புதன், 12 ஜூலை, 2017

யாத்திரை

இப்போது   யாத்திரை என்ற பதம் காண்போம்.

இந்தச்  சொல்  யாத்தல் என்ற தொழிற்பெயருடன் தொடர்பு உடையது.

யாத்தல்  : பொருள்:  கட்டுதல் என்பது.

யா + திரை =  யாத்திரை.

திரை என்பதொரு விகுதி.       இன்னொரு எடுத்துக்காட்டு:   "மாத்திரை".மா= அளவு.  மாத்திரை:  அளவு, ஒலி அளவு.

ஒரு  பயணம் மேற்கொள்கையில் எந்த இடத்தில்   போய்ச்சேர்வது,  எதை எதைக் காண்பது, என்ன என்ன செயல்களில் ஈடுபடுவது,
என்ன ஊர்திகளைக் கொண்டு செல்வது, என்பனவும் பிறவும்  ஒரு கட்டுக்குள் கொண்டுபரப்பட்ட  நிலையைக் காட்டுவது.  பயணத்தின் உள்ளீடுகள்  அனைத்தும் திட்டம் செய்யப்பட்டுள்ளன  என்று பொருள்.

யா>யாத்தல்  (மேலே).
யாத்திரை:  : யாக்கப்பட்ட பயணம்.
யாப்பு : பாடல் கட்டப்படுவது.
யாகம்  :  ஆன்மாவை சடங்குகள் மூலம் கட்டி இறுதியில் இறைவனுடன்  கட்டுவது.
யாக்கை  :   கட்டப்பட்டதாகிய  உடம்பு.    தசை,  எலும்பு  உறுப்புகளால்
கட்டப்பட்டது.






செவ்வாய், 11 ஜூலை, 2017

Terror attack on Amarnath pilgrims.

யாத்திரையாய் அமர்நாத்து நோக்கிச் சென்றார்
யாதொன்றும் யார்க்கெனினும் தீங்கே இன்றி
ஈத்துவக்கும் நெஞ்சினராய் பேருந்  துக்குள்
இனிதாக  ஊர்ந்துகொண்டே இருந்த வேளை
கூர்த்தகொடு தீவிரவா தத்தோர் சுட்டுக்
கொலைசெய்தார் எழுவரையே பல்லோர் காயம்;
ஆர்த்தபிற பயணிகளும் அஞ்சா நெஞ்சில்
அற்றுவிடாப் பற்றுடனே தொடர்ந்து வென்றார்.

இதைச்செய்து முடித்துவிட்டால் காசு மீரம்
இம்மென்று வந்திடுமோ மூட நோக்கில்
பதைபதைக்கப் பலர்செத்த போதும் என்ன‌
பயனையா  பாரிலென்ன கைக்குள் சேரும்;
எதைஎதையோ செய்வதெலாம் ஏறிச் சொர்க்கம்
இயன்றிடவே செய்திடுமோ மூளைக் கேடே!
வதைசெய்து பாவத்தின் வாய்ப்பட் டார்க்கு
வாய்த்திடுமே எரிநரகே அரனே வாழ்க.



ஈத்துவக்கும் = ஈந்துவக்கும், கொடையால் மகிழும்.
இங்கு எதுகை நோக்கி வலித்தல்.

இம்மென்று =  உடனே.

அரனே = கடவுளே







ஞாயிறு, 9 ஜூலை, 2017

நமோஸ்துதே.....வணக்கம்!!

இதுபொழுது புதுவதாய் ஒன்றினை அறிந்தின்புறுவோம்.

நாம் அறிந்துகொள்ள இருப்பது நமோஸ்துதே என்ற தொடராகும்.
நமோ என்பது வணக்கம் குறிக்கும் ஒரு பழஞ்சொல் ஆகும். இதைக்
கழித்தால் நாம் எடுத்துக்கொண்ட தொடரில் எஞ்சியிருப்பது "ஓஸ்துதே'
என்பதேயன்றோ?

நமோ+ ஓஸ்துதே = நமோஸ்துதே.

இந்த இரு துண்டுச்சொற்களும் புணர்த்திய வடிவமதுவாம்.


நமோ என்பதன் இறுதி ஓகாரத்தில் முடிந்ததாலும் ஓஸ்துதே என்பதன்
முதல் ஓகாரத்திலே திகழ்ந்ததாலும், இரண்டு ஓகாரங்கள் உள்ளன.
தேவையற்றதைப் புணர்ச்சியில் எடுத்துவிடுவது மொழிமரபும் இலக்கணமும் ஆகும்.

எனவே ஓர் ஓகாரம் கெடும்.    கெடும் எனில் இலக்கணத்தில்
விடப்படுமென்பது..   எனவே தொடர்  " நம்+ ஓஸ்துதே"   ஆகி, நமோஸ்துதே ஆகும்.

நமோ என்பதை முன்னர் விளக்கி வெளிப்படுத்தியுள்ளோம். ஆங்குக்
காண்க.

ஓஸ்துதே என்பது: ஓதுதே என்ற தமிழ் வினைமுற்று அன்றிப்
பிறிதில்லை.


நமோ ஓதுதே = நமோ என்று ஓதுகிறேன் என்பதற்காகும்.

இதில் ஒரு "ஸ்" ( ஸகர) ஒற்றினை இட்டு, மெருகு பூசி 
தமிழிலிருந்து பெறப்பட்டதென்பதை வெளிப்பாடு காணாமல்
இரகசியப்படுத் த ,   யாவும்  நன்மையாம் .


இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது. அதைப் பயன்படுத்துவதும்
 அதன் பழமை வெளிப்படாமல் புதுமை
இயற்றுவதும் கைகூடிவிட்டது.இனி நமோஸ்துதே என்பதற்கு
இலக்கணம் கூறுகையில் வேறுவிதமாக அமைந்தது என்று
காட்டினால் மாணவனும் அதில் புதுமை கண்டின்புறுவான்.
இதில் நட்டமென்ன?


எந்த மொழியும் ஒரே நாளில் உருப்பெறுவதில்லை
பல குகைகளிலும் பல மரக்கிளைகளிலும் மனிதர்கள் வாழ்கையில் 
மொழி  உருவாகி ,   பின்னொரு காலத்தில் அவர்கள் பேச்சுக்களையெல்லாம்
 ஒன்றுதிரட்டி  அதுவே   தமிழ் எனப்பட்டது. பின் உருவான மொழி,  
வே ற்றிடங்களிலிருந்து  சொற்களை எடுத்து, இன்னும் பலவற்றுடன் கலந்து
 இன்னொரு புதுமொழி உருவாகும்படி  ஆயிற்று.

. கதிர்காம வேலவா! உலகில் புதியது எது?

புதியது கேட்கின் விதியருள் வேலோய்!

புதிது புதிது புத்தியே புதிது...!