ஞாயிறு, 12 ஜூன், 2016

சாத்திரம் > சாஸ்திரம்

தமிழ்போன்ற அல்லது அதனுடன் தொடர்புடைய ஏனை மொழிகளை ஆராயும் போது மனித வளர்ச்சி நூலின் கருத்துகளையும் மனத்தின் பின்புலத்தில் வைத்துக்கொள்வது இன்றியமையாதது ஆகும்,

இற்றை நாகரிக நிலையை அடையுமுன் அவன் பல வளர்ச்சிப் படிகளைக் கடந்துவர வேண்டியதாய் இருந்தது. குகைகளிலும் மரக்கிளைகளிலும் வாழ்ந்த காலத்தில் அவன் பயந்துகொண்டிருந்தது சாவிற்கே ஆகும். சாவினைவிட அவனையுலுக்கிய பெருஞ்சிந்தனைக்குரிய வேறொரு நிகழ்வு யாண்டுமிலது, அவனது மரண அச்சமே இறைவனைப் பற்றிய எண்ணங்களைத் தோற்றுவித்தன. இறந்தபின் வெற்றுடல் கிடக்க, இறந்தோனின் உயிர் எங்கே போயிற்றென்று அவன் கவன்றான். சாவின் திறமறிய அவன் முயன்று பல சிந்தனைகளையும் உண்டாக்கி சமயகருத்துக்களையும் காலம் செல்லச் செல்லப் படைத்துக்கொள்வானாகினான்.

சாத்திறம் > சாத்திரம் - சாஸ்திரம். சாவின் திறமறி கலை.


நாளடைவில் இது ஏனைக் கருத்துக்களையும் உள்ளடக்குவதாயிற்று.

மரணத்தின் பின் மனிதன் நிலை யாது?   சாவின் திறன் விளக்கிய   கலைஞர்
ஆன்மா வேறு  உயிர் வேறு என்றும்  ஆன்மா அழியாதது  என்றும்  அது இறைவனை  அடைதற்குரியது  என்றும் தெளிவிக்க முயன்றனர்.   அழியும்  நிலையற்ற  உடலுக்கு  அழியாத ஆன்மா ஒன்று இருப்பது ஒருவாறு சாக்கவலையைத் தீர்ப்பதாக நின்று  சாவு கண்டு மனம் இடிந்துபோன மனிதனைத் தேற்றுவதாய் அமைந்தது.  இதுவும் சாத்திறம் >  சாத்திரம் >  சாஸ்திரமே. சாத்திரம்  வளர்ந்தது/

இப்படி மனித வளர்ச்சியின் பல படிகளைக் காட்டும்  வரலாற்றுச் சொல்லாக 
சாத்திரம்  >  சாஸ்திரம் என்ற சொல்  அமைந்துள்ளது அறிந்து மகிழற்பாலதாம்.

சனி, 11 ஜூன், 2016

சொல் : தாற்பரியம்

கருத்து,  கருத்துரை என்று பொருள் படும்  சொல்தான்  "தாற்பரியம் "

தால்  -   நாக்கு.

பரி -    வழி ,  மிகுதி ,  பெருமை ,  செல்லுதல்,

பரி + அம்   =  பரியம்.

தால் + பரியம் =  தாற்பரியம் ,  நாவின் வழியாகச்  செல்வது,   நாவிற்குப் பெருமை தருவது,  நாவினின்றும்  மிகுந்து  வெளிப்படுவது.


தால் என்ற அடிச்சொல்  தொங்குதல் குறிக்கும்.   அது நாவையும் குறிப்பது எதனால்  எனின் ,   நாய் முதலிய விலங்குகளில்  நாவு  தொங்குதல் உடையது.
அன்றியும் நாக்கு வெளிப்படின்  அதனைத் தொங்கும்படியும் ஏனை உயிர்களால் செய்ய முடியும்.  அதாவது நீட்டவும் உள்ளிழுக்கவும் செய்யும் வசதி கொண்டது.

தாலி  -   கழுத்தில் தொங்கும் அணி .

தால் ,  ஞால் :   தொங்குதல்.

ஞால்> ஞாலம்     விண்ணில் தொங்கும்  இவ்வுலகம் ,

தால்  > தார்   (தொங்குவது:)    கழுத்தில் தொங்குவதான பூமாலை;  சிங்கத்தின்
பிடரி மயிர் (தொங்குவது )  இது லகர ரகரத் திரிபு.

தார் > தாரம் :  நாக்கு என்பதும் பொருள் .

தாலாட்டு  -  குழந்தையைத் தொட்டிலில் (தொங்குவது ) போட்டுப் பாடுவது .

எனவே தாற்பரியம்  புரியும்படியான    தமிழ்ப் பதமே.

இதைத் தாத்பரியம் என்று எழுதலாகாது.


வினோதம். சொல்லினழகு.

விநோதம் என்ற இனிய சொல் நம் தமிழ் மூலங்களிலிருந்து எப்படி அமைந்தது என்பதை இப்போது அறிந்து,  ஞாயிற்றின் ஒளியை வியந்து நுகர்ந்துகொண்டிருக்கும்  இந்த ஞாயிற்றுக் கிழமையில் மனமிக மகிழ்வோம்.

வி =  விழுமியது; வியப்புக் குரியது .  இரண்டும் "வி" என்றஎழுத்தில் தொடங்குவதால்  இது பொருத்தமான குறுக்கம்.  இங்கு முன்னொட்டாகப் பயன்படுகிறது.

நோக்கு என்ற சொல்லில்   இறுதி  "கு" என்பது   ஒரு விகுதி.    மூழ்கு,  (  மூழ் )  ,  பெருகு  (பெரு )    என்பவற்றிலும்  இவ்விகுதி சேர்ந்து சொல்லமைதலைக்  காணலாம்,

எனவே  நோக்கு என்பதில்  "கு" வை  எடுத்துவிட்டால்  மீதம்  "நோ "   இதுவே  அடிச்சொல்.  இந்த அடிச்சொல்லுக்கும்  நோக்குதலே  பொருள்.

வி + நோ +  து +  அம் .

வியந்து  (வி )  நோக்குதலுக்கு (நோ )   உரியது   (து )    அம்  -  விகுதி.   அழகு என்பதும்   ஆகும் .

து என்பது  ஒன்றன்பால் விகுதியும் ஆகும் .

வியந்து நோக்கற்  குரித்தே  வினோதம்.

என்னே இச் சொல்லினழகு.