செவ்வாய், 13 டிசம்பர், 2016

examine கணிசமான

புதுசு,  பழசு என்பன பேச்சு வழக்குச் சொற்கள். இந்தச் சொற்களில்
சு என்ற இறுதிநிலை வருவது காணலாம்.  மனம் என்ற சொல் அம் விகுதியில் முடிந்தாலும் பேச்சு வழக்கில் சு விகுதியும் வழங்கும். ஆகவே மனசு என்று வருமேனும் இது பேச்சு வழக்கிற்கே உரித்தானதாக  வலம் வருகிறது. இலக்கணியர், மொழிநூல் மேடையினின்று நீங்கினவர்களாய், அதை விரும்பாவிடினும் எழுத்திலும் ஆங்காங்கு வரவே செய்வதுடன், பொண்ணு மனசு தங்கம் போன்ற தொடர்களில் மற்றும் திரைப்பாடல்களிலும் வரவே செய்கிறது. மொழி பலருக்கும் சொந்தமானது ஆதலாலும் இலக்கணியர் வாத்தியார்கள் ஆகியோரின் ஆதிக்கம் குறைந்த விரிந்த  இடங்களில் அவ் வடிவம் நல்லபடியாய் வரும்.

என்றாலும் பரிசு முதலிய சொற்களில் சு விகுதி வருவதுடன் பரிசம் என வரும் சொல்லில் அம் விகுதி ஏற்கிறது.

இதுவே போல கணித்தல்  என்ற வினையிலும் சு விகுதி வரும். சிலர் படித்தும்
வேலை இல்லாமல் இருப்பதுபோல்  கணிசு   என்ற சொல்  வேலையில்லாமல் இருக்க  அம்  விகுதி பெற்ற  கணிசம்  என்பதில் அது சொல்லாக்க  உதவியாக
உருத்து  நிற்கிறது/.

கணிசமான  உதவித் தொகை என்கையில்  அது திகழ்கிறது .

நெரிசல்  என்பதில் வரவில்லை?
இவளுக்கு ஒரே புடைசல்  என்னும்போது  சு விகுதி இல்லை ?

கரி + சு + அன் + அம்  =  கரிசனம்

பற்பல இடங்களிலும் தோன்றும் அழகான  விகுதியன்றோ இது ..........
  

முன்படித்த முதுபழசை......

முன்படித்த முதுபழசைச் சொல்லிச் சொல்லி
மூளைக்கோ அயர்வளிக்கும் ஆளே வாத்தி;
மண்துகளே படர்ந்திடினும் மாச கற்றி
மாண்புதனை வெளிக்கொணர்வான் ஆய்வு நல்லோன்!
பின்கண்டு பிடித்ததையும் பேணிக் கொண்டு
பிழைகளைந்து நிலையுணர்ந்து பேசு வோனே
முன்தவறு மறைப்பவனே மாற்றுக் காரன்
முனைப்பினையம் அழிப்ப்வனாம் புத்தாள் ஆவான்.

சனி, 10 டிசம்பர், 2016

தனிக்கட்டை வாழ்வினரும்

தனிக்கட்டை  வாழ்வினரும் கொலைப்பட்டே வீழ்வது
தாரணியிற்  புதிதாமோ  யாருமறி  நிகழ்வது!
பனிக்கட்டி வீழ்ந்ததில் பயணித்தார் மேலுலகம்
பணிசெய்து யர்ந்தோரும் பரவினார் பரனுலகம்
இனிக்கெட்டுப் போவதுவோ  இங்கொன்றும் இல்லையடி
இலதேதான் உளதாகும் உளதேதான் இலதாகும்
உனைக்கட்டிப் பிடித்தானும் உய்வதுவும் அவண்தானே
எனைத்திட்டி மகிழ்ந்தானும் எங்குவேறு சொல்வாய்நீ

ஈடற்ற  இணைபிரியா  இன்பத்துத்  தோழியெங்கே
ஈண்டிருந்து செல்கையிலே எங்குசென் றவள்காண்பேன்?
ஆடற்ற கொட்டகைக்குள் அவள்தனியே நான்வெளியே
ஆறுதலைத் தேடுவளோ அழுதுபுலம் பிடுவாளோ
கேடற்ற இடமில்லை கேடென்றும் யாதுமில்லை
கெடுதலொடு படுதலுமே கெடுமாந்தன் உடுதலையில்
வாடென்று வற்றினனோ வாழ்விதுவே வெற்றடையே
வாய்மையுணர் வெய்துவளோ   வாழ்வினிதே யாவினுமே

There was an unexpected blackout at the time of posting.  Some errors have now been
rectified at 6,54 pm.  Shall review autocorrect changes later.