திங்கள், 3 ஏப்ரல், 2017

ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இராட்டினம் அல்லது ராட்டினம் என்ற சொல் அமைந்ததெவ்வாறு?

இவ்வியந்திரத்தை  ஏறுசுழலி என்றும் சொல்லலாம்.

இந்த "இராட்டினத்தில்" உள்ளீடாக இருப்பவை இரண்டு எளிய  சொற்கள் தாம். அவை இரு + ஆட்டு என்பன.

இன் + அம்  என்பன விகுதிகள்..  இன்  என்பது  உடைமைப் பொருளினதும்   ஆதலின் இங்கு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது.

ஏறி அமர்ந்ததும் (அதில் இருக்கும்போது ) அது ஆட்டுகிறது. அதாவது
"விளையாட்டு" உண்டாக்குகிறது.  இச்சொல்லில் வரும் ஆட்டு என்றது "விளையாட்டு" எனற்பொருட்டு. ஆகவே இருக்கும்போது விளையாட்டு
உண்டாகும்படிச் சுழல்கிறது.

நாளடைவில் இச்சொல்லின் இகரம் கெட்டது. வெறும் ராட்டினம் ஆயிற்று.

புலவர்கள் பிற்காலத்தில் "ராட்டு" என்ற போலி முதனிலை கண்டு
மருண்டனர். பிறமொழிச்சொல்லாகவிருக்கலாம் என்று மயங்கினர்.

தமிழன் எழுத்துக்களை விழுங்கிவிடுவதைத் தமிழனே மறந்தான்.

பிற்காலத்தில் சுற்றும் வேறு சில இயந்திரங்களுக்கும் இப்பெயர்
பொருந்தியது. நூற்கும் இயந்திரம், நீரிறைப்பான் முதலியவையும்
இப்பெயர்க்குரியவாயின.

இரு என்ற இருத்தற்சொல், மிகவும் பயன்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக
இரு+ஆசு+ இ = இராசி என்பதில் "பற்றி நிற்குமிடம்" என்ற பொருளில்
சொல்லமைய, இரு என்ற சொல் உதவியுள்ளது காண்க. ஆசு எனில்
பற்றிக்கொள்ளல்.


அந்தம்

அந்தம் என்ற சொல் பற்றிச் சிந்தனையைச் செலுத்துவோம்.

இதை அறிந்துகொள்ள நாம் இன்னொரு சொல்லினைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அச் சொல்: " அன்றுதல்" என்பது. இதன்
பொருள் யாது என்பதை நாம் அகரவரிசைகளிலிருந்து அறிந்து கொள்வோம். இதன் பொருள்: மாறுபடுதல், கெடுதல், கோபித்தல், பகைத்தல் என்பன.

இது ஒரு சுட்டடிச்சொல். இ என்கின்ற இவ்விடத்திலிருந்து தொடங்கிய‌
ஒன்று, அ என்னும் அவ்விடத்துச் சென்று முடிந்துவிடுகின்றது. அவ்விடத்து முடியுமுன் அவ்விடத்தை "அடுத்துச்" செல்கிறது; அப்புறம்
முடிகிறது.  இதுகண்ட தமிழர், அணுகுதல், அடுத்தல், அன்றுதல் முதலிய சொற்களை அ என்ற சுட்டடியிலிருந்து உருவாக்கிக் கொண்டனர். இவை மூன்றும் உதாரணங்களே; இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன. (உது + ஆர்(தல்) + அணம் : உதாரணம், அணம் விகுதி).

அன்றுதல் : இதைப் பகுத்தால்,  அன் + து + தல்  என்று பிரியும். இவற்றுள்  அன் என்பதே முதனிலை அல்லது பகுதி; பிற விகுதிகளே.

அன்+ து = அன்று ஆயிற்று.

அன்று என்ற சொல் முடிந்துபோன நாளைக் குறிக்கிறது. அன்று அலர்ந்த‌
செந்தாமரை என்ற தொடரில் அன்று என்பது முந்தாநாளுக்கும் முந்திய‌
நாளைக் குறிக்கிறது. முந்தா = முந்திய.  முந்தாத என்று பொருள்படுகிற‌
முந்தா வேறு.

அன்று என்பது வினைச்சொல்லாகி, (அன்றுதல் ஆகி),  முடிதல் என்றும்
பொருள்.

அன்று என்பதை,  அன்+து என்று கண்டோம். இதையே அந் + து என்றும்
எழுதலாம் ; எழுதின் அந்து ஆகும்.  அந்து என்பதும் முடிவு குறிப்பது.ட்

அந்து :  நெல்லை அழிக்கும் (முடிக்கும்) ஒரு பூச்சி.
அந்தி :  பகல் முடியும் நேரம்.
அந்தில்:  அவ்விடம் (இங்கு சுட்டடிப் பொருள் மாறவில்லை)
அந்தரி:  முடித்துவைப்பவள்; தேவி.
அந்தரித்தல்: கெட்டொழிதல்.
அந்தன் : யமன்; உயிரை முடிப்பவன்; பார்வை முடிந்துபோனவன்.
அந்திய காலம் : முடிந்துபோகிற காலம்.
அந்தியர்: தங்கள் மேன்மை முடிந்து கீழ்மக்கள் ஆனவர்கள். அரசு வீழ்ந்தோர்.
அந்திரன்:  தேவன். மேலிறுதியில் உள்ளோன்.( இறுதி இருபக்கம்
அன்றோ!)

இப்படிச் சொற்கள் பல.

இப்போது சிவனை மறக்கலாகுமோ? அவனே எல்லாவற்றுக்கும் தொடக்கமும் இறுதியும் ஆனவன். அவனை:

அந்திவண்ணன்

என்போம்.  யாவற்றுக்கும் முடிவானவன்; முடித்து வைப்பவன்;  அந்தியின் நிறமே அவனுக்கும் நிறம்; சிவப்பு; சிவன்.

சிவந்தான் என்பது அவன் பழைய பெயர்.

இனி,அந்தம் என்பது தெளிவோம்.

அன்+து+ அம் = அந்தம். இது ஒருவகை மெலித்தலில் மெலித்தல்
ஆகும்.

வல்லொலி யாகிய றகரத்தை எடுத்துவிட்டு, தகரத்தைப் போட்டால்
அந்தம் என்றாகிறது.

தகரமும் வல்லொலி ஆயினும், நகர ஒற்றுடன் கூடி,   தன் வன்மையை
இழந்துவிடுகிறது.

முன் தி : முந்தி; பின் தி : பிந்தி ;    இன் து : இந்து என்பன காண்க.

இந்து: நிலா; இனியதாகிய நிலா. இன் = இனிமை; து: விகுதி.
"இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை!!"

இங்ஙனமே அன் து என்பது  அன்று என்றும் அன் து  அம் என்றுகூடி  அந்தம்
எனவும் வந்து மகிழ்விக்கின்றன.

previous post  on topic lost.
cursor jumps -  noted.  will edit.











ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆதித்தன் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது

பூமி முதலிய கோள்கள் உருப்பெறு முன்னரே பகலோன் என்னும்
சூரியன் வான்வெளியில் தோன்றிவிட்டான்.  அவனிடத்து ஏற்பட்ட‌
ஒரு வெடிப்பின் காரணமாகவே பல துண்டுகள் பறந்து சுழன்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளாகிவிட்டது . அதில் நம் பூமியும்
ஒன்று. இது ஒரு வானநூல் கருத்து. (தெரிவியல் :theory  தியரி என்பர்
ஆங்கிலத்தில். )

இதன்படி, சூரியன் ஆதியிலிருந்தான். அதிலும் தானே இயங்கினான்.
இப்போது இக்கருத்தை அவன் தன் பெயர்களுள் ஒன்றான ஆதித்தன்
என்பது நம் ஆய்வில் தெரிவிக்கிறதா என்று நுணுகி ஆராய்வோம்.

ஆதி: இது முதலில் இருந்தது என்பதைக் குறிக்கும். ஆகவே இந்த‌
வான நூல் கருத்தைத் தெரிவிக்கிறது.

ஆதித்தன் என்ற சொல்லில் அடுத்த சொல் " தன்" என்பது. ஆம்
தனியே தானாக இயங்கிக்கொண்டிருந்தது என்பதைத் தன் என்ற‌
சொல் நன்றாகவே தெரிவிக்கிறது.

எனவே ஆதித்தன் என்றால் ஆதியில் தன்னிலையாய் இயங்கியது
ஆதித்தன் ஆகிறது. இந்த அரிய சொல்லை இப்படி விளக்காமல்
வேறு மொழி என்று உரைத்து உண்மைக்குப் புறம்பான கதைகளைக்
கூறிக் குட்டை குழப்பாமல், ஆதி + தன் = ஆதித்தன் தமிழே என்றும்
அது அறிவியல் அடிப்படை உடைய சொல் என்பதும் அறிந்துகொள்ள‌
வேண்டும்.

இந்த அறிவியல் தெரிவியலை தமிழர் எங்ஙனம் அறிந்திருந்தனர் என்று
வினவலாம். இது தமிழரின் வானநூல் அறிவாழத்தை நன்கு காட்டுகிறதென்பதை ஒப்புக்கொண்டால் இக்கேள்வி எழாது. தமிழர்
அப்படி எண்ணினர்; அது சரியாக அமைந்துவிட்டது என்பதே சரி.