புதன், 4 மே, 2016

வண்டிப் பயணத்தின்மேல் ஆசை

வாண்டாய் இருப்போர்க்கு வண்டிச் செலவாசை
தூண்டா நிலையிலும் துள்ளிக் குதித்தா டி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம்.

On violence against children பிள்ளை கடத்தி..........

http://www.usatoday.com/story/news/nation/2016/05/03/new-mexico-girl-killing-arrest/83906060/

சிறுவர் சிறுமியர்க்குச் சீருடன்பார்  மீதில்
நிறுவிய நல்வாழ்வு நேர --- உருவிய
வாள்கொடு பின்செல்ல வேண்டுமோ இன்றெனில்
மாள்நெறி  மன்னுமோ தான்.

பிள்ளை கடத்திப் பிழைச்செயல் செய்வாரை
அள்ளியே கம்பி அறைக்குளிட்டு  ---- உள்ளுக!
நல்லன  நாடிடுக!  நாளைக்குள்  நேர்செலென்
றொல்லும்வாய் ஓங்கிச் செயல்.

பெற்றோர் கதறவே    பிள்ளையைக் கொன்றானை
மற்றோர் கணமுமே தப்பாமல் ---தெற்றின்றி
மன்றிலே  தீர்ப்பளித்து  மாலுதல் நீக்கியே
கொன்றொறுக்கக் கூடா கொலை.

வாள் கொடு  = வாளை எடுத்துக்கொண்டு 
மாள்  நெறி  = மரணத்தில் முடிதல் 
ஒல்லும் வாய் = இயன்றவரை 
தெற்றின்றி =  தவறுகள் இல்லாமல் 
மாலுதல் =  மயக்கம்  , ஐயப்பாடு 
கொன்றொறுக்க =  மரண தண்டனை விதிக்க;
கூடா =  அதிகம் ஆக மாட்டா. (கொலை கூடா )

செவ்வாய், 3 மே, 2016

தீபாவளியையும் இந்திய இசையையும் விரும்பும் முதல்வர்

சரவாக்  முதலமைச்சர்  அடனான்  இந்தியர்கள் பால்  பெரிதும் அன்பு கொண்டு ஒழுகுதலைத்  தம் நெடு நாளைய வழிமுறையாகக் கொண்டிருப்பவர் என்று அறிகிறோம். இவர் தீபாவளி  நாளில் இந்தியர்களைக்  கண்டு அளவளாவுதலுடன்  இந்திய இசையிலும் ஈடுபாடு உடையவர்.

ஏறத் தாழப்  பத்தாயிரம் இந்தியர்களே சரவாக்கில் உள்ளனர். ஆகவே சிறிய குமுகாயம்  (  சமுதாயம் ) தான் . இவர்களில்  இரண்டாயிரவர் தலைநகர்  கூச்சிங்கிலேயே  வாழ்கின்றனர்.

முதலமைச்சருக்கும் அவண்  வதியும்  இந்தியர்களுக்கும்  சரவாக்கியருக்கும் நம் வாழ்த்துக்கள் உரியனவாகுக .