வெள்ளி, 3 மார்ச், 2017

சூசி.சாடி

அகர வருக்கத் தொடக்கத்துச் சொற்கள் பல சகர வருக்கத் தொடக்கமாக
மாறின என்று பல இடுகைகளில் காட்டினோம் .  இதற்கு அமை ~ சமை;
அமண்~ சமண் என்பன காட்டப்பெற்றுள்ளன;  ஆய்வுகளும் அவ்வடிப்படையில் நடைபெற்றன.

இப்போது ஊசி என்ற சொல்லைப் பார்ப்போம். இது சூசி என்றும்
வழங்கும்.

ஊசி >  சூசி.

ஆடி என்பது கண்ணாடி. ஆடி பலபொருட்சொல். அவற்றுள் ஒரு
பொருள்:  கண்ணாடி.
இது சாடி என்று திரியும்.  கண்ணாடி அல்லது மண்ணாலான பாத்திரத்துக்கு  ஆகுபெயர். இக்காலத்தில் சாடி என்பது பாத்திரத்தை
மட்டுமே குறித்தலால், ஆகுபெயர் நிலையினின்று முழுப்பெயராக‌
மாறியுள்ளது.
மேலும் சாடி என்பது ஜாடி என்று மாறி வழங்குகிறது. மூலச்செய்பொருளான கண்ணாடியினின்று தொலைவில் வந்துவிட்டது
காண்க,

வியாழன், 2 மார்ச், 2017

வார்த்தை என்ற சொல் தமிழன்று!!

வார்த்தை என்ற சொல் தமிழன்று என்பார்கள். சொல், கிளவி முதலியவை தனித்தமிழ்ச் சொற்கள்.  ஆகவே வார்த்தையை ஆய்வு
செய்வோம்..

கோத்தல் என்ற சொல் உங்கட்குத் தெரிந்ததே. ஊசியில் நூல் கோத்தல்
என்பார்கள். இதைச் சிலர்  கோர்த்தல்,  கோர்வை என்று நடுவில் ஒரு
ரகர ஒற்றினை செருகிப் பேசுவதுண்டு. இது தவறு என்று தமிழாசிரியன்மார் கண்டிப்பதுண்டு.  ஆனால் நாம் கவனிக்க வேண்டுவது என்னவென்றால் இதுபோன்ற சொற்களில் ஒரு ரகர ஒற்று எழுவது இயற்கை என்பதே. புலவர் ஏற்பின் அது சரி; ஏலாவிட்டால் தவறு என்பதே மொழிநிலை.

இப்போது சொல்லைக் காண்போம்.

வாய் > வா > வார் > வார்த்தை.

வாயினின்றும் வெளிப்படுவதே வார்த்தை.  வா(ய்) என்பதில் ஒரு
ரகர ஒற்று எழுந்தது. கோ > கோர்வை போல.  திரிபுகள் ஒரே மாதிரியானவை என்றாலும், புலவர் சிலதிரிபுகளை ஏற்பர். சிலவற்றை
ஏற்பதில்லை.

வாய் என்பது வழி என்றும் பொருள்தரும். இந்தப்பொருளில் அது
மேலைமொழிகளிலும் ஏறியுள்ளது.  வாய்   (Tamil ) ,  ‍வியா   via (Latin)   வே.(way - English).  வாயைச் சில சிற்றூரார் வே என்பதும் நீங்கள் அறிந்தது. இங்ஙனம்
வாய், வார்த்தை பல மொழிகளில் இடம்பெற்றுவிட்டது. மலாயில்
"வார்த்த பெரித்த" என்றால் செய்தி அறிக்கை. ஆங்கிலத்தில் வர்டு  word
என்பதும் காண்க.

தமிழனின்  வாய்ச்சொல்  (வார்த்தை )   எங்கும் பரவியுள்ளது.  மகிழ்ச்சிதானே.!






துவாரம்

துவாரம் என்ற சொல் முன்பு விளக்கப்படடதேயாம்.  இப்போது இதை இங்குப்
பயன்படுத்த விருப்பதால் அதையும்  சற்றுத் தெரிந்துகொள்வோம். துவைத்தல் என்ற வினைச்சொல் குற்றுதலையும் இடித்துச் சிறு குழிகளை உண்டாக்குதலையும் குறிக்கும்.இப்படிக் குழித்தது துவாரம்படுதலும் இயல்பு. அதனால் துவைத்தல் துவாரமிடலையும் குறிக்கும்.  அம்மி துவைத்தல்
(பொழிதல்) என்ற வழக்கும் உள்ளது.

துவை+ ஆர்+ அம் = துவாரம்.

துவைத்தல்: முன் விளக்கிய படி.

ஆர்தல் -  நிறைவு.

அதாவது இடிப்பதை முழுமையாகச் செய்து ஓட்டையாக்கிவிடுதல்.  ஓட்டையானதை இடித்தல் தூள் செய்தல் அல்லது பல துண்டுகளாகச் செய்தல். குறித்த அளவுடன்  இடித்து நிறுத்திவிட அது ஓட்டையாவதுடன் நின்றுவிடும்.

அம் என்பது விகுதி.

துவாரம் தமிழ்ச்சொல்

துவை என்பதன் இறுதி ஐ வீழ்ந்தது.