புதன், 15 பிப்ரவரி, 2017

கட்சிக்கும் பணம் வேண்டும் !

ஊழலுக் குளபல காரணங்கள்
உலகினிற் பணமுடைத் தோரணங்கள்
நீழலுக் குளபல கட்டிடங்கள்
நிற்பன அவைபடர் தொற்றிடங்கள்.

ஒழித்திட நினைப்பதும் எளிதெனினும்
பிழைத்திட உழைப்பதன் கடினமதால்
பழித்திடத் துயர்களை விளைப்பதனைப்
பாரினில் மேற்கொளும் நிலைமையினார்.

தட்சிணை என்பதும் தக்க இணை;
தகுதியில் பெறுவதும் தொன்றுதொட்டே;
கட்சியை நடத்துவர் தேர்தலிலே
காண்பெறு நிலைவரப் பணமுதலே.

கட்சிக்கும்  பணம் வேண்டும் !


ஆவினைப்போல் சசிகலை,, predicament of Sasikala.

ஆவினைப்போல் தரித்துத்தம் தலைமேற் போற்றி
ஆடினர்நூற்  றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும்  முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ   அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.

அரும்பொருள் 

ஆவினைப்போல்  -  கோமாதாபோல் 
தரித்து ~  தாங்கி; அணிந்து;
அணியாய்  ~   (சட்டப்பேரவை உறுப்பினர்கள்)  வரிசையாய்;
யாவதுண்டோ ~  எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~  துன்பம்

திங்கள், 13 பிப்ரவரி, 2017

மதுவும் மாபோ - வும்.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முன் கள்ளுக்கடைகள் நிறைய இருந்தன. தமிழரிடை சீர்திருத்தச் சங்கங்களும் தொண்டர்படைகளும்
தோன்றிக் கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டுக் குடிப்பவர்களைத்
திருத்தப்பாடுபட்டனர் என்று முதுகிழவர்களுடன் உரையாடினால் தெரியவருகிறது. யாமேதும் குறிப்புகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆகவே கள்ளுக்கடைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதும் வாய்ப்பு
இல்லை. இங்கு ஒன்றிரண்டு கூறலாம். ஏனைய, நம் இளம்  ஆய்வாளர்களே
கவனித்தற்குரியவை.

மயக்கம் தரும் தேறலுக்கு மது  என்ற சொல்லைப் படைத்து வெற்றி
கண்டவன் நம் தமிழன். மயங்குவது, மயக்குவது என்பவற்றில்
இடை எழுத்துக்களை நீக்கக் கிடைப்பது ம‍~து என்பதாம்.  இதுபோலும்
இடைவெட்டுச் சொற்களை இப்போது புனைவது குறைவு அல்லது
இல்லை என்னலாம்.

இரவில் குடித்துக்  காலையில் வரை ( "காலங் காத்தாலே") மயக்கம்
போகாமல் உளறிக்கொண்டும்  ஆடிக்கொண்டும் திரிந்த சில தமிழர்களை  இங்கு "மா‍~போ" என்றனர்.  மா= மயக்கம்; போ = போ
காதவர்கள். இது நாளடைவில் "மாபோக்"  (மயக்கம்) என்ற மலாய்ச்
சொல்லாயிற்று. மலாய்க்காரர்கள் முஸ்லீம்கள், குடிப்பதில்லை ஆகையால் இது தமிழர்களுக்காகவே உருவாக்கப்பட்டு, மலாய்மொழிச் சொற்றோகுதியை சற்றே விரித்த ஒரு சொல்லாகும்.

மது என்ற இடைவெட்டுச் சொல்லுக்கு நாளடைவில் நல்ல தகுதி (மவுசு) ஏற்பட்டு, பிறமொழி அகராதிக்காரர்களும் அதைச் சேர்த்துக்கொண்டனர். சொல்லைப் பார்த்ததும் உருவானவிதம்
கண்ணாடிபோல் தெரிந்துவிடப்போவதில்லை. பேராசிரியனுக்கும்தான்.
அச்சொல்லுக்குத் தேன் என்ற பொருளும் ஏற்பட்டு, மலாயில் ம~டு
என்பது தேனாயிற்று. இப்பொருள் தமிழிலும் ஏனைப் பிற்கால மொழிகளிலும் உளது. இந்த விரிவு நாம் அடையும் மகிழ்வு ஆகும்.


சிங்கப்பூரில் உதவிப் பிரதமராக இருந்தவர் அமரர் திரு இராசரத்தினம்,
அவர் தமது கம்போங் கிளாம் தொகுதிக்குச் செல்லும்போது சுங்ஙாய்
வீதியின் கள்ளுக்கடையைத் தாண்டிச் செல்கையில், அங்கிருந்த‌
கட்குடியர் ஆட்டம்போட்டு வண்டிகட்குத்  தொந்தரவு தந்ததனால், நாளடைவில் அங்கிருந்த கள்ளுக்கடை அகற்றப்படுவதாயிற்று என்பது
வாய்வழிச்செய்தி.  பின் நியூட்டன், தெம்பனிஸ் கள்ளுக்கடைகளும்
மூடுவிழாக்கண்டன என்பர்.