வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Ind: விருந்தா வனமும் தேர்தல் களமும்

விருந்தா வனத்துப் பச்சையும் பூக்களும் விருந்தா  வனதேன்  ஈக்கண்களில்
அருந்தா மனத்தோ டங்குமிங்  காகவே பறந்தன பறந்தன தேடலிலே

பொருந்தும் ஒருபூ பூத்தவை தம்மிலே எந்தப் பூவதோ சொந்தமுற.

இருந்தது அங்குசென் றிணைந்ததும் ஒழிந்தது வருந்துதல் தேனீ அருந்தியதே.



தேர்தல் களமென்ன விருந்தா வனமோ
வேட்பா ளர்களும் பூக்க  ளாமோ
ஊர் வாழ் மக்களும் தேனீக்கள் தாமோ  
ஆர்தேன் பெறாவிடில்   நீர்விழியோ

கடல் குடித்த மாமுனிவர்!


http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_21.html

தொடர்வோம்:

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு யாவும்
கடல் கொண்டது.    கடல்கோள் நிகழ்ந்ததாகவே தமிழ் நூல்களும் சங்கத நூல்களும் குறிப்பிடுகின்றன. அண்மையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமொன்று தென்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் குறிப்பிடுவது, ஏறத்தாழ் 5000 ஆண்டுகட்குமுன் நடந்த கடல்கோள். பின்னும் நிலத்தை விழுங்கிய கடல்கோள்கள் நிகழ்ந்தன என்பதையே பின்னாள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

இரண்டாம் சங்கமும் தமிழ் நூல்களும் அழிந்தபின், தொல்காப்பியர்
தம் இலக்கண நூலை இயற்றினார். தொன்மையைக் காக்க இயற்றினதால் அது தொல்+ காப்பு+  இயம்  = தொல்காப்பியம் என்று பெயரிடப்பெற்றது.
அப்போது அகத்திய முனி எங்கிருந்தார் என்பதற்குத்   தொல்காப்பியத்தில் ஆதாரமில்லை. அதாவது ,பாயிரமோ எந்த நூற்பாவுமோ  அகத்தியரைக் குறிப்பிடவில்லை. இருந்தாலும்
அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் அவர் அப்போது அங்கிருந்தார் என்றும் வைத்துக்கொள்வோம்.  தமிழ் என்ற சொல்லும் அமிழ் என்ற சொல்லினின்று அமைந்தது என்றும் வைத்துக்கொள்வோம். தொல்காப்பியம் இயற்றப்பட்டபின் வெகுகாலத்துக்குக்  குறிப்பிடத் தக்க  கடல்கோள் யாதுமில்லை.

 அப்போது மீண்டும் கடல் பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள், அது பொங்கவில்லை என்று கண்டனர்     பொங்காதது ஏன்
என்று வியந்திருக்கலாம்.  அகத்தியர் கடலைக் குடித்துவிட்டதால்
பொங்கவில்லை என்று எண்ணி, அவருக்குக் கடல் குடித்த மாமுனி
என்று பெயரிட்டிருக்கலாம் என்று  சொன்னால்  அது நம்பிக்கையினால் சொன்னதென்று விடல் தகும். நாளடைவில் இதைச்சுற்றித் தொன்மக் கதைகள் புனைவுற்றிருக்கலாம்.

அங்ஙனமாயின் கடல்குடித்தமைக்கு ஒரு காரணம் கிட்டுகிறது.
ஆனால் முன் இடுகைக் கருத்துக்களுக்கு அது இசைவாகுமா என்பதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.


வியாழன், 21 ஏப்ரல், 2016

கடலுண்ட அகத்தியர்.


கடலென்பது மிக விரிந்த நீர்ப்பரப்பாதலின், அதனை அப்படியே உண்டுவிடவோ குடித்துவிடவோ முடியாது. கடல் குடித்தார் என்று தமிழிற் சொன்னால், கடல் நீரைக் குடித்தார் என்றுதான் பொருள்.அது உப்பு நீரானதால் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்றதன்று எனப் பெரும்பாலும் ஒதுக்கப்படுவது ஆகும். கடல் குடி நீரன்று, குடித்தார் எனப்படுவதாலே
கடலை முழுமையாகக் குடித்து மாயவித்தை காட்டியவர் என்று சிலர் சிந்தித்து, ஒரு கதையைக் கட்டிவிட்டனர். யாரிடமும் சென்று நீர் என்று இரந்து பெறாமல், கிட்டாப் போதில் கடல் நீரையே  அருந்தி வாழ்ந்தார் என்று சொல்வதே ஓரளவு   பொருத்தமானது. இப்படிப் பொருள் கொண்டால் கடல் என்பது ஆகுபெயராய்க்  கடல் நீரைக் குறிக்கும். கடல் வேறு; அங்குக் கிடைக்கும் நீர் வேறு. அதாவது கடலைக் குடிப்பது வேறு;  கடல் நீரைக் குடிப்பது வேறு.  கவிதைகளில் ஒழுங்காய்ப் படிக்காவிட்டால், பொருள் மயக்கம் உண்டாகும்..
  மேலும் இவருக்கு அகத்திய  என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கலாம். அகத்தி என்பது மருத்துவக் குணங்கள் பல‌
அடங்கிய ஒருகீரை வகை ஆகும். அகத்திக் கீரை உண்டதாலோ,
அகத்திமரத்தை விரும்பியதாலோ, அகத்தியை மருந்தாகப் பயன்படுத்தியதாலோ இப் பெயர் இவருக்கு ஏற்பட்டிருக்கலாம்,
பெரிதும் வீட்டிலேயே அல்லது குகைகளிலேயே தங்கித்  தவமேற்கொண்டதால்  இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆத்துக்காரன்,
(அகத்துக்காரன்),  ஆத்துக்காரி ( அகத்துக்காரி ),  ஓரகத்தி  (ஓர்
அகத்தி ) என்ற சொற்களையும் ஆய்தல் வேண்டும்.  அகத்தி என்றால் வீட்டுக்குள் இருப்போள், இருப்போன் என்று பொருள்.
இதை யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்ல.

இன்னும், குடித்து என்றால் குடியை உடைத்து அதாவது குடியை உடைய என்றும் பொருள் ஆகும்.  குடி என்ற சொல் இன்று பெயர்ச்சொல்லாகவும்  வழங்குகிறது. வினையாகவும் வழங்குகிறது. " கடல் குடித்த " கடல்பக்கம் வீட்மைந்த என்பது கடல் நீரைக் குடித்துக்கொண்டு திரிந்தவர் என்பதினும் நல்ல பொருள் விளக்கமாகவே படுகிறது.
கடலை எடுத்து உண்டவர் என்று தவறாகப் பொருள் கொண்டு, சிலர்
அகத்தியர் என்று ஒருவரே இருந்ததில்லை என்று மறுக்கும் அளவிற்கு அறிஞர் சிலரை எழுதவைத்துவிட்டது இந்த அகத்தியர்
பற்றிய தவறான பொருள்கோடல்கள் என்பது தெளிவு.

கடல் குடித்த அகத்திய மா முனி ‍  :  கடல்பக்கமாக குடியுடையவராய்  அகத்துள் தவமியற்றியவர் என்பது நன்றாகும்.  கடல் -  கடல்பக்கம்  ; குடித்த - குடியுடை கூட்டத்தின் .   ;  அகத்தியர்   -  வீட்டினர்.   அகத்தியருக்குத் தமிழ் போதிக்கப்பட்டதாகக் கதை இருப்பதால்,  அவர் மனிதரே . ஆகையால் அவர் கடலைக் குடிக்க முடியாது.

இது பற்றிப் பின் சிந்திப்போம்.

will edit.