வியாழன், 10 நவம்பர், 2016

யோகம்

தன்பாலிருந்து பிறர்பால் அனுப்பினாலும் தபால். தன்பால் என்பதில்  ன்  
ஒற்றை (மெய்  எழுத்து ) எடுத்துவிட்டால் தபால்.
பிறர்பாலிருந்து தன்பால் வந்தாலும் தபால். இங்கும் அதுவே. அதே!
தான் இல்லாவிட்டால் தபால் இல்லை.

தன்பால் என்பதைத் தபால் என்று சுருக்கியவன் அறிஞன். அவன்
யாரென்று தெரியவில்லை.

இந்த முறையைக் கையாண்டு பல சொற்கள் படைக்கலாம்.

இப்போது ஓங்குதலைக் கவனிப்போம்.  ஓங்கு என்றால் அதிகமாவது, மிகுவது.

மிகுவது பணமாகவோ, வீடுவாசல்களாகவோ இருக்கலாம்.

ஓங்கு என்பதில் ங் எடுபட்டால்  ஓகு.(இலக்கணத்தில் இடைக்குறை.)
ஓகு என்பதில் அம் சேர்த்தால் ஓகம்.(ஓங்குதல், மிகுதல்)
உயிர் முதலான சொல் யகர வருக்க முதலாக வரும்.  ஆனை> யானை.
அதுபோல்,  ஓகம் > யோகம். ( பணம், பொருள் ஓங்கிய நிலை).
உங்களுக்கும் ஒரு யோகம் வருகிறது.

இச்சொல் ஓகம் என்பதிலிருந்து வந்தது என்பதை மறைத்துவிட்டால்
அப்புறம் யோக் என்பதிலிருந்து வந்தது என்று கதை சொல்பவனே
அறிஞர்க்குத்  தலைவன் .





முண்டாசு உறுமாலை உறுமால்

முண்டாசு

முண்டாசு என்ற சொல்லை ஆய்ந்து யாம் எழுதியவை வெளியாரால்
அழிக்கப்பட்டுவிட்டன. அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இப்படி அழிப்பவர்கள், அதனையோ பிறவற்றையோ தமிழெனக் காட்டுதலை விரும்பாதவராகவும் இருக்கலாம். மூலத்தை அழித்துவிட்டு
தமவாக்கிக்கொள்ள எண்ணிய கள்ள ஆய்வாளராகவுமிருக்கலாம். நிற்க.
கடவுச் சொல்லைக் கூடத் திருடக் கூடிய திறவோர் இவராவர்.

அது கிடக்கட்டும். இப்போது முண்டாசு என்னும் சொல் ஆய்வோம்.

முண்டு =  துண்டு. துணி. மலையாளத்தில் இது வழங்குகிறது.
ஆசு :  பற்றிக்கொள்தல். இங்கு அணிந்திருத்தல்.

ஆகவே: துண்டு அணிதல். தலையிலணிதலைக் குறிக்கிறது.

உறுமாலை என்ற சொல்லும் உளது.

உறு:  அணிதல்.( தலையில்) பொருத்துதல்.

மாலை: மாலைபோல் சுற்றப்படுவது.  கழுத்தில் அணிவதுபோல் தலையில் சுற்றுதல்.

இது மால் என்றும் கடைக்குறைந்து வரும்.  "உறுமால்"

இங்கு மாலை:  ஒப்பீட்டு அமைப்பு.

இதுவே முன் எழுதியதன் சுருக்கம்.

சுமையடை , சுமையடி, சும்மாடு  என்பனவும்  காண்க.   தலையில் வைக்கப் படும்  சுமை அழுத்தாமல்  தலையில் சுற்றப்படும்  அடைத்துணி .

சும்மை  >சுமை   இடைக்குறையாகக் கருதலாம் .  சுமத்தல் : வினைச்சொல்.

சும்மை  > சும்மையா(க)  > சும்மா(க)  >  சும்மா.

சுமையாக ,  வீணாக ,   பணம் இல்லாமல்.




புதன், 9 நவம்பர், 2016

அயல்திசை மக்கள்

அயல்திசை மக்கள்  வந்தார்
அதிகமாய் அமர்ந்து கொண்டார்
மறலியை வழியில் வேலை
மாதொழில் வளம்க வர்ந்தார்
எனலொரு மனந்தி ரிந்த
எழுச்சியில் திறம்பு கூவிக்
கனல்பெறத் தேர்தல் வென்றார்
காரிகை இலரி வீழ்ந்தார்.


தன் நிலம் தன் தன் வீடு
தன் தொழில் இவற்றைப் பேணும்
பின் படைக் கொள்கை மேவிப்
பேரம ரிக்கர்  செல்ல;
பன்முகத் தொழில்வ ளர்த்துப்
பார்பரி மாறிக் கொள்ளும்
பண்புறு ஞாலக் கூட்டுப்
பாழ்படும் வருங்கா லத்தே.

அயலுறு திறம்ப ழிக்கும்
அகலுறு அமெரிக் காவில்
பெயல்வரப் பயிர்கள் நாணிப்
பேணுமோ  தம்மைத் தாமே?
கயல்தமைக் கடல்க ழித்தே
அயலென்று வெறுக்க லாமோ?
உயல்பெற உகக்கும் ஞாலம்
தொழில்துறைத் திறப்ப கிர்வே!






மறலியை வழி  -  முன்னைக் கொள்கைகளை மறுத்தலோடு இயைபுடைய வழிகள்  right leaning policies  contrary to those established before.
பின்படை    - retrogressive.
பெயல் = மழை
உயல் -  பிழைப்பு முன்னேற்றம்

திறம்பு:   இற்றை அதிபர் டொனால்டு டிரம்ப்.
இலரி :  ஹிலரி கிளின்டன்.
திறப்  பகிர்வு  -  share of talents