சனி, 25 மார்ச், 2017

மக வேர்ச்சொல் "மகரந்தம்"

மக என்பது ஓர் வேர்ச்சொல். இது ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுதலைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.  மகன், மகள், மக்கள், மக> மா;  மாக்கள் என்ற ஒரு சொற்குடும்பமே தமிழில் இருக்கிறது. இந்த மகச் சொல்லை நாம் உலகிற்கும் கொடையாக வழங்கியுள்ளோம். அவற்றில் மக்டோனல்டு என்ற சொல்லில் வரும் மக்  (Mac) என்பதும் அடங்கும்.  மக்டோனல்டு என்றால்  டோனல்டின் மகன் என்பதே பொருள். இது காலை  அஃதொரு குடிப்பெயராய்  மேலையில் வழங்கி வருகிறது.: "மக" கலப்பில்லாத இன்னொரு குடிப்பெயர் டோனல்டுசன் (Donaldson)  என்பதாகும்.

மக என்பதனுடன் மை என்ற பண்புப் பெயர் விகுதியை இணைத்தால்
மகமை என்பது கிடைக்கிறது. இது பிறப்பித்தலாகிய தன்மை என்று
பொருள் தரவேண்டும். மக என்பதற்கு, இளமை, பிள்ளை, காணிக்கை என்று பொருளிருத்தலால்,  மகமை என்ற மை என்னும்
பண்புப்பெயர் விகுதி கலந்த சொல்லுக்கு  அறக்கொடை ( அறத்தின்
பொருட்டு வழங்கும் கொடை) என்று பொருள் காணப்படுகின்றது.

மக என்பது உண்மையில் ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றிடுதல்
ஆகையினால், பூவிலிருந்து தோன்றும் பொடிகட்கு "மகரந்தம்" என்ற‌
சொல் விளைந்தது.   மக+ அரு + அம் + தம்  என்று பிரிக்க, இதன்
பொருள்: பூவிற் பிறந்த அரிய அழகிய (தூள் அல்லது பொடி) என்று
பொருளாகிறது.  மக என்பதன் இறுதி அகரமும் அரு என்பதன் இறுதி
உகரமும் கெடவே, மகர ஒற்றும் நகர ஒற்றாகி மகரந்தம் என்ற‌
இனிய சொல் கிடைத்து மகிழ்விக்கிறது.

மகரந்தத்திலிருக்கும் இறுதிச்சொல் முடிவு குறிக்கும் அந்தமன்று.
அப்படிப் பண்டிதன் சொன்னால் அது பிசகு ஆகும்.

வெள்ளி, 24 மார்ச், 2017

குமரன் பிள்ளையின் முன் நடப்புகள்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வாக்கில் நம் தமிழ்க்  கணினி மக்கள் தொடர்பு முன்னணியாளர் ஒருவர் "தொடர்புக் கழகம்"   Contact Club  என்று பொருள்படும்  ஒரு வசதியைக் கணினி வலைத்தளம்மூலம் தொடங்கினார்.  சிலர் அதில் இணைந்து தங்களுக்குள் மகிழ்ச்சியாகத் தொடர்பில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தனர்.

இதை விரிவு படுத்துவதற்காக ஒர் குழும்பினைத்   (company)  தொடங்க எண்ணிப்
பணவசதி உள்ள இன்னொரு தமிழரைத் தேடிப் போய்ப் பேசினார்   ". இது ஓர் உதவாக்கரை வேலை, ஒன்றும் எடுபடாது, இதில் நான் வேறு பணம் போடவேணுமா?? " என்று கடிந்து கொண்ட அந்தச் செல்வர், "போய்  மூடுவிழா நடத்திவிட்டு வேறுவேலையைப் பார்"  என்று விரட்டிவிட்டார்.

அதுவரை தாம் செய்திருந்த எல்லா வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தாம் தயாரித்திருந்த கணினி வட்டுக்களையும் அப்புறப்
படுத்திவிட்டு , வேறுவேலையைப் பார்க்கப் போய்விட்டார். இந்த மேதை .

இதன்பின் வந்த பல தொடர்புக் கழகங்கள் நல்லபடியாக முன்னேறி
இப்போது வாட்ஸ் எப்   வரை போய்ப்  பகலவன்போல் ஒளிவீசுகின்றன.

அந்தக் கணினி முன்னணியாளர்தான் எம். குமரன் பிள்ளை. அந்தச்
செல்வரின் ஆணித்தரமான் ஆனால் அறியாமையில் ஊறிய விரட்டுப்
பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால்.......?

பட்டறிவு பற்பல; அனுபவங்கள் அனேகம்!!

Kumaran Pillai now operates the SINGAPORE INDEPENDENT.

no copyright for this item.







இகுத்தல் இகை > சிகை

இகுத்தல் என்பது குழைத்தல், மறித்தல் என்றும், இகுப்பம் என்பது திரட்சி  என்றும் பொருள்படுவன‌.

சிகை என்பது ஒன்றாகக் குழைத்து வேண்டியாங்கு மறித்தும் திரட்டியும்
கட்டப்படுவது.

இகு> இகை;
இகை > சிகை.

இது எளிதான அமைப்புச்சொல்.

அகரவருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்; அதாவது அ>ச, ஆ>சா, இ > சி என்று இப்படியே நெடுகிலும் வரும்.

குழைத்து, அதாவது திரட்டிக் கட்டப்படுவதால் தலைமுடிக்கு குழல்
என்றும் பெயர். கூட்டிக் கட்டப்படுவதால் கூ > கூ + தல் > கூந்தல்
என்றும் பெயர்.

இகுத்தல் என்பது குழைத்துத் திரட்டுதல் ஆதலால்,

இகு> இகு+ ஐ = இகை > சிகை ஆனது.  இகு> சிகு > சிகை எனினும் ஆம்.

இகு என்பது சுட்டடிச் சொல்.  இ= இவ்விடம்;  கு = அடைவு அல்லது
சேர்தல் குறிக்கும் மிக்கப் பழங்காலச் சொற்கள். இன்னும் நம் மொழியில் உள்ளன‌. இங்கு தலையில் வளர்வதை இங்கேயே குழைத்துக் கட்டுதலைக் குறிக்கும். எனவே சிகை அழகிய கருத்தமைதி கொண்ட சொல். இ+கு என்பதிலிருந்து திரிந்து அமைந்தது.  கு என்பதும் அவனுக்கு, சென்னைக்கு என்று இன்றளவும் வழங்கி சேர்விடம் உணர்த்துகிறது.

தமிழை நன்குணர ஓர் ஆயுள் போதாது. இங்கே(தலையில் வளர்வதை)
இவ்விடமே குழைத்துத் திரட்டிவைக்கும் செயல் இகு> சிகு> சிகை.
இங்கிருப்பது அங்கு செல்லுமானால் இ+அம்+கு = இயங்கு என்பது
இதற்கு மாறுதலாக அமையும் ஒரு கருத்து.  இவையெல்லாம் திட்ட்வட்டமான அமைப்புகள்.

அறிந்து மகிழுங்கள்.