ஞாயிறு, 24 ஜூலை, 2016

மந்த நிலவினில்

மந்த நிலவினில் என் தன்  புன்சிரி
கண்டு மயங்கினையோ கண்ணனே!
வந்த வனத்து வண்ண மலர்களில்
வாய்த்த இன்பம் மகிழ்வாய்
தந்த மணந்தனில் தலைகிறு
கிறுப்பினில் என்னில் இணைந்துருகி
செந்தமிழ் மலை ஊற்றில் கலந்திடத்
தீதொன்றும்  வந்திடாதே.

முன் கண்டிராத காணொளிகள்

மூவா  யிரத்துமுந் நூற்றின்மேற் பட்டரிய
முன்கண்டி ராதபடக் காணொளிகள் கைவரவே
யாவும் பார்த்துமகிழ் வெய்திடுதல் யாங்கினுமே
யார்க்குமிய  லாததுவே யாமும்சில பார்த்தறிந்தேம்
மேவும் வாழ்வினிலே மீதமின்றி இவைபார்க்க
மின்னலென விரைந்திடுதற் கெம்மிடமோர் திறனில்லை
நாவும்  நன்றியன்றி யாம்பகர யாதுளதோ
நல்லவுள்ளம் கொண்டவர்கள் நலம்பெறுக நனிவாழ்க.


முன்  கண்டிராத காணொளிகள்

பட்டரிய :   பட்ட அரிய
செய்யுளில் இது தொகுத்தல் .
கை வர : கைக்குக் கிடைக்கவே
நனி - நன்றாக


சனி, 23 ஜூலை, 2016

எழுத எதுவும் இயலாமை

எழுத எதுவும் இயலாமை  ஏனேன்
பழுதுறு மென்பொருள்  பாய்ந்துலவி உள்ளிருக்க
ஆங்கவை  தேய்த்தே அகற்றினோம் அன்பர்காள்
தாங்கித் தருகநெஞ் சம்.

பழுதுறு -  பழுதுறுத்தும்.  பழுது  உறு மென்பொருள் என்பது
வினைத்தொகை.  தேய்த்தே - அழித்தே.   தாங்கி - பொறுத்து.


அட்டவணை தன்னை அணுகியாம்  தொட்டதுமே
கொட்டிய பக்கத்தைக்  கூட்டியுள் சேமிக்கும்
செட்டுச் செயலே  இழந்ததே  இக்கணினி
நட்டுயாம் நாட்டியவை இல்.

அட்டவணை-  பட்டியல். இது இங்குள்ள பக்கங்களைக் (pages) குறிக்கிறது. தொட்டதுமே -  தொடங்கியதுமே. கொட்டிய - பகர்ப்புச் செய்து மேலேற்றிய. ( copy and pasted) கூட்டி - ஒன்றுபடுத்தி. ( collected from editing applications ) சேமிக்கும் - வைத்துக்கொள்ளும். (save)   செட்டு -  நேரத்தைச் செலவாக்காமல் நன்கு பயன்படுத்தும் முறையைக் குறிப்பது.  (time save measures)  நட்டு - வேறிடத்தில் இருந்து எடுத்துப் புகுத்தி.  நாட்டியவை - இடுகையாக்கியவை.  இல் - இல்லை.



1.Kindly report any errors generated by viruses and any typos/errors you may find. Thank you.
2.  நட்டு யாம் என்பதை நட்டியாம் என்று எழுதுவர். இங்கு யாம் அப்படி எழுதவில்லை.