திங்கள், 4 ஏப்ரல், 2016

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி.........

உறுதல் என்னும் புலனுணர்ச்சி,  தோலுணர்ச்சியையே சிறப்பாகக் குறிப்பது. எனினும் நாவுடன் உண்பன உறும்போது,  உரசும்போது, படும்போதுதான் நாவும் பொருளின் சுவையை அறிந்துகொள்கிறது. நாவினை அண்டிவராத பொருளை அறிதல் யாங்ஙனம்? எனவே உறுதல் என்ற உணார்ச்சி, நாவில் உறுதல், மூக்கில் உறுதல், செவியில் உறுதல், கண்ணில் உறுதல் என்று  பல்வேறு வகைப்படும். கண்ணுறு, செவியுறு என்ற சொல்லாட்சிகளும் உண்டே!

நாவுறுதலே உறு > உறுசி எனப்பட்டது.

இது பின் உருசி எனத் திரிந்து, அதன்பிறகு தலையிழந்து ருசி என்றும் ஆயிற்று.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி வேறு திரிபுகள் யாதுமில்லை.

பொருளும் தெளிவாகவே உள்ளது. சி விகுதி .

தந்தியும் தந்திரங்களும்

இப்போதெல்லாம் தந்தி பற்றிக் கேளிவிப்படுவதில்லை.  மின்னஞ்சல் என்ற இ‍மெயில் மற்றும் பல புதியன புகுந்தபின், தந்திக்கு வேலை வெகுவாகக் குறைந்துவிட்டது. குறுஞ்செய்தி அனுப்பலாமே, உங்கள் கைபேசியிலிருந்து!  அப்புறம் தந்தி எதற்கு?

த ‍  :  தனக்கு வருவதாகிய செய்தி.
தி   :  நீங்கள்  திருப்பி அனுப்புவதாகிய செய்தி.

ஆக, த + தி >  தந்தி.  தத்தி என்றால் தத்தித்தத்தி என்ற சொல்லுடன் இடிபாடுறுவதால், மெலித்துத் தந்தி எனப்பட்டது.  மேலும் இருபக்கமும் செய்தி தந்திடுதல் என்னும் குறிப்பையும் அகப்படுத்துவதாய்ச் சொல் அமைவுற்றது.

மேலும் தந்தி என்பது கம்பி  நரம்பு என்றும் பொருள்படுவதால் வெகுபொருத்தமாகிவிடுகிறது.

பல பொருத்தங்கள் அமைந்த சொல் இதுவாகும்.

திருமணத்துக்குப்  பொருத்தம் பார்ப்பதுபோல் சொல் அமைக்கவும் பொருத்தம் பார்த்து அமைத்தால்  நன்றாக இருக்குமே!  கடின ஒலிகள் வருமேல் மெல்லொலி  புகுத்தவேண்டும். நீட்டம் ஆகுமேல் சுருக்க வேண்டும். இப்படிப் பல தந்திரங்களைக் கையாளுங்கள்.






ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சிவஞான போதத்தின் 8ம் சூத்திரm

இப்போது சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரத்தையும்   சூத்திரத்தின் பொருளையும்  நோக்குவோம். பின்னர்  சற்று விரிவாக உணர்ந்து கொள்வோம்.

நூற்பா இது:

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

ஐம்புல வேடரின்  -   மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்  ஐந்து புலன்களாகிய வேட்டையாடுநரின் ;

அயர்ந்தனை வளர்ந்து என    -    ஒருங்கு இணைந்த  தொடர் இயக்கத்தினால்   சொந்த வடிவத்தையும் அதன்கண் உள்ள ஆன்மாவினையும் உணராமல் மயங்கி,      என்றபடியாக ;

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த   -   தமது முன் நிற்கும் ஆசிரியனாய்த்  தவநிலையில் நின்று தனக்குச்  சிறப்பு  அறிவு புகட்டவே;


 விட்டு  -  அவ் அறியாமையைக் களைந்து;

அன்னியம் இன்மையின்  ---சிவம் தன்னின் வேறானது அன்றென்னும்  ஞானம்  அடைந்ததனால் ;

அரன்கழல் செலுமே.   -     சிவத்துடன் ஒன்றுபடுவதாகும். ( சிவத்தின் திருவடிகளிற்  புகும் இறுதியுறுதி அடையும்  )

சிவத்துட் செல்லும் என்பது கவி நயத்துடன்  அரன்கழல் செலுமே எனப்பட்டது.

அன்னியம் என்பது முன் இவ் வலைப்பூவில் விளக்கப்பட்டுள்ளது.  அங்குக் காண்க,  மற்றும்  https://bishyamala.wordpress.com/2016/04/04/376/  என்ற வலைப்பூவிலும்  காணலாம்.