சனி, 18 மார்ச், 2017

ஈட்டி (எறிதல்)

ஈட்டி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இதன் அடிச்சொல் இடு என்பது.  இது பலபொருளுடைய சொல். இதன்
பொருளாவன: அணிதல், (பிச்சை முதலியன ) ஈதல்,  எறிதல், சொரிதல், வைத்தல் என்பன.

"இட்டார் பெரியார்"  :    ஈதல் செய்தவரே பெரியோர்.
பொட்டு இட்டுக்கொண்டாள் :  இங்கு அணிதல் பொருள்.
இதைப் பெட்டியிலிட்டுப் பூட்டு:    வெறுமனே வைத்துப் பூட்டுக என்பது.

எறிதல் என்பதும் பொருளாதலின், இடு + இ = இட்டி என்றும்  ஈட்டி
என்றும் வரும். பின்னது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இகரம்
ஈகாரம் ஆனது.  கெடு > கேடு என்பதும் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  கேடு + இ = கேடி என்று போக்கிரியைக் குறித்தது.


இட்டி என்பது உலக வழக்கில் இல்லை. செய்யுளில் வந்தவிடத்துக்
காண்க.  ஈட்டி என்பதே உலகவழக்குச் சொல்.

ஈட்டுதல்  (சம்பாதித்தல் ) என்பது வேறு சொல் .


யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்

தென்கொரியாவின் அதிபர் மக்கள் ஆதரவினால் பதவிக்கு
வந்தவர். வழக்கின் காரணமாக பதவியை விட நேர்ந்தது.
இவர் முன்னைய  அதிபரின் மகள். மக்களாட்சியில் வேறு
யார் வருவதாயிருந்தாலும் மக்கள் ஆதரவு தேவையன்றோ?
அதுவே மக்களாட்சி.  ஓர் அதிபரின் மகள் என்பது அறிமுகத்துக்கும்
புகுமுகத்துக்கும் பயன்படுவது மட்டுமே.

யார்பிள்ளை ஆனாலும் யார்பேரன் ஆனாலும்
பார்தன்னில் ஆதரவு மக்களினால் ‍=== ஊரூராய்
என்னென்ன கூறினும் வாக்கில்லை என்றாலோ

பொன்னன்ன பூம்பதவி இல்.



பொன்னன்ன =  பொன் அன்ன :  பொன்னைப் போன்ற மதிப்புடைய.
பூம்பதவி ‍:  அழகிய பதவி; பூவான பதவி.  பூம் ‍=  புகும் என்றும்
இரட்டுறலாக வரும்.

வெள்ளி, 17 மார்ச், 2017

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்

எழுத்துக்களை விழுங்கிப் பேசுதல்.

பேச்சு வழக்குக்கும் எழுத்துநடைக்கும் உள்ள வேறுபாடுகளைக் கவனித்தால், பல சொற்களில் எழுத்துக்களை விட்டுப் பேசுதல் என்பது
தமிழருடையதும் ஏனைத் திராவிட மொழியினருடையதும் வழக்கம்
என்பது நன்றாகத் தெரியும்.

கொடுக்கிறா(ர்)க(ள்) ‍  > கொடுக்கிறாக.
செய்கிறாள்  >  செய்(கி)றா(ள்)

என்று ஒன்றிரண்டு சொற்களைப் பார்த்தாலே போதும்.  பேச்சுமொழி
முழுவதும் இங்ஙனம் பல விழுங்கல்கள் மிளிர்கின்றன.

-மேற்காட்டியபடி ரகர ஒற்று மறைதல் எழுத்துநடைச் சொற்களிலும் உள.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.
நேர் > நேர்மித்தல் > நேமித்தல்.
( நியமம் > நியமி > நியமித்தல் என்பது வேறு சொல் என்பது
தெளிவு; பொருள் ஒன்றாயினும் ).

வேறு சில சொற்களிலும் ரகர ஒற்று மறைந்துள்ளது.

சேர் > சேர் + கு + அரன் =  சேகரன்.
உமையாளுடன் சேர்ந்திருப்பவன்; அல்லது நிலவுடன் சேர்ந்து தோன்றுபவன் ( எனப் பொருள் பலவாறு விரிக்கலாம்)

சேர் + து =  சேது  என்பதும் அது.

சேத்து என்ற சொல்லும் உளது.

கரன்  என்பது பிறழ் பிரிப்பால் விளைந்த  சொல்.
சிவ  என்பதும் சே என்று திரியும்.

to edit..