திங்கள், 18 மே, 2015

thiAvuthal திராவுதல்

மடைப்பள்ளியில்  ஒருவர் மற்றவரிடம், "குழம்பைக்  கொஞ்சம் "திராவி"  விடு  என்றார்.  எனவே  எனக்குத் தெரியாத இந்தச் சொல்லை அகரவரிசைகளில் தேடினேன். திராவுதல் என்ற வினைச் சொல் கிடைக்கவில்லை.

இன்றைய நிலையில்,  அகரவரிசை என்பவை பெரும்பாலும்  பகர்ப்புகளே .(copies)  நிகண்டுகளிலோ முன் வெளியிடப் பட்ட அகரவரிசைகளிலோ இடம்பெறாத புதியவாகக் கேட்ட  சொற்களைத்  தேடிப் பிடித்துச்   சேர்ப்பது  அரிதேயாம்.

இப்போது வெளிவந்துள்ளவற்றில் இங்ஙனம் கண்டெடுத்துச் சேர்க்கப் பட்டனவாகக்  குறிக்கப்பட்ட சொற்கள்  எவற்றையும் காண முடியவில்லை.

வட்டாரப் பேச்சுகளில் திரிந்து வழங்கும்  சொற்களைச்  சில கல்லூரி ஆசிரியர்கள் திரட்டிப் பதிப்பித்துள்ளனர்.  இவற்றைக் கிளைமொழிச் சொற்கள் என்றனர். இத்திறத்தன சீரிய முயற்சிகளென்போம்.

திராவுதல் என்பது அகப்பையினால் குழம்பையோ அல்லது வேறு கீரைச்சாறு போன்றவற்றையோ சுற்றிக் கிண்டிவிடுதல் என்று தெரிகிறது.
திருப்பு,  திருகு,  திறம்பு, என்பவற்றுடன் இச்சொல் தொடர்பு பட்டதாகவே தோன்றுவதாலும், வேறுபாடு நுண்ணிதாகவே திகழ்வதாலும், இச்சொல் இருந்தது,   ஆனால்  அகராதிகளில் அகப்படாமல்  போயிற்று என்று முடித்தலே பொருத்தம் உடையதாம்.


சனி, 16 மே, 2015

கத்தரிக்கோல்

ஒரு துணியையோ அல்லது வேறுபொருளையோ  கடித்து,  வேறு உருவோ அளவோ கொள்ளும்படி செய்வதற்குக் கத்திரிக்கோல் உதவுகிறது,   இரு வெட்டுக் கோல்கள்  ஒரு தலை இணைப்பைப் பெற்று கைவிரல்களுக்குள்  மாட்டுதல் பெற்று வெட்டும் பொருளைக் கடித்தல் போல் வெட்டுவது கத்திரிக்கோல் ஆகும்,  ஆங்கிலத்தில் "a pair of scissors"   -  வெட்டு இணைகோல்கள் எனப்படும் இது  தமிழில் கத்திரிக்கோல் என்று ஒருமையில் சொல்லப்படுவது ஆகும்.

கடித்து  உருவை அல்லது அளவைத் திரிப்பதால் அதாவது மாற்றுவதால் அது கடித்திரி ஆயிற்று  பின் அது  நடுவில் உள்ள  "டி"யை இழந்து  கத்திரி ஆனது

கடித்தல் என்பது வெட்டுதல் குறிக்கும் என்றார் அறிஞர்  கால்டுவெல்..   இது கத்திரி எனப்பட்டது  ஓர் இடைக்குறை , கத்திரி -  கத்தரி . --- கத்தரிக்கோல்

சப்பாத்து கடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக

கடித்து அரி  என்பது கடித்தரி >  கத்தரி  என்றாயதெனினும் ஏற்புடைத்தே.
இந்த  "அரி "  என்னும் சொல் அரிவாள்  என்ற பதத்தில் உள்ள "அரி "  என்பதுதான் .  கடிப்பதும் வெட்டுவதுதான்.  பின் அரிதல் என்பதும் வெட்டுவதுதான்;   இஃது கூறியது கூறலாகாதோ எனின் , ஆகாது;  வெட்டுவது  ஒன்றிரண்டாய் வெட்டுதல் என்றும்  அரிதல் எனற்பாலது மிகச் சிறியனவாய் நுணுக்கித்  துணித்தல் என்றும் வேறுபடுத்திக் கொளலாகும்.  இதிற் பொருளமைதி காணார் கடித்திரி >  கத்திரி  >  கத்தரி எனக் கோடல் நன்று.

மொழி பொருட் காரணம்  விழிப்பத் தோன்றா  என்ற  தொல்லாசிரியர் தொல்காப்பியனார்  அறிவுரை காணின்,  இங்ஙனம்  இருவேறு வகையிலும் கூறியுள்ளதனை  வரவேற்பர் என்பதெம்  துணிபு.

----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

கடித்திரி >> கத்தரி  என்பதனை  மாதிரி என்பதனோடு ஒப்பு நோக்குக.   மா:  அளவு. திரி= திரித்தல், அமைத்தல்.  இன்னொன்றன்  அளவுக்கு அமைத்தல் " மாதிரி:."   இது பிறரும் கூறினர் .    We are here adverting to the common ending in these words: "thiri".





வியாழன், 14 மே, 2015

the religion named HiNDU

ஐயப்பாட்டுக்கு இடமின்றி சிந்து என்பது தமிழ்ச் சொல்தான்.
இது ஒரு சிறிய நூலால் ஆன துணி வகைக்கு சிந்துச் சமவெளி மக்களிடையே பெயராய் வழங்கிப் பின் அங்கு ஓடும் ஆற்றுக்கும் பெயராகி அதன்பின் ஆற்றுக்கு அப்பால் உள்ள பாரசீக நிலப் பகுதியையும் அடைந்து பின் அவண் வாழ்ந்தோரின் மொழி இயல்புகளின்படியே ஹிந்து என்று மாறிப் பின் மீண்டும் இந்தியப் பகுதிக்கே வந்து இந்து என்னும் சமயத்துக்கும் பெயராயிற்று எனல் சரியான கருத்தாகும். அப்பாத்துரைப் பிள்ளை அவர்களும் பி டி சீனவாச ஐயங்காரை மேற்கோளாகக் காட்டி இதை ஒப்புக்கொள்கின்றார்.  இந்தச் சுருக்குரையில்  கால ஓட்டத்தையும் விரிவினையும்  நாம் கணக்கில் கொள்ளவில்லை.

சாதிகள் முதலியன இருப்பதால் சிலருக்கு இந்து மதத்தைப் பிடிக்கவில்லை. அதனால் இந்து என்ற சொல்லின்மீதும் வெறுப்பு உண்டானவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். இவர்களை நாம் புரிந்து கொன்டாலும் இதற்கு நாம் யாது செய்யலாம்?  மக்கள் மனத்தில் இருக்கும் இதற்கு மக்கள் திருந்தினாலன்றி மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை,
சாதிக் கோட்பாடானது இந்தியர்களை இறுகப் பற்றியுள்ளது என்று மாண்புடைய தலைவர் லீ குவ்ஆன் யூ கூறியது உண்மை.
சாதி ஏதுமற்ற சீனாவிடம் இந்தியா என்றும் சமனிலையில் நிற்பது அரிது.

இப்போது சிந்து என்ற சொல்லைப் பார்ப்போம்.

சில் > சின் > சிந்து. 
சின்ன அல்லது சிறிய நூலால் ஆன  துணிவகை.  அதன் வணிகம் நிகழ்ந்த ஆற்றினதும் அடுத்திருந்த நிலத்தினதும் பெயர்.
ஒப்பு  நோக்குக:

முல்  >  முன் 
முல்  > முலை  (முன்னிருப்பது)
முல்  >  மூல் >  மூலம் that which is in "front" in terms of  occurrence, commencement ,  place and time.
முல்  > மூல்  >  மூலிகை.  
முல் > முன்>  முன் + து  >  முந்து. (வினைச்சொல்.)
At this stage, .cf the formation of the word Sinthu.  Then you can appreciate.   

சிந்து :  சிந்து கவி.  சிந்து அடி  அதாவது குறளடிக்கு மிக்கும் அளவடிக்குக் குறைந்தும் வரும் அடி. தமிழ் யாப்பிலக்கணக் குறியீடு ஆகும்.  

சிந்து: அளவடிக்குச் சிறியது.

பைரவியின் சற்று வேறுபட்ட ஒரு ராகம்; சிந்து பைரவி

இன்னும் பல உள.

சிந்து என்பதன் சொல்லமைப்புப் பொருள்களின் உட்கருத்து: சிறுமை ஆகும்.

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்ற வரியும் காண்க   இது வேறு பொருளுடைத்தாம் .

இந்து : இது சிந்து என்பதன் அயல் நாட்டுத் திரிபு.

சிந்து நாகரிகம் திராவிட நாகரிகம் என்னும்போது சிந்து என்பது ஏன் தமிழாக இருக்கக் கூடாது?

இதை முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்..



Originally  submitted in Roman fonts  and now converted.  

will edit  Posted in English fonts to deny virus or third party intervention
  to prevent data loss