வியாழன், 29 ஜூன், 2017

தோது என்ற சொல்லை ...........

இன்று தோது என்ற சொல்லை அணுகுவோம்.

" இன்றைக்கு எப்படி?அவரைப் பார்த்துப் பேச முடியுமா? அவருக்கு எப்படித் தோது என்று தெரியவில்லையே!"

இப்படிப்  பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

தோது எனற்பாலது ஒரு தொடர்புக்கான வசதியைக் குறிக்கிறது.  தோதில்லை என்றால், அத் தொடர்பில்
ஈடுபடத் தருணமில்லை என்று பொருள்படும்.

தோது என்பது தோய் என்ற  வினையுடன், து என்னும் விகுதி சேர்ந்தது.  விகுதி சேர. யகர ஒற்று மறைகிறது.

தோய் >  தோய்து >  தோது.

இது பெருவரவினது அன்றோ?

இப்போது யகர ஒற்று மறைந்த சில சொற்களை நினைவு
கூர்வோம்.

தோய்+சை =  தோய்சை >  தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
உய் + (த்) + தி =  உய்த்தி >  உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி>  வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) +  இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
பெய் + தி =  பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ  நோ :   தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி =  வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.

எல்லாம் பட்டியலிட நேரமில்லை. படிக்க உங்களுக்கும்
நேரம் கிட்டுவது கடினம்.

புதன், 28 ஜூன், 2017

ரீதி.

இன்று ரீதி என்ற சொல்லைப் பார்க்கலாம்.

ரீதி என்ற சொல் உள்ள நிலைமை என்று பொருள்படும்.  "குடியுரிமை பெற்றவர்தாம் சங்கத்துக்குத் தலைவர் ஆகலாமென்ற  ரீதியில் பேசுவது தவறு. காரணம் நம்
சட்ட திட்டங்களில் அப்படி இல்லை"  என்ற வாக்கியத்தில்
ரீதி என்பது என்ன பொருளில் பயன்பாடு கண்டிருக்கிறது
என்று கவனியுங்கள்.

இருக்கும் நிலை என்பதே ரீதி ஆகும்.

இது இருதி என்ற சொல்லின் திரிபு.  இறுதி என்பது வேறு.

இருதி என்பது தன் தலையை இழந்ததுடன், ரு என்பது
ரீ என்று திரிந்துவிட்டது.

இருதி > ருதி > ரூதி > ரீதி.

இரு என்பது மலையாளத்தில் இரி என்று திரியும். ஆகவே
இரு > இரி > ரீதி எனினும் பொருத்தமே.  இங்கு தி என்பது விகுதி.

இரு + ஈ + தி =  இரீதி   எனின்,  இருப்பனவாகிய தன்மைகள் ஈயும் (கொடுக்கும்)  போக்கு என்று வரும். இதுவும் ஏற்புடைத்தே.  இது ஒரு பல்பிறப்பி ஆகும்.

இதைமேலும் விளக்கலாம்  எனினும் இதுவே போதுமானது.

செவ்வாய், 27 ஜூன், 2017

சொப்பனம்

சொப்பனம் என்ற சொல்லுக்கு  யாமெழுதிய
 ஆய்வுரை இப்போது கிட்டவில்லை.

மனிதன் உறங்கும்போது, கனவு கண்டு, சில
சொற்களைப் பன்னுவதுண்டு.  இது நன்றாக
ஒலிப்பதற்கும் உளறுவதற்கும் இடைப்பட்ட
 ஒரு நிலையாகும்.   பன்னுதலாவது
பல முறை ஒன்றைத் தடுமாற்றத்துடன் ஒலிப்பது.

சொல்லைப் பன்னுதல் >  சொற் பன்னம் .  சொப்பனம்
என்று இது வந்தது.

இது பேச்சு வழக்கு. பின் திரிந்து பொருளும் சற்று மாறி,
"கனவு" என்ற பொதுப்பொருளில் வழங்கி வருகிறது.
இச்சொல்லுக்குச்   சிவஞானபோதம் முதலிய நூல்கள்
வேறு பொருளை உரைப்பதுண்டு. ஆனால் அது தத்துவப்
பொருளாகும்.

சொப்பனம் என்பது  சொற்பனம் என்றும் எழுதப்படும்.
 சொற்பனம் என்பதே முந்துவடிவம் ஆகும்.
ஸொப்பனம்,  ஸ்வப்பனம், ஸொப்னம், ஸ்வப்னம்
என்று பலவாறு உருக்கொள்ளும் சொல் இதுவாகும்.


------------------------------------------------------------------------

Notes:

1.
சொப்பனம் என்பது ஆன்மா கழுத்தில் நின்று புலனுணர்ச்சிகள்
(   acts of   sense organs   ) ஒடுங்கி எண்ணங்கள் (   mind  )   ஓடும் நிலை
 ( சிவஞானபோதம் விளக்கம் )
More at:
https://sivamaalaa.blogspot.sg/2015/12/4.html.