வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

சீனாவில் ஆண்டில் 260000 விபத்தில் இறப்பு.



எந்த மூலை ஆன போதும் உலகமீதிலே
இனிய மனித உயிர்கள் மாள்வ தோவிபத்திலே
உந்து வண்டி ஓட்டு நர்கள் சாலைமுத்தமோ
உடைதல் நெளிதல் வளைத லாகும் பொருளிழப்பிலே.

இரண்டி லக்கம் ஐம்ப  தாயி ரம்உ   யிர்களே
இறந்து போயி  னார்கள் என்ப வண்டிமுட்டிலே
திறந்த தேசம் எனறி டாத சீனநாட்டிலே
தெரிந்த புள்ளி விவரம் இங்குக் கூறப்பட்டதே.

இந்த உயிர்கள் தம்மைக் காக்க என்னசெய்தனர்
என்ப தொன்றும் யாம றிந்த செய்தி அல்லவே
வந்த செயதி கொண்டு சொல்லும் வாய்த்தளர்ச்சியே
வழக்க மான உளறல் அன்றிக் குதர்க்கமில்லையே.

சாவில் பாதி யேனும் குன்ற யாதும் செய்வரோ/?
செத்த நேர்ச்சி மட்டுக் கொள்ளு மாயின்நன்மையே
நோவி லாத குமுக மாதல் ஞாலப்பார்வையே
நூறு பாதி ஆயின் நொந்தும் இங்குசொர்க்கமே..



செய்தி விவரம் இங்கு:
http://www.chinadaily.com.cn/china/2016-05/24/content_25442984.htm 

உந்து வண்டி -motor cars (here accept this as all vehicles)
ஓட்டுநர் - drivers
சாலைமுத்தம் -  வண்டிகள் சாலையில் இடித்துக்கொள்வது

இரண்டிலக்கம் ஐம்பதாயிரம் 250,000
வண்டி முட்டு - சாலை விபத்து TRAFFIC ACCIDENT
அல்லவே - (  அன்று என்னும் ஒருமையைப் பயன்படுத்தவில்லை ) 
பேச்சு வழக்கு பின்பற்றப்பட்டது.  இலக்கணப் படி அன்று என்பதே சரி
எனவே ஒருமை பன்மை மயக்கம் ஆகிறது.
வாய்த்தளர்ச்சி - விசாரிக்காத பேச்சு.
குன்ற - குறைய
நேர்ச்சி - இங்கு விபத்தினால் இறப்பைக் குறிக்கிறது.
நோவு - துன்பம் 
ஞாலப்பார்வை - உலகநோக்கு
நொந்தும் - துன்பமிருந்தாலும்.
 

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

52 வயதாகும் சிங்கைக்கு வாழ்த்து.



பல்லோர்க்கு வாழ்வாக்கும் சிங்கை;--- என்றும்
பாரினிலே மேலோங்கித் தங்கும்;
நல்லோர்க்குக் காப்பாகும்  நங்கை  --- எந்த
நாவினரும் போற்றுவரே எங்கும்..

ஐம்பத்தி ரண்டாகும் ஆண்டில் --- இவள்
ஆர்ந்தபுகழ் எல்லாமும் ஈண்டிப்,
பைம்பொன்னாய் நல்லொளியே உற்றுச்  --- செய்யும்
பணியாவும் கனியாதல் பெற்றாள்

முன்னோடி வாழ்குடியில் யார்க்கும் --- இங்கு
மூள்கின்ற நோய்மிடிகள் தீர்க்க,
தன்னாலே முன்வந்து நன்மை --- கண்டு
தக்கவழி செய்சிங்கை உண்மை.

நன்னாடு சிங்கைமிக வாழ்க ---- எம்மை
நாடிவரும் துன்பமெலாம் வீழ்க!
விண்ணாடு மேகங்கள்  பெய்க --- மக்கள்
வென்றாடு மன்றேறி உய்க

விருத்தத்தை வெண்பாவாய் மாற்றுவது ...எப்படி?




ஆங்கில மொழியில் ஒரு பழமொழி இருக்கின்றது. ஒன்றைப் பலவழிகளிலும் செய்யலாம் என்ற பொருளுடையது அது.  இப்போது இந்தப் பாடலைப் பாருங்கள்.  இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்போல் புனையப்பட்டுள்ளது.  பாடுபொருள் அருள்மிகு துர்க்கையம்மன்.


என்றும் சுமங்கலி துர்க்கையம்மன்
இணையில் துணையென நிற்பவளே
வென்று மகிழ்வுறு வாழ்வினிலே
வினைகள்


இந்த வரிகளிலிருந்து சீர்களை எடுத்துக் குறள்வெண்பா போல் அமைக்கலாம்.


சுமங்கலி துர்க்கையம்மன் என்றும் இணையில்
துணையென நிற்பவளே வென்று.


வெண்டளை மட்டுமே வந்துள்ளது.  வேற்றுத் தளை விரவாமல்
தொடுக்கப்பட்டுள்ளது.  சொற்களை மாற்றிப் போட்டால் குறள் போல
ஒலிக்கிறது.  என்ன ஆனந்தம்.  இதைக் குறளாக மாற்றுவதற்கு
இன்னொரு மாற்றம் செய்யலாமே:


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் என்றும்
துணையென நிற்பவளே வென்று.


சீர்களை மாற்றிப் போட்டதில் எதுகைகள் வந்துவிட்டன.  மோனையை
வரவழைக்கச் சில மாற்றங்கள் தேவை.


இணையில் சுமங்கலி துர்க்கையம்மன் இன்றும்
துணையெனத் தோன்றுவளே வென்று.


இப்போது ஒரு குறள்போல மாறிவிட்டது. (குறள்வெண்பாதான்).  (தொல்காப்பியர் குறளைக் குறுவெண்பாட்டு என்பார். ) மேற்கண்ட விருத்தத்தை வெண்டளையில், செப்பலோசையில் அமைத்துப் பாடியதால் எளிதாக மாற்றிவிட்டோம். மிச்சமிருப்பதை நீங்கள் மாற்றி விளையாடி மகிழுங்கள்.

ஸ்ரீ சிவதுர்க்கா துணை.