வியாழன், 13 ஏப்ரல், 2017

President Trump and North Korea

வடகொரியா வழிகின்ற போர்வெறிசேர் நாடு
வம்புக்கு நானணியம் எனமார்பு தட்டும்!
இடம்பொருளோ டேவலெனும் எதுவேனும் உண்டோ?
இங்கிதமென் றேதேனும் பயில்தலைவர் உண்டோ?
குடவிளக்காய்த் தான்மறைவாய் இருத்தற்கு மாற்று
குவலயப்போர் தானுயர வழியென்றே முந்தும்!
அடடாதிரம் பங்குசென்றே அவர்வாய்தி றந்தால்
அதுதானும் கெடுநேரம் ஆகாமற் காக்க!


அணியம் =  தயார்.
இங்கிதம் = இதற்கு இது அமையும் என்கிற புத்தி.
குவலயப்போர் = உலகப்போர்
திரம்ப்  = அமெரிக்க அதிபர்,

The British united non-C& M as Hindus

இந்துமதம் ஒன்றுபட வெள்ளைக் காரன்
என்னஒரு நற்செயலைச் செய்து விட்டான்!
அந்தமணில் சிவப்பற்றர் விட்ணு பற்றர்
அழகம்மைப் பற்றரென ஆறு பல்கி
நொந்துபல சண்டைகளில் உந்தப் பட்டு
நோப்பிரிவால் உழன்றாரை ஒன்றாய் ஆக்கி
சந்துகளை அடைத்தொன்றாய்ச் சாலை உய்த்தான்;
சால்பினரும் செயலறியா மேன்மை வைத்தான்.

மணில் = மண்ணில்;
பற்றர் = பக்தர்கள்;
விட்ணு = விஷ்ணு;
அழகம்மை : அழகுடைய தேவி;
நோப் பிரிவு = துன்பம் தரும் பாகுபாடுகள்;
சந்து = வழி;
சாலை = யாவரும் கூடும் இடம்
சால்பினர் = நாட்டில் நம் உயர்ந்தோர்.


புதன், 12 ஏப்ரல், 2017

சாமி நாத அய்யரும் சமயக் காழ்ப்புணர்வும்

இப்போதெல்லாம், இந்துக் கோயில்களில் சிவனுக்கு உபயம் செய்கிறவரே
விட்ணுவுக்கும் மாலை அணிவித்து வணங்குவதைக் காண்கிறோம். இவர்
சிவ வணக்கம் செய்பவர், இவர் விட்ணு வணக்கம் செய்பவர் என்று பேதப்படுத்துவதில்லை. (பெயர்தல்> பே> பேதம்).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேதம் தலைதெறிக்க எழுந்து நின்றது. சிவனைப் பாராட்டிய வாழ்த்து நூல் தொடக்கத்திலிருந்தால், அதை
நீக்கிவிட்டு, விட்ணு பாடல் எழுதி நூலை அச்சிட்டனர். பழம்பாடலை வீசுவதால், அதிலுள்ள சொல்வளம் அறியாதவர்கள் ஆவோம்; வரலாறு தொலையும்; உண்மை அறியார் ஆவோம் என்று நினைத்தனரில்லை. புதுப்பாடலைப் பழம்பாடல் போல் முன்வைப்பது ஓர் ஏமாற்று என்பதையும் அவர்கள் உணர்ந்தனரில்லை. ஆசிரியர்களும் வேறு மதத்தாருக்குப் பாடம் ஓத மறுத்தனர்.

இப்படியேதான், சாமிநாத ஐயருக்கு, மீனாட்சி சுந்தரனார் பாடம்சொல்ல‌
மறுத்துவிட்டார். அப்புறம் வெங்கட்ராமன் என்ற அவருடைய வைணவப்
பெயரைச் சாமிநாதன் என்று மாற்றி, சிவமதத்தவரானபின், முறைப்படி
மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாததனால், பல நூல்களும் கைவிடப்
பட்டன. அவை அழிந்தன.

இவை நிகழாமல் இருந்திருந்தால், நமக்கு இப்போது பல சான்றுகளும்
கிடைத்து நம் ஆய்வுகள் உயர்ந்து நிற்கும் என்பது காண்க.

சாமி நாத அய்யரும்  சமயக் காழ்ப்புணர்வும்