புதன், 19 அக்டோபர், 2016

சாரணர் சொல்லமைப்பு

சாரணர்  என்பது நன்கு அமைந்த நற்றமிழ்ச் சொல்.

சார்தல் என்பதனடிப் பிறந்த இச்சொல், இவர்கள் ஒரு இயக்கத்தையோ, தலைவனையோ, ஒரு கூட்டத்தையோ சார்ந்திருப்போர் என்பதைத் தெளியக்காட்டுகிறது.

அணர் என்பது, பொருந்தி நிற்போர் என்பதைத் தெரிவிக்கிறது.

அண் + அர் =  அணர்

அண் > அணவுதல்,
அண் >அண்டுதல்.
அண் > அண்முதல் 
முதலிய சொற்களின் பொருளைக் காண்க.

சார்ந்து அணவுவோர்,  சார்ந்து அண்டி வினைசெய்வோர் என்பது
பொருளாம்.

மணிமேகலையில்  "நக்க சாரணர்  நயமிலர் "  என்ற தொடர்,   கள்ளும்  மனித ஊனும் உண்ணும் தீவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.


நகுதல் பல பொருளொரு சொல்.  சிரித்தல், ஒளிவீசுதல், மிக்க‌
மகிழ்வுடன் பாவச் செயல்களில் ஈடுபடுதலையும் குறிக்கும்.

நகு > நக்க. (பெயரெச்சம்)  தகு > தக்க  என்பதுபோல .

நக்குதல் ( நாவால் நக்குதல் என்பது வேறு)

பள்ளிகளில் சாரணர் இயக்கம்  scouts movement  உள்ளது.  நீங்கள் அறிந்தது இதுவாகும்.

நல்ல தமிழ்ச் சொல் இதுவாம்.

அணம்  விகுதி  பெற்ற  சொற்கள் ,   விகுதியின்  அமைப்பும்  பொருளும்::-

https://sivamaalaa.blogspot.sg/2015/09/suffix-anam.html


மற்றும் :  https://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_52.html  வாரணம் .

செவ்வாய், 18 அக்டோபர், 2016

திரிந்த பின் தம் வழி ஏகும் சொற்கள்

பேச்சு வழக்குத் திரிபுகளையும் எழுத்தில் உள்ள அவற்றுக்கான சொல் வடிவங்களையும் ஒப்பீடு செய்து, அவற்றைப் போலி என்று சொல்வதில்லை. பேச்சு வழக்கில் வருவனவற்றை இழிசனர் வழக்கு
என்று ஒதுக்கிவந்துள்ளனர்.

எழுத்துமொழியில் ஒரு கருத்தைக் குறிக்கச் சரியான சொல்லை அறிய இயலாமல் ஒருவரிருக்க, அவரே பேச்சில் அதைத் தொல்லை ஏதுமின்றி உரிய சொல்லைப் பயன்படுத்திக் கருத்தை அறிவித்துவிடுதலையும் ஊன்றிக் கவனித்தறியலாம்.

ஓவர்சியர் என்ற ஆங்கிலத்துக்குப் படித்தவர்கள் உரிய தமிழை மொழிபெயர்த்துக் கூற கடின முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, பேச்சுத் தமிழ் அதைக் கங்காணி என்று எளிதில் கூறிவிட்டது. பண்டிதன்மார் பின் அதனைக் கண்காணி என்று திருத்திக்கொண்டு ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட திருத்தங்கள் தமிழுக்குப் பெரிய‌ ஊதியம் எதையும் கொண்டுவந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை.

பிடித்து என்ற எச்சம், பேச்சில் பிடிச்சு என்றே இதுவரை வழங்கிவருகிறது.  மலையாளமும் பிடிச்சு என்றே வழங்குகிறது.  ஆனால்
த ‍ > ச பரிமாற்றம் எழுத்திலும் உள்ளது.

இன்னும், டகரத்துக்கு ரகரம் வருவது குறைவாகவே உணரப்படுகின்றது.
பிடித்திடுவாள் என்பது பிடிச்சிருவாள் என்று வருகையில் டு> ரு திரிபு
கண்டுகொள்ளப்படாலும் போய்விடும்.

சில உணவுகளை, அல்லது ஊணையே கொஞ்சம் விலக்கிவைப்பது
உண்மையில் விடதம் ஆகும். டு> ரு போல. ட> ர ஆகி, விடதம்
விரதம் ஆனது பலர் அறியார்.

விடு+ அது + அம் = விடதம்.
விடதம் > விரதம்.

மடிதல் சொல்லில் மடி > மரி என்று திரிதலை, புலவர் சிலர் அறிந்துள்ளனர்.  இங்கு டகர ரகரப் பரிமாற்றம்.

விடு >  விடி  >  விரி >  விரித்தல் .  விரிதல்  

ஒன்றானது விடுபட்டு  விரியும்.

சில வேளைகளில்  டகரம் ரகரமாய் மாறிப், பொருளும் சற்று வேறு நிலைக்குத் தாவிவிடும். இடும் பொருள், இருக்கும்.  இட்ட இடத்தில்
இருக்கும். ஒன்று செயல், மற்றொன்று செயலின் விளைவு.  ஆக.
இடு இரு என்பதன் முன் வடிவம் என்று அறிக.

மரி என்பது மடி என்பதன் திரிபு எனினும், மடிதல் மரிதல் என்று ஆகாது.
மரித்தல் என்று த‌கரம் இரட்டித்தே வரும். மரி என்பதனோடு அணம் விகுதி சேர்ந்து, மரணம்  ஆவ‌துபோல், மடி > மடணம் ஆவதில்லை.
சொற்கள் திரிந்தபின் தம் வழிப்  போய்விடுகின்றன. என்பது உணர்க.


புலவு  என்பது இறைச்சி.  எனினும் புலவர் என்பது பெரும்பாலும் இறைச்சி உண்பவரைக் குறிப்பதில்லை. ஒரு விகுதி மட்டும்தானே
மாற்றம். ஏன் இத்துணை பொருள்மாற்றம்?

புலையர் என்போரும் புலவு உண்டவர் என்பர், எனினும் புலவு உண்போர்
பலர், அவர்கள் எல்லோரும் புலையரல்லர். பொருள் பொருத்தமாக‌
இல்லை. இவர்கள் முன் காலத்தில் ஐயர்கள் போலும் சில  மந்திரங்கள் சொல்லி, இறைச்சி முதலியன இட்டுப் படைத்துச் சடங்குகள் செயதனர்
என்று தெரிகிறது.  ஆகவே சிறிய ஐயர்கள். புன்மை = சிறியது.
புல்+ஐயர் >  புல்லையர் > புலையர் (இடைக்குறை)  புல்லையா என்றபெயர் உள்ளோரும் உளர். இவர்கள் வரலாறு ஆய்வுக்குரித்து.








  

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தாமதம்

தாமதம் என்ற சொல் பற்றிப் பத்தாண்டுகட்குமுன்னரே எழுதியிருந்தது
இன்னும் நினைவிலுள்ளது. ஆனால் அது இங்கு கிடைக்கவில்லை. எழுதி வெளியிடும்போதே அதை அழித்துவிடும் ஒட்டு மென்பொருள் கள்ளத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபடியினால், அது அழிந்திருக்கக் கூடும்.

இப்போது அதை மீண்டும் காண்போம்.

செய்ய ஒதுக்கப்படும் நேரத்தை மதிப்பிடும்போது, உரிய அளவிலான நேரத்தை ஒதுக்காமல் தாழ்த்தி மதிப்பிட்டு, குறைந்த நேரத்தையே ஒதுக்குவோமாயின், வேலையைத் தொடங்கிப் பார்க்குங்கால், நேரம்
போதாமையினால், ஒரு தாமதம் ஏற்படுகிறது.  நாலு நாள் வேலைக்கு
இரண்டு நாள் ஒதுக்கினால், இரண்டு நாட்களில் வேலைமுடியாமல்
தாமதம் ஏற்படுகிறது.

இதுவே தாழ்மதித்தல் ஆகும்.  இதிலுள்ள ழகர ஒற்று மறைந்து   தாமதித்தல்
தாமதம் என்றானது.   தாழ் மதி >  தாமதி >  தாமதி + அம்  =  தாமதம் .

நேர அளவீடும்  வேலைச் செயல் அளவீடும்  ஒத்து இயலாமைதான்  தாமதம் என்பது.  இங்கு மதி என்பது அளவிடுதல் குறித்தது.

ஆங்கிலத்தில்  டிலே என்பதற்கு என்ன பொருள் ?  டி  என்பதென்ன?  லே
என்பதென்ன ?  டி =  கீழே?   லே = வைத்தல் ?  இச்சொல்லையும்  ஆய்ந்து
அறிதல்  நலம்.

தாழ  என்பதையே  "டி " -யும் குறிக்கும்.

இதுபின் எவ்வகையான காலத் தாழ்த்தையும் குறிக்கலாயிற்று.