சனி, 22 ஆகஸ்ட், 2015

புறங்காத்துக் கொள்வார்


பலமுறைகள் தலையமைச்சாய் இருந்து பட்ட
பல்வேறு பெற்றறிவும்   பைக்குள் பொங்க
நலமுறையும் வழிகாட்ட வந்த செம்மல்
நல்லவிக்கி ரமசிங்கர் பதவி ஏற்றார்
கொலைமுறையும் ஊழலுமே கூடி விஞ்சும்
குற்றதிபன் முன்னாள்பக் சேயின் பக்கம்
கலையரசின் இயல்நோக்கிக் கனிவு காட்டும்
காலம்தம் புறங்காத்துக் கொள்வார் காண்பீர்.


பட்ட :  இங்கு  இனிமையற்ற  அனுபவங்களைக் குறிக்க,  "பட்ட " என்ற சொல் வருகிறது. 
பெற்றறிவு:     பெற்ற  அறிவு.    அனுபவம்,   தமக்கு  துன்பமானவை  உள்ளிட்ட 
அனுபவங்கள்.

பைக்குள்   பொ ங்க  :  தாம் சேர்த்துவைத்தவற்றுள்   மிகுந்து நிற்க. 

நலமுறையும்:   நலம் உறையும் .     நன்மையே  உள்ளில்  காணப்படும் 

கூடி =  கலந்து. .

விஞ்சி  நிற்க :   மிகுந்து நிற்க.

குற்றதிபன் :   சிறுமை  உடைய    அரசுத் தலைவன் .

கலை அரசின் இயல்  =    அரசியற் கலையின்  இலக்கணம்    -   கலை அரசின்  என்பதை  கலையாகிய  அரசின்  ( இயல்)   என்று விரிக்க. .

நோக்கி :  கடைப்பிடித்து.

கனிவு காட்டும்:    (இப்போது  விக்கிரம சிங்கே இரக்கம்  காட்டுவதைக்  குறிக்கும்.)

காலம்:  இக்காலத்தில்.

புறம்  காத்து  (தம்)  முதுகைக் காத்து ........

என்றவாறு.
  

Marriage prayers answered..............

இது சுமங்கலிப் பூசை என்ற தலைப்பிட்ட இடுகையுடன் தொடர்பு 
உடையது . ஆனால் காணாமற்போய் இப்போது கிடைத்துள்ளது. படித்து மகிழுங்கள் .

ஆண்டுபல மன்றல் அணுகா திருந்தோரும்
வேண்டுதலில் துர்க்கைகால் வீழ்ந்துதொட-----கூண்டு
திறந்தன்ன வாழ்வாய்ப்புத்  தேடிவர  வானி ற்
பறந்தன்ன  கொண்டார் உவப்பு,

 மன்றல்  :   திருமணம்
திறந்தன்ன :  திறந்ததுபோல்
பறந்தன்ன   :  பறந்ததுபோல்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சிப்பந்தி. = வேலைக்காரர்

விருந்தினர், அல்லது முதன்மைச் சிறப்புடையோர் அமர்ந்து உண்டபின்பு,  அந்த விருந்தில் உதவியாகப் பணிபுரிந்தவ்ர்கள் சிலருக்குத் தனியாக ஓர் உணவு வரிசை  நடைபெறும்.

அது சிறுபந்தி ஆகும்.  

சிறு என்பதன் அடிச்சொல் சில் என்பது.

சில் > சிலர்.
சில் > சிறு.
சில்>  சில்லறை  (சில்+அறு+ ஐ)
சில்+ நாள் > சின்னாள்  ( சில நாட்கள்)

என்ற அமைப்புகள் ஆய்வுக்குரியன.

சிறுபந்தி > சிற்பந்தி > சிப்பந்தி.

பின் நடைபெறும் சிறிய பந்திகளில் பங்குபெறும் வேலைக்காரர்களை இது பின்னர் குறித்தது.