சனி, 18 பிப்ரவரி, 2017

இந்திய விண்வெளிக் கழகம். புகழ்பாடும்....

ஆழிடரால் தம்மின் அரசியல் கார்முகில்போல்

வீழிருளில் வீண்பட்ட போதுமே === ஏழ்கடலின்

எல்லாத்தே யங்களும் ஏற்றிப் புகழ்பாடும்

வல்லாக்க வானாய் களம்.


அரும்பொருள் :


ஆழ்  இடரால் :   ஆழ்ந்த துன்பங்களால்;
கார்முகில் :  கருமேகங்கள்.
வீழ் இருளில் :  ஏற்றம் தராத இருட்டில்.
ஏழ்கடலின் எல்லாத் தேயங்களும்:  பிற நாடுகள் எல்லாம்.
வல்லாக்க :  வலிமை மிக்க கருவிகளைப் படைக்கும்;
வான் ஆய் களம்: இந்திய விண்வெளிக் கழகம்.

அரசியலில் மக்களாட்சி முறையைக் கேள்விக் குறியாக்கும் பல‌
இந்தியாவில் நடந்தாலும், இந்திய விண்வெளிக் கழகம்
நன்றாகவே செயல்படுகிறது.  என்பது கருத்து.

உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான்

கம்ப இராமாயணத்தில் உள்ள எல்லாச் செய்யுள்களையும் கம்பரேதாம்
எழுதினாரா என்ற கேள்விக்கு அறிஞர் சிலர் விடை பகர்ந்தனர்.  சில‌
பாடல்கள் சுவையும் சொல்லழகும் குறைந்தவையாய்க் காணப்படுவதால்
அவற்றைப்  பிறர் எழுதி இராமாயணத்திற் சேர்த்திருக்கிறார்கள் என்ற‌
முடிவுக்கு வந்தனர்.

ஒருவ‌ரே எழுதினாலும் சில மிக நன்றாக அமைந்துவிடுகின்றன. சில சுவை குன்றிவிடுகின்றன.  ஆதலால் இதை அறுதியிட்டுச் சொல்வது
கடினம்.

தொல்காப்பிய இலக்கண நூலிலும் இங்ஙனம் பிறர் எழுதிச் சேர்த்தவை
உளவென்பர்.  காலக் கழிவு காரணமாக ஓர் இலக்கண நூலில் சில‌
பொருந்தாமை ஏற்படுங்கால் முற்றிலும் புதிதாக ஒன்றை எழுதிக்கொள்ளாமல் இருப்பதில் சில மாற்றங்கள் செய்து வைத்துக்கொள்வது ( அதாவது மாணவர்களுக்குப் பயிலத் தருவது )
என்பது ஆசிரியர் சிலர் மேற்கொண்ட நடவடிக்கையாகலாம். இப்படிச்
செய்தாவது அதை வைத்துக்கொண்டார்களே, இல்லாவிட்டால் எல்லாமும் அல்லவா வீசப்பட்டிருக்கும்?  முழுமையும் இழப்பதற்குச்
சில மாற்றங்களுடனாவது அது கிடைத்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். அதேவேளையில் நாம் கவனமாகவும் இருக்கவேண்டுமென்பதே சரியான கொள்கையாகத் தோன்றுகிறது.

அப்போது நடந்தது பற்றி கவலைப் படும் அதேவேளையில் இப்போது
நடக்கும் முறைகேடுகளைப் பற்றி நம்மால் யாதும் செய்ய முடியவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவே வேண்டியுள்ளது.

ஊரெல்லாம் வெள்ளக்காடு;  கால் நனையாமல்  எப்படி நடப்பது என்று கேட்டாராம் நபிகள் நாயகம். உலகத்தின் உண்மை நிலை அவ்வளவுதான் ,
" ............ஆகுல  நீர பிற  "  என்றான் வள்ளுவன் ,












செய்வம் > சைவம்

சிவம் என்ற சொல் "சைவம்," என்று மாறி, சிவக் கொள்கைகளைக்
குறிக்கும். இங்ஙனம் மாறுவது, இந்தோ ஐரோப்பியத்தில் மிகுதி.
பைபிள் (பெயர்ச்சொல்) > பிப்ளிக்கல் (பெயரடை). ஆனால் சிவம், சைவம் என்ற இரண்டும் பெயர்வடிவங்கள்.

உணவு வகைகளில், "கவிச்சி" இல்லாத உணவு :  சைவ உணவு என்பர். சைவ உணவினை உண்போன், சிவத்தை வணங்குவோனாகவோ, நாராயணனை வணங்குவோனாகவோ, அம்மனை வணங்குவோனாகவோ இருக்கலாம். மேலும் சில சாதியார் இறைச்சி மீன் முதலிய உண்பதில்லை என்பதால், சிவக்கொள்கைக்கும் உணவுமுறைக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். தொடக்கத்தில் சிவத்தை வணங்கினோர், சைவ உணவு உண்டனர் என்று  கூறிச்   சமாளிக்கலாம்.

ஆனால் இப்படிக் கூறுவதினும் ,விலங்குணவு உண்ணாராய், நன்செய், புன்செய் விளை உணவுகளை உண்போரே  சைவ உணவினர்  என்பதே பொருந்துவது.

செய் > செய்வம் > சைவம். எனவே உணவுமுறை பற்றிய சைவம்
என்றசொல் வேறு. கடவுள் கொள்கை பற்றிய சைவம் என்பது வேறு
என்று கூறலாம்.

2009 வாக்கில் வெளியிடப்பட்ட இது அழிந்து மீட்டுருவாக்கம் பெற்றது.