இந்திரன் என்பவன் இயற்றியதே ஐந்திரம் என்று கூறுவாருண்டு. இந்திரனைப் பற்றிய கதைகளை நோக்கும்போது, அவன் இலக்கண நூல் வரைந்தான் என்று சொல்வது நம்பத் தகுந்ததாய் இல்லை. காரணம், இந்திரன் வானுறை தெய்வம், தேவர்களின் தலைவன், தானைத்தலைவன், மழைக்கடவுள் என்றெல்லாம் சொல்லப்படுவதுதான்.
இவ்வளவு வேலைகளையும் கவனித்த இந்திரன், மொழிக்கு இலக்கணம் இயற்ற நேரமும் வாய்ப்பும் உண்டாகியிருக்கமாட்டா. இந்திர என்ற பெயருடன் ஐந்திர என்பது ஒலித்தொடர்பு உடையதுபோல் செவிப்படுவதே இந்தக் கதை எழுவதற்குக் காரணம் என்னலாம். இதைச் சிலர் வரலாறுபோல் சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கை ஆகும். மேலும் சமஸ்கிருதத்துக்கு முற்காலத்தில் எழுத்துக்கள் இல்லை1. வேற்று எழுத்துக்களால் பின் அது எழுதப்பட்டது. "எழுதாக் கிளவி" என்ற சங்க இலக்கியத் தொடர், சமஸ்கிருதத்தைக் குறிக்கும்.
எழுத்து, சொல்,பொருள் , யாப்பு அணி என்ற ஐந்து இலக்கணம் தாம்
"ஐந்திறம்" எனப்பட்டது. பண்டைக் காலத்தில், திறம் என்பது பிற சொல்லுடன் கூடிவருங்கால் "திரம்" என்று எழுதப்பட்டது என்று தெரிகிறது. திறம் என்பது விகுதியாகும் போதும், "திரம்" என்றே வரும். தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும். திறமும் அத்தகையதொன்று என்று தெரிகிறது. பாணிணியம் என்ற வடமொழி இலக்கணம், எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டையே கூறும். தொல்காப்பியம் ஐந்திலக்கணமும் கூறுகிறது.
எனவே ஐந்திறம் ஐந்திரம் என்பது ஐந்து இலக்கணம் என்பது குறித்ததாகலாம். இவ்வைந்து இயல்களிலும் தொல்காப்பியர் வல்லுநர் என்பதே "ஐந்திரம் நிறைந்த" தொல்காப்பியன் என்பதன் பொருள் என்று கூறுக.
வட நூல்களில் ஐந்திரம் பற்றிய கதைகள் தொல்காப்பியப் பாயிரம் கண்டு எழுந்தவை ஆதல் தெளிவு, வடமொழி இலக்கணம் என்பது பாணினி பாடியது மட்டுமே. இப்புலவர் ஒரு பாணர் என்பது தெளிவு. பாண் + இன்+ இ =பாணினி, பாணன் பாடியது என்பதாம்.
1 மேலும் படிக்க: John Kay's History of India
மேற்கோளாய்க் காட்ட இயலவில்லை. This is suggested for further reading.
குறிப்பு: சமஸ்கிருதத்துக்கு எழுத்தமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர். மந்திரக் குரல், ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக. எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது. வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது. சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக. சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள . மண்டரின் எழுத்து மொழி இதை விரிவடையாமல் நிலைப்படுத்தியது (18.11.2019)..