திங்கள், 14 நவம்பர், 2016

ஊழல் உளை

ஊழல் உளைக்குள் ஆழப் பதிந்தன‌
உழலும் நாடுகள் உலகிற் பலவாம்
ஆழப் பதிந்தபின் வீழலும் அழிவும்
ஈழைப் படுதலும் இயல்பே ஆகும்;
மீண்டு மேல்வர ஈண்டி முயல்வன‌
ஈண்டு பலவே; இரும்பெரு வேர்விரல்
நோண்டிப் பெயர்த்தல் நொய்ம்மைப் பயனே;
முயலும் காலையும் முட்டுக் கட்டைகள்
அயலும் உள்ளும் மிகலே இயல்பே;
முயலும் நல்லரை நிலைபெயர்த் தெறிதல்
இயலும் எல்லா நாட்டிலும் காணீர்;
எனினும் ஊழற்கு இயையார்
நனிநின்று தாங்குதல் நானிலம் போற்றுமே.


உளை  -  சேறு .
பதிந்தன - பதிந்து.  (முற்றெச்சம்)
ஈழை  -  இழிவு .
ஈண்டி  -  மிகவும் 
இரும்பெரு  -  மிகப் பெரிய .
மிகலே  -  அதிகம் ஆகுதலே
நல்லரை -  நல்லவரை .

சனி, 12 நவம்பர், 2016

கமல், கமலா.



நீரால் தான் இருக்கும் காலத்தில் கழுவித் தூய்மையாகத் தன்னை  வைத்துக்கொள்ளும் மலர் கழுநீர்மலர்.   சிவப்பானது
செங்கழுநீர்மலர். இடையில் சில எழுத்துக்களை நீக்கிவிட்டால்
செங் ~ க ~ மல  (செங்கமல)  ஆகிவிடுகிறது.  இது ஒரு சொற்சுருக்கம்.  நாளடைவில் தனிச்சொல்லாக ஏற்றம்பெற்று
உலாவரலாயிற்று. பல ஆண்டுகட்குமுன் யாம் இதை எழுதியிருந்தோம்.
அது இங்கு உள்ளதா என்று தெரியவில்லை. தமிழில் சுருக்கச் சொற்கள்
பல. இதுவும் அவற்றுள் ஒன்று. தெரியாதவன் இது தமிழ் அன்று என்று
வாதாடுவான்.

கழுநீர்மலர் >  கழுமலர் > கமல.
கமல > கமலம் > கமலா.
கமல > கமல்.
கமலி > கமலினி.

எப்படியும் மாறும். -  மனித மூளை  வளத்திற்  கேற்ப ,

செந்தமிழில் சொற்களை வெட்டி ஒட்டிக் கட்டிப் பயன்படுத்தும்
முறைகளை ஆதிநாளில் ஆசிரியர்கள்  மறுத்தனர். செந்தமிழ்
இயற்கை சிவணிய நிலத்தினரான அவர்கள் கவனமாய் இருந்தனர்

இப்போது ஏனோ ‍ தமிழ் வாத்தியார்களுக்குக் குமுகத்தில் எடுபடா
நிலை நிலவுகின்றது. அவர்கள் மறுத்தவை, அக்கரை சென்று திரும்பி வந்து அவர்களை மருட்டுவது வேடிக்கைதான்.

அவர்கள் சொற்கள் பிறரிடம் சென்று ஒளிர்கின்றன.


ஒளஷதம் அவிடதம்


ஒளடதம் என்ற சொல் முன் இங்கு விளக்கப்பட்டு, அணிசெய்துகொண்டிருந்தது.  ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை.

2014 நவம்பர் மாதம் இடுகைகள் பல மூன்றாம் நபர்களால் அழிக்கப்பட்டன.
இவற்றுள் ஒளடதம் என்பதுமொன்று.

இது அவி என்பதிலிருந்து புனையப்பெற்ற சொல்.  அவி+இடு+அது+அம்
என்று இச்சொல் பிளவுறும். வேர் முதலியவற்றை நீரிலிட்டு அவித்து அதிலிருந்து கிடைக்கும் சாறே அவிடதம் ஆம்.  அவி > ஒள.  ட= ஷ.
இது மிக்க எளிமையான ஆக்கமே ஆகும்.

அவி > ஒள > அவு .   அவுடதம்  என்றும் எழுதுவர் .

இதனை யாரும் மறு  வெளியீடு செய்ததாகத் தகவல் இல்லை.