சனி, 25 மார்ச், 2017

அச்சமோ யாங்கள் அடையோமே.........!

பயங்கரவாதிகட்கு அரசியல் தலைவர்கள் கூற்று.

அச்சமோ யாங்கள் அடையோமே எங்களின்
மிச்ச உறுதியும் விஞ்சியே ‍‍~~~ உச்சமுறக்
கொட்டினீர் உங்கள் கொடூரத்தை; தாங்களாய்
விட்டாலும் விட்டிலோம் யாம்.

பயங்கரவாதத்தை நீங்கள் விட்டாலும் விடாவிட்டாலும் நாங்கள்
நாடுகாக்கும் எங்கள் உறுதியை விடமாட்டோம் என்பது பொருள்.
மிச்ச உறுதி =  குண்டுகள் வெடிக்கையில், முன் எடுத்த உறுதியில்
எஞ்சி இருந்த நடவடிக்கைகளைத் தொடரும் உறுதி;  விஞ்சி = மிகுதியாகி;  கொடூரம் = கொடுமை ஊர்ந்து மிகுதியான நிலை.
கொடு+ஊர்+அம் = கொடூரம். ஊர்தல் =மெல்லவே  மிக்குவரும் நிலை.
குமுகத்தில் கொடுமைச் சிந்தனைகள் மெல்ல உருவாகி, நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெரியனவாகி இறுதியில் வெடிக்கின்றன. தாங்களாய் விட்டாலும் ‍ : செய்வதைச் செய்துவிட்டு, அகன்றுவிட்டாலும். விட்டிலோம் : விட்டு இலோம் (இல்லோம்) : விடமாட்டோம் என்பது.














ரு



தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )

உலகுக்கு மக்களாட்சி போதித்த ஒண்நாடு;
பலகற்கப் பண்டிதன்மார் சென்றுபயன் கண்டநாடு;

நிலைகுலையா நூறிரண்டு நின்றதே ஆண்டுகளாய்;
கலைபலவும் கண்டுகரை மேவிப்புகழ் கொண்ட‌நாடு.

மதங்களின் நல்லிணக்கம் இனங்களின் ஒற்றுமைஎன்
றிதுகாறும் காத்தபடி இலங்குகிற இசைநாடு.

இதைவிட்டு வைத்தானோ இழிதீவிர வாதியென்போன்
சதைகிழித்தே உயிர்குடிக்கும் நடபடிக்கை மேற்கொண்டான்!

இலண்டனுக்கு நேரிடர்க்கே இரங்குவதே எம்மனமும்.
திரண்டதனைக் கண்டிப்போம்; தீமைகடிந் திடுவோமே.


தீவிரவாதம் ஒழிக (இலண்டன் தாக்குதல் )

மக வேர்ச்சொல் "மகரந்தம்"

மக என்பது ஓர் வேர்ச்சொல். இது ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுதலைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.  மகன், மகள், மக்கள், மக> மா;  மாக்கள் என்ற ஒரு சொற்குடும்பமே தமிழில் இருக்கிறது. இந்த மகச் சொல்லை நாம் உலகிற்கும் கொடையாக வழங்கியுள்ளோம். அவற்றில் மக்டோனல்டு என்ற சொல்லில் வரும் மக்  (Mac) என்பதும் அடங்கும்.  மக்டோனல்டு என்றால்  டோனல்டின் மகன் என்பதே பொருள். இது காலை  அஃதொரு குடிப்பெயராய்  மேலையில் வழங்கி வருகிறது.: "மக" கலப்பில்லாத இன்னொரு குடிப்பெயர் டோனல்டுசன் (Donaldson)  என்பதாகும்.

மக என்பதனுடன் மை என்ற பண்புப் பெயர் விகுதியை இணைத்தால்
மகமை என்பது கிடைக்கிறது. இது பிறப்பித்தலாகிய தன்மை என்று
பொருள் தரவேண்டும். மக என்பதற்கு, இளமை, பிள்ளை, காணிக்கை என்று பொருளிருத்தலால்,  மகமை என்ற மை என்னும்
பண்புப்பெயர் விகுதி கலந்த சொல்லுக்கு  அறக்கொடை ( அறத்தின்
பொருட்டு வழங்கும் கொடை) என்று பொருள் காணப்படுகின்றது.

மக என்பது உண்மையில் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றிடுதல்
ஆகையினால், பூவிலிருந்து தோன்றும் பொடிகட்கு "மகரந்தம்" என்ற‌
சொல் விளைந்தது.   மக+ அரு + அம் + தம்  என்று பிரிக்க, இதன்
பொருள்: பூவிற் பிறந்த அரிய அழகிய (தூள் அல்லது பொடி) என்று
பொருளாகிறது.  மக என்பதன் இறுதி அகரமும் அரு என்பதன் இறுதி
உகரமும் கெடவே, மகர ஒற்றும் நகர ஒற்றாகி மகரந்தம் என்ற‌
இனிய சொல் கிடைத்து மகிழ்விக்கிறது.

மகரந்தத்திலிருக்கும் இறுதிச்சொல் முடிவு குறிக்கும் அந்தமன்று.
அப்படிப் பண்டிதன் சொன்னால் அது பிசகு ஆகும்.