செவ்வாய், 7 ஜூன், 2016

செய்தியாளர் ஒடுக்கம்

"ஒத்துவராச் செய்தியாளர்  ஒழித்திடுவாய்  அவர்களையே"
மெத்தவுரக் கக்கூவும்   மேலதிபர்  பிலிப்பைன்சில்
இத்தகைய உத்தரவை இயல்பாக எத்தனித்தார்
தொத்துநோயாய்   இதுபரவின் எத்துணைஎத்  துணைஇடரோ

ஊடகங்கள் மக்களாட்சி ஒழுங்கிலொளிப்  பளிங்கலவோ
ஆடகத்துள் ஆடுதல்போல் அதையுடைக்க  ஓடுவதோ
மேடிலங்கும் அரசியலை கீழ்ப்படுகைக் குய்ப்பதுவே 
கூடிவரும்  நலம்பலவும் கூன்படுமே குலைந்திடுமே .


படிக்க:   \


https://sg.news.yahoo.com/philippines-duterte-extremely-irresponsible-un-experts-114303396.html?nhp=1











திங்கள், 6 ஜூன், 2016

குறுந்தொகை: நாட்டு / விலங்குகள் வருணனை.

புரிமட மரை ஆன் கரு நரை நல் ஏறு
தீம்புளி நெல்லி மாந்தி அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்து
ஓங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக‌
வடபுல வாடைக் கழி மழை
தென்புலம் படரும் தண்பனி நாளே 


இது மதுரைக் கண்டரதத்தனார் பாடிய குறுந்தொகை 317‍வது இனிய பாடல். இதில் புலவர் தலைவனின் நாட்டு வளக் காட்சிகளைச் 
சுவை  சொட்ட வரிகளாக்கியுள்ளார். ,

தலைவனின் நாடு உயர்ந்த மலையை உடையது, அங்கே பசுமையான ஊற்றுநீர் கிடைத்தது, அதைப் பருகி உடல்நலம் மிக்கவனாய் அவனிருந்தான் என்பது தோன்ற பைஞ்சுனை பருகு  நாட்டவன் என்கிறார், நாடன் என்பது குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்.

குறிச்சி என்பது அங்குள்ள ஊர். உதாரணம், கடுக்காக்குறிச்சி. ஓங்குமலை என்று புலவர் பாடுதல் காண்க‌.


மான் மரை என்று சொல்லப்படும் இனத்துள் இங்கு மரை பற்றிப் பாடலில் வருகிறது. மரை ஆன் என்றால் பெண்மரை. இது மிகுந்த‌
மடம் உடையது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று கூறுவர் இவற்றுள் சொல்லப்படும் மடம்,      புரிமடம் என்றது ஆண்மரை மிக‌
விரும்பும் பெண்மரையின் மடம். அதாவது ஆண்மரை அறிந்த எல்லாம் பெண்மரை அறிந்திருப்பதில்லை. . அது பெண் என்பதனால்;
இதன்  (இவ்வறியாமையினால்  அது  ஆண் மரையிடத்து நடந்துகொள்ளும் விதங்களின் )  தொகையே மடம் எனப்படுகிறது. இந்த மடப்பத்தை ஆண்மரை விரும்புகிறது.


இந்த ஆண் மரையானது, கரியது: அதாவது கரு நிறத்தது; நரை என்றதனால் பெண்மரையை  நோக்கின் உருவிற் பெரியது. நல்ல குணங்கள் உடையது. எனவே கரு நரை நல் ஏறு என்றார் புலவர்.' நரை என்பது பெருமையாகும்.

(தொடரும்) .






ஞாயிறு, 5 ஜூன், 2016

கண்டனம்

மென்மையாகப்  பேசுதல்,   கடுமையாகப் பேசுதல்,  அன்பாகப் பேசுதல், தெளிவாகப் பேசுதல் என்று பல வகை  சொல்வர்.

இவற்றுள்  கடுமைப் பேச்சினை இப்போது காண்போம்.


கோப்பையைத் தட்டிவிட்டான் என்று தந்தை மகனைக் கடிந்துகொண்டார்  என்பது ஒரு வாக்கியம்.

கடிதல் (, கடிந்துகொள்ளுதல்)  என்பதில்   கடு  என்பதே அடிச்சொல்.

கடு >   கடி. >   கடிதல்.


கடிதல் என்ற சொல்லிலிருந்து கண்டித்தல் என்ற சொல் தோன்றியது.


கடி என்ற சொல்லுக்கு  இடையில் ஒரு  ணகர  ஒற்று .இட்டால் :


கடி  >    கண்டி .   (ண்   தோன்றல் .)

பின்பு:


கண்டி +  அன் +  அம்  =  கண்டனம் .     (அன் - இடைநிலை  ) அம்   விகுதி  பெற்றது

கண்டனை என்ற வடிவம் காணின்  அஃது இறுதியில்  ஐ விகுதி பெற்றது ஆகும்.  வரின் காண்க.