வியாழன், 19 மே, 2016

சில் என்ற அடிச்சொல்


சில் என்ற அடிச்சொல் தமிழில் இன்னும் அறியக்கூடிய வகையில் இருக்கின்றது.

ஒரு கல்லை உடைக்கும்போது அதிலிருந்து ஒரு துண்டு பறந்துவந்து விழுந்தால்  ஒரு சில் வந்து விழுந்தது என்போம்..  இந்தச் சொல் இன்னும் வழக்கிலுள்ளது.

சில் என்பதிலிருந்து சிலாம்பு என்பது அமைகிறது.  இது சில்+ பு என்ற பகுதி  விகுதிக்கிடையில் ஆம் (அம்)   என்ற இடையீடு பெற்றது.

சில்> சில்+ ஆ,ம்+ பு =  சிலாம்பு.  

இது மீன் செதிளையும்  மரப்பொருக்கையும் குறித்தது.

இது சில் > சிலுக்கு  என்று  கு விகுதி பெற்றும் வரும். இடையில் ஒரு உகரச் சாரியை வந்தது.  மரப் பொருக்கையும்  அறுக்கும் வாளின் பல்லையும்  குறிக்கும்.    வேறு பொருள்களும் உள.

சில் > சிலும்பு என்றுமாகும். மரச் சிராம்பையும் குறிக்கும்.

சில் >  சில்லம்:    இது துண்டு என்றும் பொருள்படும்.

சில் > சில்லி என்றுமாகும். பொருள் துண்டு. பிற பொருளும் உள,

மரத்தைச் சில்லுகளாக   ( அதாவது மிக மிகச் சிறிய சில்லுகளாக
அரித்தெடுக்கும் கறையானுக்குச்  சில்லான் என்பர்.

சுள்ளான் என்ற மாதிரியில் அமைந்தது சில்லான்.


சில் > சில்லு என்றுமாம்.

சலித்தெடுக்கும்  வலைக்கண்கள் அமைந்த  கருவிக்குச் சில்லியடைஎன்பர். சல்லடை எனவும் படும்.

சில் >  சிலை.   சில்லுச் சில்லாய்   அடித்தெடுத்து   ஓர் உருவில் அமைவது.

சில் > சில்லி > சல்லி   ( உ - அ  திரிபு)     சல்லிக்கல்

செந்தமிழ் இயற்கை சிவணிய  நிலத்து வாழ்நர் இச் சில்  சொல்
மறப்பரோ?

To take over a State Administration

இன்னொரு கட்சி  ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தை  நாம் எண்ணிகொண்டிருக்கும்  மற்றொரு கட்சி போய்  அக்கட்சியை அகற்றிவிட்டு  நிறுவாகத்தை  மேற்கொள்வதென்பது மிகுந்த கடினமான வேலை என்று சொல்ல வேண்டியுள்ளது .  அதிலும் அந்த நிறுவாகம் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தால் அதை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில்  செலுத்துவ தென்பது மிக மிகக் கடினமென்றுதான்   சொல்லத் தோன்றுகிறது .

புஷ் அரசிலிருந்து விலகும்போது  பொருளியல் நிலை நன்றாக இல்லை.  ஒபாமா அதை மேற்கொண்டபோது  அதற்கு  அவர்  பாடுபட  வேண்டியிருந்தது .

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் கிடைத்த சில செய்திகளைப் பார்த்தால் தமிழ் நாடு  அரசு இப்படி நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது என்று தெரிகிறது .
மற்றொரு கட்சி போய் அங்கு அமர்ந்தால் நிதி நிறுவாகத்தை  சரிப்படுத்த வேண்டிவரும்,  அதற்குப் பணம் வேண்டுமென்றால் கடன் வாங்க வேண்டும் அல்லது  வரிகளை உயர்த்த வேண்டும் அல்லது  வேறுவகைகளில் பணத்தைத் தேடவேண்டும்,

ஆகவே  மற்றொரு கட்சி வராமற் போனது  அந்த வராத கட்சிக்குத்  தலைவலி  குறைவு என்று சொல்லத் தோன்றுகிறது.   அந்த இடத்தில் போய்  அமராத காரணத்தினால்  அந்தச் சுமை இல்லையாகிவிட்டதன்றோ ?

இதில் வியப்பு என்னவென்றால்  அந்த  எரியும் நாற்காலியில் போய்  அமருவதற்கு  பல கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு  ஓடுவதுதான்.  ஏன்
இவர்கள்  ஓடுகிறார்கள் ?    ஆட்சி  முடிந்தபின்  இறங்கிவிடும்  நிலையில்  இதை ஏன்  செய்ய வில்லை  அதை ஏன் முடிக்கவில்லை  என்று
யாரும் கட்டிப்போட்டு  அடிப்பதில்லை !  அதனால் விரும்பி  அங்கு செல்ல முனைவோர்  அதிகமாகவே உள்ளனர் .

இதை அறிந்த மக்கள்  வெகு கவனமாகவே  அன்புமணி, விஜயகாந்த்  முதலியவர்களைத் தேர்வு செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது.

 .
,


இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?

பன்றிகழு தைமாடு நாய்கள்  எல்லாம்
பாவமவை தம்விதியை நொந்த வண்ணம்
உண்டுகிடந்   துறங்குவன மாந்தர் தாமே
ஒழியாம லவைபெயரால் திட்டு வார்கள்
பண்டுமுதல் இன்றுபயின் றோங்கு மாந்தன்
பண்பட்டு மாறிடினும்  மாற வில்லை!
என்றவற்றை இழுக்காமல் நன்று கற்றே
இனிதாகப் பணிவாகப் பேசு வானோ?



Did you say ‘pigs ’.............? 

https://sg.news.yahoo.com/did-pigs-dap-guan-eng-asks-hadi-063300534.html