"ஆரியன்" --- சொல்லும் தேவ நேயப்பாவாணரும்,
பிறரால் செய்து முடிக்கவியலாத, மற்றும் இயல்பானவற்றுள் அடங்காமல் அவற்றின் மேம்பட்டவற்றைச் செய்துமுடிப்பவரே பெரியவராவார். இச் செயல்களை வள்ளுவனார் " செயற்கு அரியவை: என்று குறளிற் குறிக்கின்றார்.
அரு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே அரிய என்ற எச்சச்சொல். அரு+ இய = அரிய..
அரு+ து = அரிது; உண்மையில் இது அரு+(இ) து என்பதே.
அர் + உ + இ + து = (இதில் உகரம் கெட்டு) அர் + இ + து என்றாகி,
அரிது ஆனது. இதிலுள்ள இது என்பதை அஃறிணைச் சுட்டாகக் கொள்ளமல் இ என்பது தனியாகத் தோன்றியது என்று தமிழ்ப்புலவர் விளக்கினாலும், நீங்கள் கேட்டின்புறலாம். அதில் ஒன்றுமில்லை.
அரு என்பது வருமொழி முதலில் உயிர் வரின், ஆர் என்று திரியும்.
அரு+ உயிர் = ஆருயிர்.
புணர்ச்சியில் அரு என்பது ஆர் என்று திரியும். இது உங்கட்குத் தெரியும்.
ஆனால் புணர்ச்சியில் இல்லாமல் தானேயும் திரியும் என்பதை தேவ நேயப்பாவாணர் எடுத்துக்காட்டியுள்ளார்.
"ஆரி யாகமம் சாந்தத் தளித்தபின்" என்று சீவக சிந்தாமணியில் வருகின்றது. (சீவக. 129).
இங்கு அரு என்பது ஆரி என்று திரிந்தது. அரு= மேன்மை; ஆரி = மேன்மை, அரியது ஆரி -- அரு என்பதிலிருந்து அமைந்த தனிச் சொல் எனினுமாம். .
பத்துப்பாட்டுகளில் ஒன்றாகிய மலைபடு கடாத்திலும், அரு எனற்பாலது ஆரி யென்றாகும்.
ஆரிப் படுகர் ( மலைப.. 161)
அரியராகிய படுகர் என்பது.
படுகர் என்பார் ஓர் உழவுத் தொழில் தொடர்புடைய வகுப்பினர் என்று
தெரிகிறது. படுகர் என்பது விளை நிலங்களையும் குறிக்கும். படுகை = பள்ளம் என்பதும் ஆகும்.
இந்த ஆரி என்ற சொல்லே அன் என்ற ஈறு பெற்று ஆரியன் என்று வந்ததென்கிறார் பாவாணர்..
ஏர் என்ற சொல் மேலை மொழிகளில் ஆரென்றும் திரிந்துள்ளது. எடுத்துக்காட்டு: English: arable, vide its Indo European forms.
Gk: aristos. meaning "noble".
ஏர் வேறு; அரு > ஆர் வேறு என்பர்.
அறி என்பதற்கும் ஆரி என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்து பாருங்கள்.
--------------------------------------------------------------
Footnote:
வடமொழி வரலாறு: 1 பக் . 24 தேவ நே . (இளவழகன் பதிப்பு).
பார்வை இட்ட நாள்: 7.12.2015