சனி, 4 மார்ச், 2017

இடைநின்ற யகர ஒற்று மறைதல்.

இடையில் உள்ள ஒற்றுக்கள்  மறைந்து சொற்கள் அமைவதென்பது
தமிழில் பெருவரவான நிகழ்வு ஆகும்.

வேய்தல் :  வேய்+ து + அம் =  வேய்தம் >  வேதம்.
வேய்தல்:   வேய் + து + அன் = வேய்ந்தன் > வேந்த‌ன்
தேய்தல் :   தேய் + கு  + அம் = தேய்கம் > தேக‌ம்
வாய்        வாய் + து +  இ =  வாய்த்தி >  வாத்தி >  வாத்தியார்.
தாய்:        தாய் + தி   =  தாய்தி > தாதி.
வேய் :      வேய் + சி =  வேய்சி  >  வேசி.
நோய்:       நோய் + து + ஆன் = நோய்ந்தான் > நோஞ்சான் (திரிபு).
பாய்தல்      பாய்+ சு + அன் + அம் = பாய்சனம் > பாசனம்.
காய்தல்      காய் + சு + இன் + இ = காய்சினி > காசினி .

இவை முன் இங்கு விளக்கப்பட்டுள்ள  சொற்கள். முன் இடுகைகளைக்
காணவும். பின் யாதாயினும் அழிந்திருப்பின் மீளேற்றம் பெறும்.
வேய்தல் என்பது மேலணிந்துகொள்ளுதல். கூரை வேய்தல். அதுபோல்
பாடல்கள் அமைத்தல். வேந்தன் , முடி அணிதலால் வேந்தன் எனப்பட்டான். வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி எனப்பட்டான். உப அத்தியாயி ஆகிய உபாத்தியாயி ( `~ யர், ~யினி ) வேறு சொல். பண்டிதர் குழம்பியதுண்டு.  பல அணிகலன்களும் வாசனைத் திரவியங்களும் பூசிக்கொள்பவள், பூசி மயக்குபவள் வேசி ஆனாள்.
பாய்தல் இங்கு நீர்ப் பாய்ச்சல்.காய்தல் : வெறுத்து ஒதுக்குவதற்குரிய‌
போதிக்கப்பட்ட இவ்வுலகம். காய்தல் ‍:  வெறுத்தலும் ஆம். வேறு
பொருளுடையதுமாம் இச்சொல்.

யகர ஒற்று மறைந்த சொற்கள் பல  இங்கு ஆய்வு செய்யப்பட்டு
விளக்கப்பட்டன.  வேதம் ‍ : மறைமலையடிகள் விளக்கம். வித்
என்ற சொல்லிற் புறப்பட்ட வேதா என்ற சொல் வேறு. இரண்டும்
ஒரு பொருளையே சுட்டினும் வெவ்வேறு பிறவிகள். ஆங்கிலத்தில்
பேக்கட் என்பது வேறு; தமிழில் பைக்கட்டு என்பது வேறு. ஓலி
ஒப்புமை உள்ளது. பார்லிமென்ட் வேறு; பாராளுமன்று வேறு .சுட்டப்பட்டது
அப்பொருளே  ஆயினும்.  

வெள்ளி, 3 மார்ச், 2017

சூசி.சாடி

அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் பல சகர வருக்கத் தொடக்கமாக
மாறின என்று பல இடுகைகளில் காட்டினோம் .  இதற்கு அமை ~ சமை;
அமண்~ சமண் என்பன காட்டப்பெற்றுள்ளன;  ஆய்வுகளும் அவ்வடிப்படையில் நடைபெற்றன.

இப்போது ஊசி என்ற சொல்லைப் பார்ப்போம். இது சூசி என்றும்
வழங்கும்.

ஊசி >  சூசி.

ஆடி என்பது கண்ணாடி. ஆடி பலபொருட்சொல். அவற்றுள் ஒரு
பொருள்:  கண்ணாடி.
இது சாடி என்று திரியும்.  கண்ணாடி அல்லது மண்ணாலான பாத்திரத்துக்கு  ஆகுபெயர். இக்காலத்தில் சாடி என்பது பாத்திரத்தை
மட்டுமே குறித்தலால், ஆகுபெயர் நிலையினின்று முழுப்பெயராக‌
மாறியுள்ளது.
மேலும் சாடி என்பது ஜாடி என்று மாறி வழங்குகிறது. மூலச்செய்பொருளான கண்ணாடியினின்று தொலைவில் வந்துவிட்டது
காண்க,

வியாழன், 2 மார்ச், 2017

வார்த்தை என்ற சொல் தமிழன்று!!

வார்த்தை என்ற சொல் தமிழன்று என்பார்கள். சொல், கிளவி முதலியவை தனித்தமிழ்ச் சொற்கள்.  ஆகவே வார்த்தையை ஆய்வு
செய்வோம்..

கோத்தல் என்ற சொல் உங்கட்குத் தெரிந்ததே. ஊசியில் நூல் கோத்தல்
என்பார்கள். இதைச் சிலர்  கோர்த்தல்,  கோர்வை என்று நடுவில் ஒரு
ரகர ஒற்றினை செருகிப் பேசுவதுண்டு. இது தவறு என்று தமிழாசிரியன்மார் கண்டிப்பதுண்டு.  ஆனால் நாம் கவனிக்க வேண்டுவது என்னவென்றால் இதுபோன்ற சொற்களில் ஒரு ரகர ஒற்று எழுவது இயற்கை என்பதே. புலவர் ஏற்பின் அது சரி; ஏலாவிட்டால் தவறு என்பதே மொழிநிலை.

இப்போது சொல்லைக் காண்போம்.

வாய் > வா > வார் > வார்த்தை.

வாயினின்றும் வெளிப்படுவதே வார்த்தை.  வா(ய்) என்பதில் ஒரு
ரகர ஒற்று எழுந்தது. கோ > கோர்வை போல.  திரிபுகள் ஒரே மாதிரியானவை என்றாலும், புலவர் சிலதிரிபுகளை ஏற்பர். சிலவற்றை
ஏற்பதில்லை.

வாய் என்பது வழி என்றும் பொருள்தரும். இந்தப்பொருளில் அது
மேலைமொழிகளிலும் ஏறியுள்ளது.  வாய்   (Tamil ) ,  ‍வியா   via (Latin)   வே.(way - English).  வாயைச் சில சிற்றூரார் வே என்பதும் நீங்கள் அறிந்தது. இங்ஙனம்
வாய், வார்த்தை பல மொழிகளில் இடம்பெற்றுவிட்டது. மலாயில்
"வார்த்த பெரித்த" என்றால் செய்தி அறிக்கை. ஆங்கிலத்தில் வர்டு  word
என்பதும் காண்க.

தமிழனின்  வாய்ச்சொல்  (வார்த்தை )   எங்கும் பரவியுள்ளது.  மகிழ்ச்சிதானே.!