திங்கள், 29 பிப்ரவரி, 2016

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,!

மேலகம் என்ற சொல் இத்போது பெரிதும் வழங்குவதில்லை. இதற்குப் பதிலாக மோட்சம் என்ற சொல்லே பேச்சு வழக்கில் உள்ளது . எட்டாம் துக்கம், பதினாறாம் நாள் என்றெல்லாம் வருங் காலங்களில் மோட்சம் என்ற சொல் காதில் வந்து சேர்கிறது.

 மேல் என்ற சொல் மோள் என்று மலையாளத்தில் வழங்குகிறது. மோள்+ சு+ அம் என்ற விகுதிகள் இணைந்தால், மோட்சம் என்ற சொல் பிறக்கிறது. சு விகுதி பரிசு என்ற சொல்லில் இருக்கிறது,  அம் விகுதி பெறு பதங்கள் பற்பலவாம்.  அறம் என்ற சொல்லில் அறு+அம் என்ற இணைப்பில் நிறு நயம் செய்யப்பட்ட  ( நிறுவி நயம் ஆக்கப்பட்ட ) வாழ்க்கை விதிகள் என்ற சொற்பொருளமைப்பில் அம் வருகிறதன்றோ!. மலையாளப் பேச்சில் தோன்றிய  மோள்,  விண்கலம் செவ்வாயில் சென்றிறங்கினாற்போல யாண்டும் பரவி, தமிழில் தழைத்து, சமத்கிருதமொழியில் உழைத்து  மேலகம் எய்தியது வரவேற்கப்படவேண்டியதே ஆகும்.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

முந் நீர் - சமுத்திரம்.

சமுத்திரம்  என்ற சொல்லைச்  சில ஆண்டுகட்கு முன்னரே  ஓர்  இடுகையில் அணுக்கமாகக் கவனித்திருந்தேன்.   இது   எங்ஙனம் உருவானது என்று மீண்டும் சிந்திப்பது நல்லது.

அமை -   அமைத்தல்.

இது பின்    இன்னொரு சொல்லைப் பிறப்பித்தது.

அமைத்தல் -  சமைத்தல்.

 அகரம்  சகரமாய்த்  திரியம் .   அமண்  -   சமண் ,

அகபதி  (அகத்துப் பதிவாய் விளங்கும் இறைவன் )  -  சகபதி.

அகர வருக்கத்துப் பிற எழுத்துக்களும் இங்கனம் திரியும்.


உக > சுக > சுகம்     உகந்த நிலையே சுக நிலை..

முன் இடுகைகளில் தந்த எடுத்துக்காட்டுகள் அங்குக் காண்க.

சமைத்தல் என்பது  வேகவைத்தோ  பொரித்தோ  அல்லது  வேறு வகையிலோ சூட்டினால் உணவு உண்டாக்குதலைக் குறிக்கும் சொல்லாயிற்று.  நுண்பொருள்  வேறுபாட்டு  விரிவு  இது ஆகும்.

சமை என்ற சொல்லில் இருந்து  இந்தோ ஐரோப்பியத்துக்கு  சம் என்ற அடிச்சொல்  கிட்டியது.   சமை என்பதிலிருந்து  வினையாக்க விகுதியாகிய ஐ பிரிவுண்டு விடுமாயின்  மிச்சமிருப்பது சம் அன்றோ?

சீரகம்  சோம்பு     ஏனை   மசாலைப் பொருள்கள்  முதலிய  இட்டுக்  கறி சமைத்து  உண்டவர் தமிழர் . ஆகவே சமைத்தல் என்பதற்குப்   பல பொருள்களை ஒன்று சேர்த்துக் கூட்டுதல், என்ற  பொருள் அமைந்தது  பொருத்தமே. இப்பொருள் ஒரு பின்வரவு ஆகும்.  குழந்தை  சமைந்தது  என்ற வழக்கும் உள்ளது    சமைதல் - தன் வினை;  சமைத்தல் -  பிறவினை.

இனிச்  சமுத்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.  

இது முந்நீர் என்ற  தமிழ்ச்சொல்லைப் பின்பற்றியது.    சமுத்திரம்  என்பதன் பின்பகுதி முத்திரம்  -  இது உண்மையில் முத்திறம்  ஆகும். சம் என்பது ஒன்று சேர்தல், கூடுதல்;  (>  சமை).,  திரை (கடல்)  என்பதிலிருந்து  இந்தத் திரம்  வந்திருத்தல் கூடும் என்று  கூறுவர் சிலர்,

இங்ஙனம்  புதிய சொல் ஒன்று அமைக்கப்பட்டது.

முந் நீர்  -  சமுத்திரம்.

இப்போது முந்நீர் போல  சமுத்திரமும் பொதுவாகக் கடல் குறிக்கும் ,  மூன்று கடல் கூடுவதென்பது  சொல்லமைப்புப் பொருள் .  இப்போது அது  மங்கிவிட்டது.


முந் நீர்   -   முத்திறம் /      முத்திரம்
சம்  +  முத்திரம்  -   சம்முத்திரம் >   சமுத்திரம்

இப்படிச் சொற்களைப்  படைத்தவர்கள்  சிறந்த படைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. சொற்களின் படைப்பு வழிகளைக் கண்டின்புறும்  இவ்வேளையில்  அவர்களையும் பாராட்டுவோம்.


சி-போதம் 6ம் பாடல் பொருளுரை

http://sivamaalaa.blogspot.sg/2016/02/6.html     இங்கிருந்து தொடர்வோம்.

ஆறாம் பாடலை இங்கு நினைவு கூர்வோம்:


உணர் உரு  அசத்து எனின் உணராது இன்மையின்
இரு திறன் அல்லது  சிவ சத்து  ஆமென‌
இரண்டு வகையின் இசைக்குமன்  னுலகமே.



சிவஞானபோதம் 6ம் பாடல் பொருளுரை

மன்னுலகு ‍  =  இவ்வுலகத்துள் வாழ் மெய்யறிஞர்கள்; பெரியோர் ,
உணர் உருவெனின் ‍=  சுட்டி அறியத்தக்க வெளிப்பாடாயின்;
அசத்து =  ( சிவமானது )  அது இவ்வுலகமே என்று கூறுவார்கள்.
உணராதெனின் =   உணரப் படாததென்றால் அதாவது சுட்டி
அறியத்தக்க பொருளன்று சிவம் என்று கூறுவார்களாயின்;
இன்மையின் =  அச் சிவமானது சூன்யம் என்று கூறுவார்கள்;

இரு திறன் அல்லது =  இவ்விரண்டும் சிவம் அன்று.
அதாவது உலகமும் சிவம் அன்று; இன்மை எனும் சூன்யமும் சிவம் அன்று.

இரண்டு வகையின் இசைக்கும் =  இப்படி இரண்டு விதமாக
சிவத்தை அறிய ஏதுக்களைக் கூறுவார்கள் என்றபடி.

எதையாவது சுட்டிக்காட்டி ஒருவற்குச்  சிவத்தை அறிவிக்க வேண்டுமாயின் என்ன செய்யலாம்?  வேறுவழியில்லை. இவ்வுலகத்தைக் காட்டவேண்டும். உலகத்தைப் பார்,உலகம் இருக்கிறது; ஆகவே சிவம் உண்டு என்று அறிக எனலாம். ஆனால்
அதன்காரணமாக உலகமே சிவம் ஆகிவிடாது; உலகம் வேறு; சிவம் வேறு.  ஆகவே உலகம் அசத்து என்போம். உலகத்தைச் சுட்டலாம் ஆனால் அதுவே சிவம் அன்று.

உலகத்தைக் காட்டாமல் இன்மையைச் சுட்டலாம். படைத்தனவன்றி வேறொன்றுமற்ற அகண்ட ஆகாய வெளியின் சூன்யத்தைச் சுட்டலாம்;  ஆனால் அதுவும் அசத்து அன்றோ?  சிவத்தை அறிய அது ஒரு காரணமன்றி அதுவே சிவம் ஆகிவிடாது.

உலகமும் சடப்பொருள்; இன்மையும் சடப்பொருள். ஆகவே சிவமன்று, இரண்டும் அசத்து; சிவமே சத்து என்பதாம்.

1சத்து: இதை சத் சித் ஆனந்தம்; சச்சிதானந்தம் என்பர். உலகிற்கும் இன்மைக்கும் விலட்சணமாய் ‍  அதாவது விலக்கணமாய்;  விலக்குண்டு தனியே நிற்பதான  சிவமாகிய‌ ஒருமையாம். அதற்கு நிகர் அதுவே. அதையறியப்  பிற பொருள்கள் உதவலாமே அன்றி அவை அது ஆகிவிடமாட்டா ,.

விலக்கணம்  விலட்சணம் இவற்றின் விளக்கம் இங்கு அறிக:  http://sivamaalaa.blogspot.sg/2016/02/blog-post_26.html

உணராதெனின் :  உணராததெனின் என்று இயைத்துக் கொள்க. செய்யுளில் த மறைந்தது.  இப்படியே அல்லது என்ற சொல்லை அல்லாதது என்று விரித்துக்கொள்க‌. இதுவும் செய்யுளின் வடிவச்சொல் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------------------


1 சத்து - that which exists through all times, the imperishable.


அசத்து - of material or illusory nature. opposite of sattu. a matter of transitional form, perishable.