வாகனம்.
இப்போதெல்லாம் வண்டி
என்ற சொல்லை அவ்வளவாகப் பேச்சு வழக்கில் எதிர்கொள்ள முடியவில்லை. மாட்டு வண்டிகளில்
மக்கள் பயணித்துக்கொண்டிருந்த காலங்களில் இச்சொல் மிகுதியாக வழங்கியிருக்கும். அப்போது
தமிழில் உரையாடினோருக்கு, “கார்ட்” அல்லது “புல்லோக் கார்ட் “ என்ற ஆங்கிலச் சொற்கள், தமிழர்தம் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை. ஆகையால் வண்டி, மாட்டு வண்டி என்பன இயல்பான பேச்சுச்
சொற்றொகுதியில் முன் நின்றன. உந்துகள் பயணப்புழக்கத்தில்
வந்தபின்பு, அவற்றை “வண்டி” என்று சொல்லாமல், வேறுபடுத்தும்பொருட்டு “கார்” என்றனர்.
இதற்குக் காரணம், மாட்டுவண்டிகளும் அங்குமிங்கும்
பயன்பாட்டில் இருந்தன. சிங்கப்பூரில் மாட்டு வண்டிகள் 1950 ம் ஆண்டுவரையில் காணப்படுவனவாய்
இருந்தன என்று சிலர் நினைவுகூர்கின்றனர். ஆகவே வேறுபடுத்தவேண்டிய சூழ்நிலை இருந்தது. பின் அவை மறைந்தன. பஃவலோ சாலை (ரோட்). கிருபோ சாலை ( ரோட்) முதலிய வீதிப்
பெயர்கள் இக்காலத்தை இன்னும் முன்நிறுத்திக்கொண்டுள்ளன.
“கண்டங் கிருபோ” ( மாட்டுக்கொட்டகை) என்ற இடப்பெயரும் இதை நினைவுபடுத்தும்.
இப்பெயரில் இன்னும் ஒரு மருத்துவமனை உள்ளது என்றாலும், அதன் கட்டிடம் புதியது ஆகும். பழைய சிறுகுற்றங்கள் சட்டம் Minor Offences Ordinance (later "Act" ) மாடுகளைக்
குறிப்பிடும் சட்ட வரிகள் உண்டு..
வண்டி என்ற சொல் இன்னும் மலையாள மொழியில் நன்கு வழக்கிலிருக்கின்றது. தமிழில்
வண்டி என்பது பெரும்பாலும் தனியே வழங்காமல் “ உந்துவண்டி” என்பதுபோலும் கூட்டுச்சொல்லில் வருகிறது. இற்றை
நாளில் “உந்து” “பேருந்து “ என்று வண்டி என்ற ஒட்டு இல்லாமல் வருவது ஒரு வளர்ச்சியே எனலாம்.
தொடர்வண்டி என்பது இன்னும் தமிழாசிரியன்மார் ஏற்றுக்கொள்ளும் பெயர்த்தொடரே. இது இப்போது “தொடரி” என்று குறிக்கப்படும் காலம்
வந்துள்ளது என்று தெரிகிறது.
ஆனால் பொதுவாகப் பலவகை வண்டிகளையும் குறிக்குங்கால் அவற்றை “வாகனங்கள்” என்று சொல்வதும் வழக்கில் உள்ளது. இந்தச் சொல் எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.
கனமில்லாத பொருள்களைப் பழங்கால மனிதனும் இக்காலத்தவனும் கையிலே எடுத்துச்சென்றுவிடுவான். அதற்கு “வண்டிகட்ட” மாட்டான். கனமானவை வருதற்கு “வாகனம் “ வேண்டும். இந்த வாகனச் சொல், கனமானவை கொணரும் ( நடமாட்டப்) பொருள் என்ற கருத்தினடிப்படையில் எழுந்ததா? சொல். மிக்க எளிமையாக, வா+கனம் என்று இருசொற்களைக் கொண்டு
காணப்படுகிறது.. இது முதலில் விலங்குகளைக் குறித்தது. எருமை ஒரு வாகனம், மயில் ஒரு வாகனம், பாம்பு ஒரு வாகனம், ஆனால் இவை வண்டிகள் அல்ல. இவற்றில்
சிலவற்றை மனிதன் பயன்படுத்தினான். வேறுசிலவற்றை
அவன் வழிபட்ட தெய்வங்கள் பயன்படுத்தல் கருதிக் கொடுத்தான். ஆகவே சொல் எப்படி அமைந்தது
என்பது நன்கு ஆய்தற்குரித்தென்க.
தொடந்து சிந்திப்போம்.
Some unwanted dots appearing in the text have been deleted.
We hope this piece appears correctly on your screen.. It is now
justified to soothe your eyes.
Some unwanted dots appearing in the text have been deleted.
We hope this piece appears correctly on your screen.. It is now
justified to soothe your eyes.