வியாழன், 22 டிசம்பர், 2016

துருவும் துர்~ முன்னொட்டும்.

துருவும்  துர்~ முன்னொட்டும்.

கணிய (சோதிட) நூல்க‌ளில் ஓர் கிரகம் துர்ப்பலன்கள் கொடுக்கும்
இராசிகள் என்று கணக்கிடுவார்கள். இப்போது துர்‍~  என்ற முன்னொட்டினை  ஆய்வோம்.

இரும்பு துருப்பிடிக்கிறது. அதைத் தினமும் தூய்மைப்படுத்தியோ, அல்லது எண்ணெய் முதலியவற்றை இட்டோ அப்படி ஆகாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.  துரு, இரும்பு கெட்டுப்போவதைக்
குறிக்கிறது.  ஆகவே, துரு என்பதற்கு கெடுதல் என்ற பொருள் ஏற்பட்டது.

இது பின்பு ஒரு முன்னொட்டாக மாறித் துர்‍~ என்று சுருங்கிற்று.

துர்ப்பலன்
துர்ப்பாக்கியம்
துர்குணம்


எனப் பல சொற்களில் முன் ஒட்டிக்கொண்டு, கெடுதல் என்ற பொருள் தந்தது.

வேண்டாத துருவின்மூலம்  வேண்டியதோர் முன்னொட்டு மொழிகட்குக் கிட்டியது  வரவேற்றற்குரித்தானதோர் வளர்ச்சியே ஆகும்.

துரு என்ற அடிச்சொல் தமிழோ  ?  பின் கூறுகிறோம்.

க வுக்கு ய நிற்றல்

சில சொற்களில் ககரத்திற்கு யகரம் மாற்றாக வருமென்பதை முன்
ஓரிரண்டு இடுகைகளில் எழுதியுள்ளோம். அவற்றை மறந்திருக்க மாட்டீர்கள்.

கோலியன்  (  நெசவு செய்யும் தொழிலன்)  . இவனைக் குறிக்கும்
இச்சொல், கோலிகன் என்றும் திரியும் என்பதை மறத்தலாகாது.

அதிகமான் =  அதியமான் முதலிய சொற்களில் க வுக்கு ய நிற்றல்
முன் இடுகைகளில் சுட்டப்பெற்றது.

ஆனால் தேகம்  தேயம் என்று வருதலில்லை .

கோவிட்டு து விகுதி

இப்போது கோவிட்டு என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பல சொற்கள் தமிழில் ‍து விகுதி பெற்று முடிந்துள்ளன. கைது என்ற இந்தக் கால வழக்கில் உள்ள சொல் மட்டுமன்று, விழுது என்ற பழந்தமிழ்ச் சொல்லும் கூட இவ்விகுதி பெற்றுள்ளது காணலாம்.

கோவிட்டு என்பது சாணியைக் குறிக்கும் சொல். இதுவும் து விகுதி பெற்று முடிந்த சொல் ஆகும்.

கோ =  மாடு.
விள் + து =  விட்டு.

விள் என்பது விடு என்பதன் மூலச் சொல் ஆகும்.  விள் >  விடு.
சுள் > சுடு என்பதுபோல. நள் > நடு என்பதும் அது,  நள்ளிரவு ‍=  நடு
இரவு எனக்காண்க.  சுள் > சுள்ளி; சுடு > சுடலை என்பனவும்
அறிதற் பாலன.

விள் > விட்டை என்பதும் ஒப்பு நோக்குக.

கோவிட்டு என்ற கூட்டுச்சொல்லில் விட்டு என்பது தமிழ்.

பிற்சேர்க்கை  21102021 1725:

இங்கு கூறப்பட்ட கோவிட்டு என்பது வேறு.  கோவிட்19 என்ற நோய்க்கிருமிப் பெயர் வேறு.  கிருமி என்பது  கரு என்ற சொல்லினடிப்  பிறந்து,  கிரு என்று திரிந்தது. எ-டு: கரு> கிரு> கிருட்டினபட்சம் ( நிலவின் இருண்ட பக்கம்).  கிருஷ்ணன் என்பதும் கரு>கிரு>கிருஷ்ணன் என்பதே. தமிழில் திரிபின்றி வருவது கருப்பன் என்ற சொல். அதாவது:  "கருப்புசாமி". "கருப்பையா" என்பது. இது அயலில் கிருஷ்ணசாமி, கிருஷ்ணையா என்று வழங்கும்.