும் அமையும்,

தள் என்ற அடிச்சொல் வெளிப்படுதல் என்பது குறிக்கும்.

தள்> தள்ளை.  ( பிள்ளையை வெளிப்படுத்துபவள்,  அதாவது தாய்).


அரண்மனைக்கு வெளியில் தக்க இடத்தில் அமைக்கப்படுவது ஒரு தளம்,
ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் இருக்கலாம். இவற்றுள் பதிந்து இவற்றை நடத்துபவன் தளபதி. பதிதல் > உள்ளமைதல்.  பதிதல் > வதிதல் > வசித்தல். திரிபுகள்.
ப>வ;  தி>சி.

மறுபார்வையிட்ட தேதி:  27.3.2018  7.42 காலை

ஐயப்ப பூசை.



ஐயப்பனைத் தொழுதல்.

வேண்டியதோர் நன்மைக்கே எந்த நாளும்
விழுந்துவணங்  கிடுவீரே ஐயன் தாளில்;
ஆண்டிமுதல் அரசன்வரை ஆர்க்கும் நெஞ்சை
அள்ளித் தருவோன் என்னில் ஐயன் தானே!
தீண்டுவதும் அனைத்தும் பொன்  காண்டல் உண்மை;
தேடுவதும் ஓடிவரும்  திகைந்த நாளில்;
மீண்டுவரு பிறவிகளை மெல்லப் போக்க
மேன்மைதரு மேலுலகும் வாய்க்கும் இன்றே.

தாளில் -  கால்களில்;
காண்டல் -  காணுதல். 
பொன் காண்டல்: பொன்னாகக் காணுதல்.
ஆர்க்கும் - யார்க்கும்.
திகைந்த -  உறுதிசெய்த;