செவ்வாய், 28 மார்ச், 2017

பருப்பென்றும் பருக்கையென்றும்,,,,,,

நெருப்பென்ற பகலவ‌னும் காய்ந்து வற்றி
நீரில்லாக் கா(ய்)சினியாம்  காய்ந்த தாலே
பருப்பென்றும் பருக்கையென்றும் தேடிச் சோர்ந்து
படுக்கையிலே தூங்கிவிடும் ஏழை மக்கள்;
இருப்பென்றும் இல்லாத வெற்றுப் பைகள்
இவர்களுக்குத் தொண்டென்றால் சென்று செய்க!
பொறுப்பிதுவே ; புண்ணியம்தான்; போற்றிக் கொள்வீர்.
பூதலத்தில் யாதுமில்லை நெஞ்ச மின்றேல்.

போராட அறியாத சங்கத் தமிழர்

சங்கத்த மிழருக்குத்  தெரியும் போர்தான்;
சற்றுமறி யாரவர்போ ராட்டம் என்றால்!
எங்கெங்கு நாட்டினிலே தேடி  னாலும்
இல்லையிந்தப் போராட்டம் என்ப தொன்று!
பங்குபெறு மக்களாட்சி என்ப தில்லை;
பயன்வேண்டி மணியடித்தார் அன்றும் உண்டு.
தங்கிமிளிர் அமைதியது பொங்கும் வண்ணம்
தமிழரசு இயன்றதெனச் சொல்வார் உண்டே.


மிகுந்த போராட்டங்கள் நடைபெற்ற இந்திய மாநிலம்
தமிழ்நாடுதான் என்கிறார்கள் (புள்ளிவிவரங்கள்).
2015 எண்ணிக்கை: 20450.
அடுத்து பஞ்சாப் 13089





திங்கள், 27 மார்ச், 2017

தவளையும் தபசியும். they escape.......

ததவளையும் தபசியும்.

பகரத்துக்கு வகரமும் வகரத்துக்குப் பகரமும் பலமொழிகளில் வருகின்றன.எனவே  தபசி என்பது தவசி என்றும் எழுதப்படும். இரண்டும்
ஒன்றுதான். தமிழுக்கென்று சில சிறப்பான திரிபுகள் உள்ளன. ஆனால்
பிறமொழிகளில் வரும் திரிபுகளும் தமிழிலும் வருகின்றன. இரண்டுமுண்டு. இதற்குக் காரணம் நாமும் மனிதர்கள்; பிறமொழியினரும்
மனிதர்கள். நாக்கு வாய் முதலியவற்றிலும் கருதத்தக்க வேறுபாடுகள் இல்லை. தேய்வைத் தோட்டத்தில் (ரப்பர் எஸ்டேட்) தமிழர்களுடன் வளர்ந்த சீனர் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார். தொலைபேசியில் அவருடன்
பேசுகையில் அவர் தமிழரா, சீனரா என்று தெரிவதில்லை. எண்ணற்குரிய‌
வேறுபாடின்மையால் பல் திரிபுகளில் ஒற்றுமை இருப்பது வியப்புக்குரியதன்று .  இது கடன்கொண்டதுமன்று.  இருவேறிடத்தும்
இயல்பானது.

தபசி என்ற சொல்லின் முன்வடிவம் தவசி என்பதே. பின்வந்த மொழிகள் இச்சொல்லை "தப" என்று அவற்றுக்கு எளிதாக மாற்றிக்கொண்டன. ஆனால் இவ்வடிவமும் தமிழுக்கு ஏற்புடையதே. இது தாவுதல் என்ற வினைச்சொல்லினோடு தொடர்புடையது. ஒரு தவசி, ஏலாத உலக நடப்புகளைத் தாவி, அப்பால் செல்கின்றான். இந் நடப்புகளோடு சென்று வெற்றி கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறான்.  தாவு! தவிர்! இத் தவிரென்பதும் தொடர்புடைய சொல்லே என்றறிக. தாண்டுதல் என்பதும் தா என்றே தொடங்குகிறது. தாள் என்ற காலடி குறிக்கும் சொல்லும் "தா" என்றே தொடங்குகிறது. தாண்டுவதும் தாள்களினாலேயே  முடிகிறது. தாள்+ து  = தாண்டு ஆகிறது. தாவும்போது, தாண்டும்போது, தவசி என்போன் "தப்பி" விடுகிறான். உலகியல் நடவடிக்கைகளில் அவன்
பட்டுக்கொள்வதில்லை. தப்பு என்பதும் தாண்டுவதோடும் தாவுவதோடும் தொடர்புடையதே என்றறிக. தப்பு என்பது இடைக்குறைந்தால் தபு என்று
வரும். தப்புதல் > தபுதல் ஒன்றே என்பதறிக.  தபுதாரம்:  தாரம் இழப்பு. மனைவியை இழந்த நிலை. இது தொல்காப்பியச் சொல்.

தவசியைப் போல் தவளையும் தாண்டியே செல்கிறது. இடைப்பட்ட மண்ணில் தடையொன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குள்ள‌
இயல்பான முற்செலவு முயற்சியால் தாவிவிடுகிறது; தாண்டிவிடுகிறது.

இவ்விடையத்தில் தவளையும் தபசியும் ஒன்றாகின்றனர். இருசொற்களும்
தாவுதல் அடிப்படையில் அமைந்தன.

தாவு > தாவு+ சி =  தவசி.
சி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.

வேய்தல் : வேய்+சி > வேசி. யகர ஒற்று மறைவு.
காய்தல் :  காய்+ சி + இன்+ இ = காய்சினி > காசினி.

இவை சி விகுதி இறுதியும் இடையும் வந்த சொற்கள்.  இவைபோலுமே தவசி  என்பதிலும் சி  வந்துள்ளது.

இனி, தா என்ற நெடில் த என்று குறிலானதற்கு எடுத்துக்காட்டு:

சாவு + அம் = சவம்.
தாவு + அம் = தவம்.

தாவு = தப்பு. தப்பு> தபு > தபம் என்பதும் அம்முடிபு கொண்டதே.
இவை வேறல்ல. வேர்ச்சொல் ஒன்றானதால் எப்படிச் சென்றாலும்
அம்முடிபே தோன்றும்.

தாவு என்பது தவ்வு (தவ்வுதல்) என்றும் குறில்தொடக்கமாகும்.
தவ்வு > தவு > தவம்; தவ்வு> தவு > தபு > தபம்.
தவ்வு> தப்பு > தபு > தபம்!!

இடைக்குறைச் சொற்களாலும் பிறமொழிகளையும் வளப்படுத்திய மொழி
தமிழாகும்.

Some edit - paste repetitions seem to haunt us. We are looking into it.  If you find any appearing
on your screen, please give us time to rectify any error .