புதன், 7 ஜூன், 2017

உந்தி விளைப்பது தீவிர வாதமோ!

பழம்பெரு மைபல பயின்றொளிர் நாடுகள்
பல்கிய மண்ணே வல்கலை நண்ணிலம்;

சட்ட மெனபதைக் கட்டி எழுப்பி
அசத்திய நாடு மெசோபோட் டேமியம்.

அம்மு ராபி அமைத்திட் டருளிய‌
குற்றச் சட்டங்கள் எற்றெனக் கேள்நலம்.

இந்த நாடுகள் இற்றை நிலையில்
உந்தி விளைப்பது தீவிர வாதமோ.

உண்மை உணரா வண்க ணாளர்கள்
உளுத்துப் பெருகினர் உலகின் மீதில்.

ஈரான் மன்றிலும் தீவெடி கூட்டினர்;
ஆராத் துயரே அகலுள் அனைத்திலும்

பாரத எல்லையில் பதட்டம்; ஆங்கு
ஊரினர் யார்க்கும் கூருகுண் டச்சம்,

அன்பின் வழியது உயிர்நிலை மறந்தார்
துன்பில் துவண்டார் உலகும் இருண்டது;

இனி இவ் வுலகம் மீளுமோ
கனிதொலைத் தவர்க்குக் காயே உளதே.

செவ்வாய், 6 ஜூன், 2017

வாயு. வாய் என்ற‌ தமிழ்ச்சொல்

வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

பேச்சு வழக்கில் வாயு (காற்று) என்ற சொல் வருவதில்லை
என்றாலும் "வாயுபகவான்" என்று குறிக்கும்போது, வாயு 
என்ற சொல் வருகிறதுவாயு என்பது காற்று.   வாயிலிருந்து
வெளிவரும் காற்றையே தொடக்கத்தில் தமிழர் வாயு 
என்றது தெரிகிறது. இது பின் காற்று என்ற‌ பொதுப்பொருளில்
 வழங்கிற்று. எனினும் செந்தமிழாகக் கருதப்படவில்லை.

நிலவியலார் இப்போது காற்று ஓர் இடத்திலிருந்து கிளம்புவது என்று
சொல்வர். எனவே இடத்திற் பிறப்பது வாயு. வாய் என்ற‌
தமிழ்ச்சொல் இடம் என்றும் பொருள்படுவதால், வாயு என்பது 
"இடத்தில் தோன்றுவது" என்று பொருள்விரிக்க வசதிதருகிற 
சொல் ஆகும்

தமிழ் ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் வழங்கிய மொழி என்பர் சில ஆய்வறிஞர். வாயு போலும் சொற்கள் எங்கும் வழங்குதல் காண்கையில் இஃது உண்மை என்றே அறிக. பிறமொழிகளிலும் இச்சொல் வழங்குவது தமிழின் பெருமைக்கு ஒரு சான்றாகும்.

Preview and edit not available.  We are just posting it. Read and enoy. Any errors will be
rectified later.  Sorry about this.

சனி, 3 ஜூன், 2017

சத்திரம்.

சத்திரம் என்ற சொல்லைச் சில ஆண்டுகளின் முன் யாம் விளக்கியிருப்பினும், அது இப்போது கிட்டிற்றிலது.  அதனால்
ஈண்டு மறுபார்வை செய்தல் நலமே.

நெடும்பயணம் செல்வோர் வீட்டில் தாம் பயன்படுத்தும் பெட்டி படுக்கை எல்லாவற்றையும் மூட்டைகட்டிக் கொண்டுசெலல் இயலாததே. பயணத்தை இடைநிறுத்தி.எங்காவது தங்கித்தான் செல்லுதல் ஒக்கும். யார் வீட்டிலாவது தங்கிச் செல்ல அனுமதி கிட்டுதல் அரிது, தங்கியிருந்து பொருள்களைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டால் என்செய்வோம் என்னும்
கவலையில் யாரும் நுழையவிடார். வீட்டில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய இடைஞ்சல் ஆகிவிடுமாதலால் என்ன செய்யலாம் என்னும் வினாவுக்கு விடையாகக் கிடைத்ததே சத்திரம். பெரும்பாலும் ஓர் இரவு தங்கிச் செல்வதற்குச் சத்திரமே தக்கது. இப்போது அழகிய மற்றும் வசதிகள் பலவுள்ள விடுதிகள் உள்ளன.

சற்று இருந்து போவதே சத்திரம்.  சற்று ‍~  சத்து ஆனது.  இரு+ அம்
என இரண்டும் இணைந்து இரம் ஆயின. இங்கு அம் என்பது விகுதி.
சத்து +  இரு + அம் = சத்திரம் என்று அழகிய ஒருசொல் ஆயிற்று.

அறிந்து மகிழுங்கள்.