திங்கள், 30 ஜனவரி, 2017

திருடும் அறிவாளிகள்

ஒருவருக்கு எழுதிப் புகழ்பெற வேண்டும் என்னும் ஆசை உள்ளது. ஆனால் கருத்துகள் ஏதும் மூளையில் தோன்றவில்லை. நூல்நிலையங்களில் போய் நூல்களை  எடுத்துப் படிக்கும் பழக்கமும்
இல்லை. எதையும் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கமும் இல்லை . ஒரு
வலைத்தளத்தில் தம்  பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஆசை
மட்டும் கரைபுரண்டு ஓடுகிறது,

என்ன செய்வது?

இங்குள்ள இடுகைகளை பகர்ப்புச் செய்துகொண்டு பின் அவற்றை அழித்துவிட வேண்டும். இதற்குக் கொஞ்சம் திருட்டுவேலைகள்
செய்யவேண்டும். கடவுச்சொல் முதலியவற்றைத் திருடவேண்டும்/
இவற்றை யெல்லாம் செய்து கருத்துகளைத் திருடித் , தாம் சிந்தித்து எழுதியது போல் எழுதித் தம்  பெயரைப் போட்டு வெளியிட‌
வேண்டும். போலிப் பட்டங்களையும் போட்டுக்கொள்ளலாம்.

இப்படிச் சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தால் நமக்கு இரங்குகிறது மனம்.

ஆனால் ஒருவகையில் இவர்களிடமும் தமிழ் பரவிக்கொண்டுதான்
இருக்கிறது. திருடும்போது அதைப் படித்துவிட்டுத் திருடுகிறார்கள்
அல்லவா?

சொந்தச் சிந்தனை இல்லையென்றால், திருடிக்கொண்டே மற்றும்
திருடியதைப் படித்துக்கொண்டே தம்   பெயரை விளம்பரப் படுத்திக்
கொண்டே இருக்கலாம்.

நல்ல பெயர் ஏற்பட்டு,விழாக்களில் பரிசுகள் பெற்றாலும் பெறலாம்.

நடக்கட்டும்.

யாமெழுதிய பலவற்றுக்கும் பதிவுகள் உள்ளன. ஆனால் அவற்றை
மறு வெளியீடு செய்வதற்குப் பழைய கணினிக் கருவிகளைச் சரிசெய்து ஓட்டவேண்டியுள்ளது. இதற்கும் பணம் மற்றும் நேரம்
தேவைப்  படுகிறது. முடியாதவை அல்ல.ஏறத்  தாழ 500 பழைய இடுகைகள்
இங்கு அழிக்கப்பட்டுள்ளன..  தெரியாமலில்லை .

திருடும் அறிவாளிகள்

தேம்பாவணி ,  இரட்சணிய யாத்திரீகம் சீறாப்புராணம் பற்றிய எம் இடுகைகள்
அழிக்கப் பட்டுள்ளன.  சீறாப் புராணத்திலிருந்து ஒரு பாடலைத் தான் எடுத்துக் காட்டியிருந்தேன்.  அதையே "காப்பி"  அடிப்பதில் என்ன இருக்கிறது?   அடுத்த
பாடலைப் படித்து  நீர்  எழுதி இருக்கலாமே!  அப்படிப் படித்தால்தானே  தமிழ்
வளரும் !  அடுத்த பாட்டுப் புரியவில்லை போலும் !


இயற் சொற்களும் பிற சொற்களும்.

ஒரு சொல் எந்த மாற்றமும் இன்றி இருக்குமாயின் அதை இயற்சொல்
என்று சொல்லவேண்டும்.  அச்சொல், மாற்றங்கள் இன்றி இயன்ற சொல்லா என்பது ஆய்வு செய்வோனின் முடிபு பற்றியது ஆகும். மாற்றங்கள் எவையும் புலப்படாத காலை அவன் அதை இயற்சொல் என்று வகைப்படுத்துவான்.

வடசொல் சொல் என்ற சொல்வகை ஒன்றைத் தொல்காப்பியனார்
கூறியுள்ளார். வட என்ற பெயரெச்சம், வடக்கு என்பதில் கு என்ற‌
இறுதி விகுதியை நீக்கி நின்ற மிச்சச்சொல்லாக இருக்கலாம், வட‌
வேங்கடம் என்ற வழக்குமிருப்பதால், வேங்கடத்துக்கு வடக்கிலிருந்து
வந்த சொல் என்று பொருள்கூறலாம். அங்ஙனமாயின் அது தெற்கில்
வழங்காத‌ சொல்லாகவோ அல்லது அருகியே வழங்கிய சொல்லாக‌
சொல்லாகவோ இருக்கக்கூடும். சமஸ்கிருதம் என்ற மொழியானது
எங்கும் வழங்குவதாய் உள்ளபடியால், அதை வடமொழி என்றது
பொருத்தமாகத் தோன்றவில்லை. தொல்காப்பியனார் காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழிப்பெயர் இன்மையாலும் அது எழுதாக் கிளவி என்றும் குறிக்கப்பெற்றுள்ள படியாலும் இன்று சமஸ்கிருதம் என்பதுதான் வடமொழி என்று முடிவுசெய்ய இயல்வில்லை. சமஸ்கிருதம் வடமொழியன்று அது எங்கும் எதிர்கொள்ளப்படும் மொழி என்றுதான் முடிவுசெய்யவேண்டும். சொற்கள் பலவற்றையும்
ஆயுங்கால் தமிழ் மூலங்களே தென்படுவதால் அத்தகு சொற்கள்
வடமொழிக்குரியவும் ஆகாதவை; சமஸ்கிருதத்துக்குரியவும் ஆகாதவை. மேலும் வடம் என்பதும் வட என்று எச்சமாகும். எனவே
கயிறு, மரம் என்றெல்லாம் பொருளுடைய வட என்பது மொழி
என்ற சொல்லுக்கு அடையாக வருங்கால் கயிறுபோல் இழுக்கப்பட்ட‌
சொல் என்றோ மரத்தடியில் வழங்கிய சொல் அதாவது இல்லத்தில்
வழங்காத சொல் என்றோ பொருள்படவும் கூடும். எனவே வடசொல்
என்று எந்தச் சொல்லும் வகைப்படுத்த இயலாததாக உள்ளது. மேலும்
வடக்கு நீங்கிய ஏனைத் திசைகளிலிருந்து வந்ததே திசைச்சொல் எனின் திசை என்பது கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நிலப்பகுதிகளிலிருந்து வந்த சொல் என்று பொருள்படும். அது எந்தச்
சொல் ?

இயற்சொல் திரிசொல் என்பன திரிபும் திரிபின்மையும் பற்றிய‌
பகுப்பாதலின் இவை ஒரு சொல்லின் தோற்றம் பற்றிய பகுப்பு,
ஆனால் திசை என்பது தோற்றம்பற்றிய தாக இல்லை.  வழங்கும்
இடம்பற்றிய தாக உள்ளது. திரிந்தாலும் திரியாவிட்டாலும் இயற்சொல் திரிசொல் என்பன செந்தமிழ் நாட்டில் வழங்குபவை
ஆதலின் வடசொல் திசைச் சொல் 1 என்பன செந்தமிழ் நாட்டில் வழங்காதவை எனலாமோ? என்பதும் ஆய்வுக்குரியதாக உள்ளது.

இதுபற்றிப்  பின் உரையாடுவோம்.

இயற் சொற்களும்  பிற சொற்களும்.

1 கோடிட்டவை  திருத்தம் பெற்றன.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கதம்பம்

கலத்தல் என்பது, வேறுவேறான பொருட்களை
ஒன்றுசேர்த்துவைத்தல் என்பது உங்களுக்குத் தெரியும். கலத்தல் என்பது இரண்டுவகை என்று உணரலாம். நாம் கலந்து வைப்பதும் அது தானே கலத்தலும் என இரண்டு.  சாக்கடை நீரில் (சாய்க்கடை> சாக்கடை , அதாவது சாய்வாகக் கடைசிப் பகுதிக்குச் செல்லும்படி அமைக்கப்படுவது) குடிநீர் கலத்தல் என்பது தானே கலத்தல் எனலாம்.
(யாரும் போய்க் கலக்கவில்ல.)

கலத்தல் என்பது சண்டையிடுதல் என்றும் பொருள்படும். இந்தப் பொருளில் இருவேறு கோட்டியினர் (இப்போது கோஷ்டி) ஒருசாராரை இன்னொரு சாரார் அணுகி அடித்துக்கொள்ளுதல். கலகம், காலாய்த்தல், கலவரம் (கல+ அர்+ அம் அல்லது கல+ அரம்) என இதில் விளைந்த‌ சொற்களும்  உள.

கலத்தலில், பூக்களைக் கலத்தலும் ஒரு திறமைதான்.  இங்கு
கல > கல + பு + அம் > கலம்பம்  என்று முகிழ்த்து, கதம்பம் என்று
திரிந்துவிடுகிறது. கதம்பம் எனினும் கலப்பு ஆகும்.

கல> கல+ ஆவு + அம் > கலாவம் > கலாபம் எனவரும்,
மயிலிறகில் நிறங்கள் கலத்தல். அது ஒரு தனிவகைக் கலப்பு.

மண் கலத்தலும் இன்னொரு கலத்தல். கல+ அ +  அம் என்பது
யகர உடம்படு மெய் பெற்று, கல+ ய் + அ + அம் = கலயம்
ஆகிக் கலசம் ஆனது. ய ‍ >ச இயல்பான திரிபு.

இதை முன் எழுதியதுண்டு.

அறிஞர் பிறரும் சிலவற்றை விளக்கியுள்ளனர்.