செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆதியந்தம்

இறை என்ற அடிச்சொல், இறைவன்,இறைவி, இறையன், இறையனார் என்ற வடிவங்களைப்  பிறப்பித்துள்ளது. இவை தாயும் பிள்ளைகளும் போலவே உள்ளன.

இறை என்பதற்கும் ஓர் அடிச்சொல் இருக்கிறது.  அது இறு என்பது. இதன்பொருள்  பொருள் என்ன?  இது பல்பொருளொரு சொல், பல பொருளுள்ளது. பல சொற்களையும் பிறப்பித்துள்ளது.

அவற்றுள் ஒன்றிரண்டையே இங்கு பேசுவோம்.

இறுதல் = முடிதல். இதிலிருந்து முடிதல் என்ற பொருள் உள்ள இறுதி என்ற சொல்லும் பிறக்கிறது.  இறுதிச்சுற்று,  இறுதி நபி,  இறுதியாய்விடுதல் என்று  முன் நீங்கள்  சொல்லாட்சியை எதிர்கொண்டிருக்கலாம்.

இறுத்தல்-  வரி முதலியன செலுத்துதல்.  இதிலிருந்து இறை = வரி என்ற பொருள்தரு வடிவமும் கிடைக்கின்றது.

இறு, இறை, இறைவன் :    இங்கு கண்ட பொருட்சாயல்களால்,  இறைவன் என்ற சொல்லையும் அறிஞர் பல்வேறு  கோணங்களிலிருந்து விளக்கினாலும்,  அவ்விளக்கங்கள் பிழைபடமாட்டா.

இறைவன்:  கடவுள் என்றும்  மன்னன் என்றும்  இடம்  நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.

கடவுள் என்ற பொருளில்  எல்லாவற்றுக்கும் இறுதி அவன் , ஆகவே இறைவன் என்று கொள்ள, சொல்லில் வசதி உள்ளது.

அந்தம் என்பது இறுதி குறிக்கிறது.

அவன் ஒருவனே இறுதியில் இருப்பவன்; இறுதியாகவும் இருப்பவன். இறுதியை  உண்டாக்குகிறவன்.  இங்ஙனம்  எண்ணங்களை விரித்துப் பொருளையும் விரிக்கலாம்.

ஆதியிலும் அவனே இருந்தான். அவன்முன் யாருமில்லை. எதுவுமில்லை. உலகம் ஆதல் பொழுதில் இருந்தமையினால் அவன் ஆதி ஆகிறான்.  உலகம் தொடங்கியதால், அது தொடங்கிய பொழுது அல்லது காலம்,   ஆதி ஆகிறது. பொழுது=  சிறியது. காலம்- நீண்டது. இவை சொற்பொருள்கள்.

எனவே, மெய்யறிஞர்கட்கு   (religious  philosophers) ,  ஆதியுமவன்; அந்தமும் அவன்.

சிவஞான ;போதம் என்ற நூல், அவனை ஆதியந்தம் என்றே குறிக்கிறது.

ஆதி, அந்தம் என்பன காலப்பெயர்கள்.   இவற்றை ஒன்றாகவோ சேர்த்தோ கடவுள் என்ற பொருளில் வழங்கினால், இலக்கணப்படி அது கால ஆகு பெயர் ஆகிறது.

சிவஞான போதப் பாடலை இங்கு காணலாம்:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

திங்கள், 26 அக்டோபர், 2015

அவன் அவள் அது

செகம் என்ற சொல்லை ஆய்ந்த போது http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
நாம் உலகம் அழிதலையும் மீண்டும் ஆவதையும் உடையது என்ற கருத்தினடிப்படையில்  அச்சொல்  உருவானது என்று கண்டோம். ஜகம் என்ற ஒலியொப்புமை உடைய சொல்லையும் உடன் கண்டு அதன் வேறு அடிச்சொல்லையும் கண்டுகொண்டோம்.

உலகம் அழிதலும் ஆவதும் உடையதென்பதற்குச் சிவஞான போதத்திலிருந்து  ஓர்  ஆதாரத்தை இப்போது பார்ப்போம்;

அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோன்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதா(கு)ம்;
அந்தம் ஆதி என்மனார் புலவர்.       (1)

இதன் பொருள்:

அவன் அவள் =  ஆடவர் பெண்டிர் என்பாரும்,
அது =  ஏனை உயிர் உடையனவும் இல்லாதனவும் ஆகிய பொருள்களும்,
மூ வினைமையின் =  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இறைவனின் செய்கைகளின் பயனாக;
தோன்றிய திதியே =  உருவான  அந்த நிலையே;
ஒடுங்கி -   பின் அழிவு அடைந்து,
மலத்து  =  -  கரும வினையின் காரணமாக;
உளது =  மீண்டும் தோன்றுவது;
ஆகும்= இதுவே  நடக்கிறது;
அந்தம் ஆதி =  முடிவிலும் முதலிலும் ( உள்ளவன்  இறைவன்,  அவனால்தான்.)

இனி,  வினைமை, திதி, ஒடுங்குதல் ஆகியவற்றை அடுத்த இடுகையில் கவனிப்போம்.

சனி, 24 அக்டோபர், 2015

ஜகம் etc & உலகம்

பகவொட்டுச் சொற்கள்.

ஒரு சொல்லின் ஒரு பகுதியையும் இன்னொரு சொல்லின் ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய சொல்லை உருவாக்கு முறை  பல மொழிகளில் காணப்படுகிறது. இத்தகைய  சொற்களைக் காணும்போது அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில்  இதற்கு  "portmanteau"  என்பர்.

ஆங்கிலத்தில்  brunch  (breakfast + lunch     )  என்ற சொல்லை ஓர்    உதாரணமாகச் சொல்லலாம்.
sheeple   -   என்பதும் அன்னது.2 (people who are sheep-like followers)   (மந்தை  ஆடுகள் மக்கள்  என்பது)

இன்னொன்று:    (mo) tor +  ho (tel )   =  motel. 

உலகம்:

இச்சொல்லிலிருந்து புனையப்பெற்றவை:-

இ = இந்த.
கம் =   உலகம்.
இ+கம் =  இகம்  -   இந்த உலகம்.

எடுத்துகாட்டுச்  சொற்றொடர்  :  இக பரம்.  

செகுத்தல் = அழித்தல்..
ஒவ்வோர் ஊழியிலும் உலகம் அழிந்து புத்துலகம் மலர்வதாகச் சொல்லப்படும். ஆகவே  இது குறிக்கும் சொல் தேவையாயிற்று. 

இங்குள்ள விளக்கத்தையும்  நோக்குக:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html 


 செகு  = அழி(த் )தல்.
கம்  =உலகம்.
செகு+ கம் =  செகம்.  இதில் புணர்ச்சியில் குகரம் மறைந்தது.: 
செகம் =   அழித்து உருவாகும் இவ்வுலகம்.

(மக + கள்  =மக்கள்  என்பதில்  ஒரு க  மறைந்தது போல   செகு  +  கம் =  செகம்  என்பதில்  ஒரு கு  மறைந்தது,  )

மா -  பெரிது.
கம் -  (உல)கம்.
மாகம் :  விரிந்த விண்வெளி 1 .


mAkam. upper space; . sky, air, atmosphere;  svarga;  cloud

சமத்கிருதப் புனைவு:

ஜ -  பிறந்தது,
கம் -  உலகம்.
ஜகம் :  உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:

1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம்.  மா - பெரியது;  கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல்.  ஆக மாகம் ஆகிறது.  பெரிதான உலகம். இன்னும் பல பொருள்.  யாவும் பெரியவை.  மக + அம் =  மாகம்,  முதனிலை நீண்ட,   விகுதி பெற்ற சொல் எனினுமாம்.